×

நாகர்கோவில் ஒழுகினசேரியில் ஆய்வு கலைவாணர் குடும்பத்தினருக்கு உதவி செய்வதாக மேயர் உறுதி வீட்டு சுவரில் வளர்ந்துள்ள செடிகளை அகற்ற நடவடிக்கை

நாகர்கோவில், ஆக.5 : கலைவாணர் என்.எஸ்.கே. குடும்பத்தினரை சந்தித்து தேவையான உதவிகள் செய்து தரப்படும் என மேயர் மகேஷ் கூறினார். சினிமாவில் நகைச்சுவை மூலம் சமூக சீர்த்திருத்தங்களை ஏற்படுத்தி, பொதுமக்களை சிந்திக்க வைத்தவர் என்.எஸ். கிருஷ்ணன். இவரை கலைவாணர் என்று அழைப்பார்கள். என்.எஸ்.கிருஷ்ணன் வீடு, நாகர்கோவில் ஒழுகினசேரி பழையாற்றுக்கு செல்லும் வழியில் அமைந்துள்ளது. 1941ல் இந்த வீடு கட்டப்பட்டுள்ளது. இந்த வீட்டுக்கு திருவிதாங்கூர் மன்னர்கள் முதல் அரசியல் கட்சி தலைவர்கள் வரை வந்துள்ளனர். இந்த வீட்டை பார்ப்பதற்காகவே அந்த காலத்தில் கிராமங்களில் இருந்து மக்கள் வந்து சென்றுள்ளனர். புகழின் உச்சத்தில் இருந்த கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் வாழ்ந்த வீடு தற்போது மிகவும் பாழடைந்து, மிக மோசமான கட்டத்தில் உள்ளது.

இந்த நிலையில் நேற்று ஒழுகினசேரி பழையாற்று ஆறாட்டு படித்துறைக்கு ஆய்வுக்கு சென்ற மாநகராட்சி மேயர் மகேஷ் மறைந்த கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் இல்லத்துக்கும் சென்றார். அந்த இல்லத்தில் தற்போது என்.எஸ். கிருஷ்ணனின் குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். வீட்டின் கட்டிடத்தில் மரங்கள் வளர்ந்து கட்டிடம் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதை பார்த்ததும் மேயர் மகேஷ் அதிர்ச்சி அடைந்தார். அங்கு வசிக்கும் என்.எஸ். கிருஷ்ணன் குடும்பத்தினரை சந்தித்து பேசினார். அப்போது அவர்கள் தாங்கள் மிகவும் ஏழ்மை நிலையில் வசித்து வருவது குறித்து கூறினர்.

இதையடுத்து அவர்களுக்கு தேவையான உதவிகளை தனிப்பட்ட முறையில் செய்து தருவதாகவும், கட்டிடத்தில் வளர்ந்துள்ள மரங்களை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுப்பதாகவும் மேயர் மகேஷ் உறுதி அளித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், என்.எஸ். கிருஷ்ணன் புகழ் காலத்துக்கும் அழியாது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞருடன் மிகவும் நெருக்கமாக என்.எஸ். கிருஷ்ணன் இருந்தார். திமுகவின் பலமாக என்.எஸ். கிருஷ்ணன் விளங்கியவர். அவர் வாழ்ந்த வீடு தற்போது மோசமான நிலையில் உள்ளது. புனரமைப்பு செய்ய கூட முடியாத நிலையில் வீடு இருக்கிறது. கட்டிடத்தில் வளர்ந்துள்ள மரங்களை மட்டும், கட்டிடத்துக்கு ஆபத்து இல்லாத வகையில் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். என்.எஸ். கிருஷ்ணனின் குடும்பத்துக்கு தேவையான உதவிகளை தனிப்பட்ட முறையில் நான் செய்து கொடுப்பேன். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கும் இதனை கொண்டு சென்று, குடும்பத்துக்கு தேவையான உதவிகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

The post நாகர்கோவில் ஒழுகினசேரியில் ஆய்வு கலைவாணர் குடும்பத்தினருக்கு உதவி செய்வதாக மேயர் உறுதி வீட்டு சுவரில் வளர்ந்துள்ள செடிகளை அகற்ற நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Nagercoil Olukinassery ,Kalaiwanar ,Nagercoil ,Kalaivanar ,NSK ,Mayor ,Mahesh ,Oglukinassery ,Dinakaran ,
× RELATED கொளுத்தும் கோடை வெயில்; முக்கடல் அணை நீர்மட்டம் 0.9 அடியாக சரிந்தது