×

போலீஸ் என மிரட்டி தனியார் கல்லூரியில் சீட் கேட்டவர் கைது: போலீசார் விசாரணை

சென்னை: தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அடுத்த துறிஞ்சிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அப்துல் முகீத் (23), டிப்ளமோ படித்துள்ள இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு உதவி ஆய்வாளர் பணிக்கான தேர்வு எழுதியதாக கூறப்படுகிறது. அதில் தோல்வியுற்ற நிலையில், தனது தாய், தந்தை, உறவினர்கள், ஊர் மக்கள் என அனைவரிடமும், காவலர் தேர்வில் தகுதி பெற்று சென்னை கோயம்பேட்டில் உள்ள காவல் நிலையத்தில் பணியாற்றி வருவதாக கூறி சென்றுள்ளார். தொடர்ந்து போலீஸ் உடையில் ஊர் முழுவதும் சுற்றி திரிந்து வந்துள்ளார். இதனிடையே நேற்று காலை பொத்தேரியில் உள்ள பிரபல தனியார் கல்லூரிக்கு போலீஸ் சீருடையில் சென்ற இவர், தனக்கு கல்லூரியில் எம்.டெக் படிப்பதற்காக அட்மிஷன் தர வேண்டும் எனவும், அதிலும் ஸ்காலர்ஷிப் வேண்டும் என கூறி உள்ளார்.

சந்தேகமடைந்த கல்லூரி நிர்வாகத்தினர் அவரிடம் காவலருக்கான அடையாள அட்டையை கேட்ட போது, போலி அடையாள அட்டையை காண்பித்து உள்ளார்.‌ அதில் ஏகப்பட்ட குளறுபடிகள் இருந்ததால் சந்தேகமடைந்த கல்லூரி ஊழியர்கள் மறைமலைநகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிய படுத்தினர். அதன்பேரில், கல்லூரிக்கு வந்த போலீசார் அவரிடம் தங்களது பாணியில் விசாரணை நடத்தினர். அப்போது காவலர் என பொய் சொல்லி கல்லூரி நிர்வாகத்திடம் அட்மிஷன் கேட்டு மிரட்டியது தெரியவந்தது.‌ தொடர்ந்து அவரை காவல் நிலையம் அழைத்து சென்ற போலீசார் வேறு எங்கேனும் இது போன்று கைவரிசை காட்டினாரா, என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post போலீஸ் என மிரட்டி தனியார் கல்லூரியில் சீட் கேட்டவர் கைது: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Abdul Mukeeth ,Durinchipatti ,Bommidi ,Dharmapuri district ,
× RELATED மாட்டு தொழுவங்களுக்கு இனி லைசென்ஸ் வாங்க வேண்டும்