×

சென்னை அருகே வானில் பறக்கும் தட்டுகள்? நம்ப வேண்டாம் என விஞ்ஞானிகள் கருத்து

சென்னையில் பறக்கும் தட்டுகள் தென்படுவதாக கூறப்படும் நிலையில், அது வேற்றுகிரகவாசிகளின் அடையாளமா என மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர். அதனை நம்ப வேண்டாம் என விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த உலகத்தில் பல விஷயங்கள் நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றன. அதில் சில விஷயங்களை சில மனிதர்கள் நம்புவதில்லை. ஆனால் சிலர் நம்பாத விஷயங்களை பலபேர் நம்பி அதனை செயல்படுத்தி வருகின்றனர். அதற்கு உதாரணம் கடவுள். இருக்கிறாரா இல்லையா என பெரும் விவாதம் வைத்து கடவுள் குறித்து இரு தரப்பினர் பேசி வந்தாலும், ஒரு தரப்பினர் கோயில் கோயிலாகச் சென்று தங்களது பக்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். இதுபோன்ற பல உதாரணங்கள் இந்த உலகில் உள்ளன. அந்த வகையில் இயற்கையை சார்ந்த சில விஷயங்கள் இன்னும் விஞ்ஞானிகளுக்கு சவாலாக உள்ளன. இந்த உலகமே அமானுஷ்யங்கள் நிறைந்த ஒரு பொருள் என சிலர் தங்களது அனுபவங்களை புத்தகங்களாகவும், காட்சிப் பொருளாகவும் விட்டுவிட்டுச் சென்றுள்ளனர். ஒவ்வொரு விஷயத்தையும் எடுத்து ஆராய்ந்தால் ஒரு தரப்பினர் அதை உண்மை என்றும், மறு தரப்பினர் அதனை பொய் என்றும் கூறுவர். தக்க ஆதாரங்கள் முழுமையாக கிடைக்காதவரை அறிவியல் உலகமும் அதனை ஏற்றுக் கொள்ளாது. இதற்கு பறக்கும் தட்டுகளும் ஒரு விதிவிலக்கல்ல. உலகில் அவ்வப்போது பலர் இதனை பார்த்துள்ளதாக கூறுகின்றனர்.

பறக்கும் தட்டு என்றால் என்ன? வானத்தில் தட்டு வடிவ உடலைக் கொண்ட ஒரு வகை உருவம் தென்படும். இதனை காலப்போக்கில் பறக்கும் தட்டு எனக் கூறி வந்தனர். 1878ல் ஜான் மார்டின் என்ற ஒரு விவசாயி பலூன் போன்று பெரிதாக இருந்த வட்டமான பொருள் ஒன்றை கண்டதாகவும், அது அசுர வேகத்தில் பறப்பதை பார்த்ததாகவும் கூறியிருந்தார். இதனை பல்வேறு ஆய்வுகளில் ஆராய்ச்சியாளர்கள் தெரியப்படுத்தி உள்ளனர். அந்த காலகட்டத்தில் இதற்கு பறக்கும் தட்டு என பெயரிடப்படவில்லை. அடையாளம் தெரியாத பறக்கும் பொருளுக்கு பறக்கும் தட்டு என்ற சொல் பிற்காலத்தில் வைக்கப்பட்டது. 1930ம் ஆண்டு டெக்சாஸ் மாகாணத்தின் மீது விழுந்த ஒரு அதிசயமான பொருளை பலரும் பார்த்துள்ளனர். அதனை சிலர் விண்கலம் என்றும், சிலர் பறக்கும் தட்டு என்றும் விவரித்துள்ளனர். 1947ல் அமெரிக்க செய்தித்தாள்களில் பறக்கும் தட்டு என்ற வார்த்தை பிரபலபடுத்தப்பட்டது. அமெரிக்காவைச் சேர்ந்த பலர் டிஸ்க் அல்லது பை ப்ளட் போன்ற ஒரு பொருளை பார்த்ததாகவும், அது தண்ணீரை தாண்டி செல்லும் தட்டுகளைப் போல இருந்தது என்றும் கூறியிருந்தனர்.

