×

தமிழ்நாடு முழுவதும் ஐபிஎஸ் அதிகாரிகள் 27 பேர் பணியிட மாற்றம்: உள்துறை செயலாளர் அமுதா உத்தரவு

சென்னை: வடசென்னை கூடுதல் இணை கமிஷனர், போக்குவரத்து கூடுதல் கமிஷனர் உள்பட தமிழகம் முழுவதும் 27 போலீஸ் அதிகாரிகள் புதிய பதவிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக டிஜிபி சைலேந்திரபாபு பணி ஓய்வு பெற்ற பிறகு புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டார். அதை தொடர்ந்து, சட்டம் -ஒழுங்கு ஏடிஜிபியாக அருண், சென்னை போலீஸ் கமிஷனராக சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய போலீஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்ட பிறகு முதன்முறையாக மாநிலம் முழுவதும் 27 போலீஸ் அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

உள்துறை செயலாளர் அமுதா நேற்று வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: ஊர்க்காவல் படை டிஜிபியாக இருந்த பி.கே.ரவி, மின்வாரிய விஜிலென்ஸ் டிஜிபியாகவும், அந்த பதவியில் இருந்த வன்னிய பெருமாள், சிவில் சப்ளை சிஐடி டிஜிபியாகவும், மத்திய அரசு பணியில் இருந்து தமிழகத்திற்கு திரும்பி உள்ள டிஜிபி ராஜீவ் குமார், போலீஸ் பயிற்சி கல்லூரி டிஜிபியாகவும், நிர்வாக பிரிவு ஏடிஜிபி பாலநாகதேவி, பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபியாகவும், அந்த பதவியில் இருந்த அபின் தினேஷ் மொடக், மாநில குற்ற ஆவண காப்பக ஏடிஜிபியாகவும், அந்த பதவியில் இருந்த வினோத் தேவ் வாங்கடே, நிர்வாக பிரிவு ஏடிஜிபியாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுபோல, சாலை பாதுகாப்பு பிரிவு ஐஜி பிரமோத் குமார், கரூர் காகித தொழிற் சாலை விஜிலென்ஸ் ஐஜியாகவும், சிவில் சப்ளை சிஐடி ஐஜி காமினி, திருச்சி மாநகர கமிஷனராகவும், அந்த பதவியில் இருந்த சத்ய பிரியா, பொருளாதார குற்றப்பிரிவு ஐஜியாகவும், அந்த பதவியில் இருந்த ஆசியம்மாள், தலைமையக ஐஜியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை மாநகர தலைமையிட ஐஜி லோகநாதன், மதுரை நகர கமிஷனராகவும், அந்த பதவியில் இருந்த நரேந்திரன் நாயர், தென்மண்டல ஐஜியாகவும், அந்த பதவியில் இருந்த அஸ்ரா கார்க், சென்னை வடக்கு கூடுதல் கமிஷனராகவும், நவீன மயமாக்கல் பிரிவு ஐஜி சந்தோஷ் குமார், லஞ்ச ஒழிப்புத் துறை ஐஜியாகவும், அந்த பதவியில் இருந்த பவானீஸ்வரி, மேற்கு மண்டல ஐஜியாகவும், அந்த பதவியில் இருந்த சுதாகர், சென்னை மாநகர போக்குவரத்து கூடுதல் கமிஷனராகவும், அந்த பதவியில் இருந்த கபில் குமார் சர்த்கர், சென்னை நகர தலைமையிட கூடுதல் கமிஷனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஜோஷி நிர்மல்குமார், போலீஸ் அகாடமி ஐஜியாகவும், அந்த பதவியில் இருந்த ஜெய கவுரி ஆயுதப்படை ஐஜியாகவும், கடலோர காவல் படை டிஐஜி கயல்விழி, சென்னை மாநகர தலைமையிட இணை கமிஷனராகவும், அந்த பதவியில் இருந்த சாமுண்டீஸ்வரி வட சென்னை சட்டம் -ஒழுங்கு இணை கமிஷனராகவும், அந்த பதவியில் இருந்த ரம்யா பாரதி, மதுரை சரக டிஐஜியாகவும், அந்த பதவியில் இருந்த பொன்னி, காஞ்சிபுரம் டிஐஜியாகவும், அந்த பதவியில் இருந்த பகலவன், திருச்சி சரக டிஐஜியாகவும், அந்த பதவியில் இருந்த சரவண சுந்தர், கோவை சரக டிஐஜியாகவும், தலைமையிட டிஐஜி அபிஷேக் தீக்சித், வடசென்னை போக்குவரத்து இணை கமிஷனராகவும், திருநெல்வேலி கமிஷனர் ராஜேந்திரன், உளவுத்துறை டிஐஜியாகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு உள்துறை செயலாளர் அமுதா உத்தரவில் கூறியுள்ளார்.

The post தமிழ்நாடு முழுவதும் ஐபிஎஸ் அதிகாரிகள் 27 பேர் பணியிட மாற்றம்: உள்துறை செயலாளர் அமுதா உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Amutha ,Chennai ,North Chennai ,Joint ,
× RELATED தமிழ்நாடு தலைமை செயலக சங்க கோரிக்கை...