×

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: குறுவை நெற்பயிரை காப்பாற்றிடவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடவும் காவிரியிலிருந்து உரிய நீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறு பிரதமர் மோடிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில் கூறியிருப்பதாவது: குறுவை சாகுபடியும், சம்பா நெல் விதைப்பும், மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை, குறிப்பாக கர்நாடகாவிலிருந்து வரும் நீரை மட்டுமே சார்ந்துள்ளது. மாதாந்திர அட்டவணைப்படி, பிலிகுண்டுலுவில், தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நீரின் பங்கை உச்ச நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக இந்த உத்தரவை கர்நாடகம் முழுமையாக மதிக்கவில்லை.

மேலும், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டுதல்களையும் கடைபிடிக்கவில்லை. ஒன்றிய ஜல்சக்தித் துறை அமைச்சரிடம் கடந்த ஜூலை 5ம் தேதி மற்றும் 19 தேதிகளில் இப்பிரச்னையை எடுத்துச் சென்று, உச்ச நீதிமன்றம் நிர்ணயித்த விநியோக அட்டவணையைக் கடைபிடிக்க கர்நாடக அரசுக்கு உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும். இதனை முறையாக கண்காணிக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை அறிவுறுத்தவேண்டும் என வலியுறுத்தினேன். இருப்பினும், கர்நாடக அரசு இவற்றை கருத்தில் கொள்ளாமல், முழுமையாக நிரம்பிய கபினி அணையில் இருந்து மட்டுமே நீரை திறந்து விடுகிறது.

ஏற்கனவே அரிசி தட்டுப்பாட்டால், பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு ஒன்றிய அரசு தடை விதித்துள்ள தற்போதைய சூழலில், காவிரி டெல்டாவில் தற்போது உள்ள குறுவை நெல் பயிரையும், தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் நீங்கள் (பிரதமர் மோடி) உடனடியாக தலையிட்டு காப்பாற்ற வேண்டும். எனவே, உச்ச நீதிமன்றம் நிர்ணயித்துள்ளபடி, தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய தண்ணீரை உடனடியாக திறந்துவிடவும், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் ஏற்பட்ட பற்றாக்குறையை தீர்க்கவும் கர்நாடக அரசுக்கு நீங்கள் உரிய அறிவுரைகளை வழங்குவதோடு, இதனை உறுதி செய்வதற்கு தேவையான அறிவுரைகளை ஒன்றிய ஜல்சக்தி அமைச்சகத்திற்கும் வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Karnataka government ,Cauvery ,Chief Minister ,M.K.Stal ,Chennai ,Kuruvai ,CM ,Dinakaran ,
× RELATED ஆட்சி செய்யாமல் காங்கிரஸ் வசூல் செய்கிறது : பிரதமர் மோடி