இதையெல்லாம் வைத்து ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து தங்களது ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர். ஒரு சாரார் இதனை அறிவியல் சார்ந்த கதைகள் என்றும் இதனைப் பற்றி பெரிதாக நம்ப வேண்டாம் எனவும் கூறி வந்தனர். உலகம் முழுவதிலும் ஏலியன்ஸ் என்று அழைக்கப்படும் வேற்றுக்கிரக வாசிகள் பற்றி பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக அமெரிக்கா இந்த ஆராய்ச்சியில் வெளிப்படையாகவே ஈடுபட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட அங்குள்ள நாடாளுமன்றத்தில் அந்த நாட்டின் முன்னாள் ராணுவ அதிகாரி ஒருவர் இது தொடர்பாக பரபரப்பான கருத்துகளை தெரிவித்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சென்னைவாசிகள் இதுபற்றி அதிகமாக பேசத் தொடங்கியுள்ளனர் இதற்குக் காரணம் சென்னை அடுத்த முட்டுக்காடு கடல் பகுதியில் கடந்த 26ந் தேதி மாலையில் மர்மமான முறையில் 4 பறக்கும் தட்டுகள் வானில் பறந்துள்ளன. தரையில் இருந்து பார்க்கும்போது வெளிச்சமாக மட்டுமே தெரிந்த இந்த பறக்கும் தட்டுகளை ஓய்வுபெற்ற சி.பி.சி.ஐ.டி. போலீஸ் டி.ஜி.பி. பிரதீப் பிலிப் தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். மனைவியுடன் முட்டுக்காடு கடற்கரையில் மாலையில் அமர்ந்திருந்த போதுதான் பிரதீப் பிலிப்பின் கண்ணில் நான்கு ஒளி தென்பட்டுள்ளது. உடனடியாக தனது ஐபோன் மூலமாக அவர் அதனை படம் பிடித்துள்ளார். பின்னர் அந்த புகைப்படத்தை ஜூம் செய்து பார்த்தபோது அதில் பறக்கும் தட்டு போன்று நான்கு உருவம் தெரிந்துள்ளது.

இதை பார்த்து வியப்பும் அதிர்ச்சியும் அடைந்த அவர், அந்த புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களில் உள்ளவை டிரோன் போலவோ, சிறிய விமானம் போலவே இல்லை. அடையாளம் கண்டுபிடிக்க முடியாத பறக்கும் தட்டாகவே அவை உள்ளன. பறக்கும் தட்டுகள் வானில் பறப்பதாக இதுவரை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் அதனை புகைப்படமாக யாரும் எடுத்ததாக தெரியவில்லை. அப்படி எடுக்கப்பட்டாலும் அது தெளிவாக இருப்பதில்லை. இந்தியாவிலேயே முதல்முறையாக எடுக்கப்பட்ட அடையாளம் தெரியாத பறக்கும் தட்டு புகைப்படம் இதுவாகத்தான் இருக்கும் என சிலர் கூறுகின்றனர். அமானுஷ்யங்கள் நிறைந்த இந்த உலகில் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட் ஏவப்பட்டாலும் அதன் தலைமை விஞ்ஞானி அதற்கு முந்தைய நாள் திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்து விட்டு வருவதை நாம் கண்டுள்ளோம். இவ்வாறு விஞ்ஞானத்திற்கும், மெய்ஞானத்திற்கும் பல்வேறு தொடர்புகள் உள்ளன. எனவே அமானுஷ்யங்கள் நிறைந்த இந்த உலகில் நாம் அறிந்தது சிறிது மட்டுமே, அறியாதது எண்ணற்றவை உள்ளன. அதனை காலங்கள் நமக்கு உணர்த்துமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

The post சென்னை அருகே வானில் பறக்கும் தட்டுகள்? நம்ப வேண்டாம் என விஞ்ஞானிகள் கருத்து appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED சென்னை மெரினா கடற்கரை வருவோருக்கு நேரக் கட்டுப்பாட்டு?