- கோட்டாசியர்
- Roudi
- கூடுவாஞ்சேரி
- தாமரம்பரும்
- கூடுவாஞ்சேரி, புதுச்சேரி அருங்கல் சாலை
- முருகேசன்
- கோடதர்யா
- குட்டோவஞ்சேரி
தாம்பரம்: கூடுவாஞ்சேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காரணை புதுச்சேரி அருங்கல் சாலையில் கடந்த 1ம் தேதி அதிகாலை ஆய்வாளர் முருகேசன் தலைமையில், உதவி ஆய்வாளர் சிவகுருநாதன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக அதிவேகமாக வந்த காரை போலீசார் நிறுத்த முயற்சித்தபோது அந்த கார் உதவி ஆய்வாளரை இடிப்பது போல் வந்து போலீஸ் வாகனத்தின் மீது மோதி நின்றது. அதிலிருந்து பயங்கர ஆயுதங்களுடன் இறங்கிய நான்கு பேரில் ஒருவர் அரிவாளால் உதவி ஆய்வாளரின் இடது கையில் வெட்டி, மீண்டும் தலையில் வெட்ட முயற்சித்துள்ளார். அப்போது அந்த கும்பலை நோக்கி ஆய்வாளர் ஒரு நபரையும், உதவி ஆய்வாளர் ஒரு நபரையும் தங்களது துப்பாக்கியால் சுட்டதில் இருவர் உயிரிழந்தனர். மற்ற இருவர் ஆயுதங்களுடன் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
விசாரணையில், சுட்டு கொல்லப்பட்ட நபர்கள் வண்டலூர் அடுத்த ஓட்டேரி பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி வினோத் (எ) சோட்டா வினோத் (35) எனவும், மற்றொரு நபர் ரமேஸ் (32) எனவும் அவர்கள் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது. போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அவர்களை ரவுடிகள் தாக்க வந்ததால் போலீசார் அவர்களை என்கவுன்டர் செய்ததால், இதுகுறித்து விசாரணை நடத்த தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் செல்வகுமார் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட இருவரது உடல்களை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் செல்வகுமார் நேரில் பார்வையிட்டு விசாரணையை தொடங்கினார். அதனைத் தொடர்ந்து சுட்டுக் கொல்லப்பட்ட இருவர் உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று தாம்பரம் சானடோரியம் பகுதியில் உள்ள தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இந்த சம்பவம் தொடர்பான விசாரணை நடைபெற்றது. அதில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட ரமேஷ் குடும்பத்தினர் 5வது நாள் காரியம் கழித்து விசாரணைக்கு வருவதாக கூறி விசாரணைக்கு ஆஜராகவில்லை. சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி சோட்டா வினோத் சார்பில் அவரது தாயார் மற்றும் சகோதரர் விசாரணைக்கு ஆஜராகினர். சோட்டா வினோத் இறந்தது தொடர்பாக எப்.ஐ.ஆர், பிரேத பரிசோதனை அறிக்கை என எதுவும் இதுவரை தங்களுக்கு தரவில்லை என கூறியதோடு போலீசார் தங்களை பொய் வழக்கு போட்டு கைது செய்து விடுவதாக மிரட்டுவதாகவும், தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் எனவும் தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் செல்வகுமாரிடம் தெரிவித்தனர். அவர்கள் சொன்னதை பதிவு செய்து கொண்ட வருவாய் கோட்டாட்சியர் தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடைபெறும் என தெரிவித்தார்.
The post கூடுவாஞ்சேரியில் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடியின் தாயார், சகோதரனிடம் கோட்டாட்சியர் நேரில் விசாரணை appeared first on Dinakaran.