×

பட்டிப்புலத்தில் கட்டி முடித்து 10 ஆண்டுகளாக பூட்டி கிடக்கும் மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம்: பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை

 

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே பட்டிப்புலம் ஊராட்சியில் கட்டிமுடிக்கப்பட்டு 10 ஆண்டுகளாக பூட்டியே கிடக்கும் மகளிர் சுய உதவிக்குழு கட்டிடத்தை புதுப்பித்து மகளிர் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மாமல்லபுரம் அடுத்த பட்டிப்புலம் ஊராட்சியில் 1000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இங்கு, மாதா கோயில் தெருவையொட்டி ஊராட்சி மன்ற அலுவலகம், விஏஓ அலுவலகம், அரசு துணை சுகாதார நிலையம், நியாய விலை கடை, மகளிர் சுய உதவி குழு கட்டிடம் ஒரே வளாகத்தில் அமைந்துள்ளது. மேலும், மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் பயன்படுத்துவதற்காக, மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம் 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.

ஆனால், அந்த கட்டிடம் இன்னும் திறக்கப்படாமல் பாழடைந்து பூட்டு போட்டு பூட்டியே கிடக்கிறது. எத்தனையோ, அரசு அலுவலகங்கள் வாடகை கட்டிடத்தில் இயங்கும்போது, அரசுக்கு சொந்தமான இடத்தில் மகளிர் சுய உதவிக்குழு கட்டிடத்தை பராமரிக்காமல் இருப்பது சமூக ஆர்வலர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, பாழடைந்து காணப்படும் மகளிர் சுய உதவிக்குழு கட்டிடத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு போர்க்கால அடிப்படையில் புதுப்பித்து மகளிர் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு, 10 ஆண்டை கடந்தும் திறக்காமல் பூட்டியே கிடக்கிறது.  இதனால், மகளிர் குழுவினர் வரவு செலவு கணக்குகளை பராமரிக்க முடியாமலும், மகளிர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் கொடுக்க முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர்’ என்றனர்.

The post பட்டிப்புலத்தில் கட்டி முடித்து 10 ஆண்டுகளாக பூட்டி கிடக்கும் மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம்: பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Women's Self Help Committee ,Pattipulam ,Mamallapuram ,
× RELATED செங்கல்பட்டு – மாமல்லபுரம் இடையே...