×

சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்க பேடிஎம் செயலியை பயன்படுத்தி டிக்கெட் பெறும் வசதி: நிர்வாகம் அறிமுகம்

சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்க பேடிஎம் செயலி மூலம் டிக்கெட் பெறுவதற்கான புதிய வசதியை சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் சித்திக், நந்தனத்தில் உள்ள சென்னை மெட்ரோ ரயில் நிறுவன தலைமை அலுவலகத்தில் நேற்று அறிமுகம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘மெட்ரோ ரயில் பயணத்திற்கான தற்போதுள்ள டோக்கன்கள் மற்றும் பயண அட்டைகளுக்கு மாற்றாக மெட்ரோ பயணிகள் எளிய வகையில் மெட்ரோ பயணச்சீட்டுகளை பெறுவதற்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஏற்கனவே வாட்ஸ்அப் மற்றும் க்யூஆர் குறியீடு பயணச்சீட்டு பெறுவதற்கான வசதியை அறிமுகப்படுத்தியது.

இதனை தொடர்ந்து தற்போது பேடிஎம் நிறுவனத்துடன் இணைந்து பேடிஎம் செயலி மூலம் க்யூஆர் குறியீடு பயணச்சீட்டை பெறுவதற்கான வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது, பயணிகள் நீண்ட வரிசையில் நிற்பதை தவிர்த்து நேரத்தை மிச்சப்படுத்த உதவும். இந்த சேவைகள் தற்போதுள்ள 20% கட்டண தள்ளுபடியையும் வழங்குகிறது. இதன் மூலம், மெட்ரோ ரயில் பயணிகள் பேடிஎம் செயலியில் மெட்ரோ பிரிவின் கீழ் நுழையும் நிலையம் மற்றும் சேருமிடத்தை குறிப்பிட்டு க்யூஆர் பயணச்சீட்டை வாங்க முடியும்.

மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள நுழைவாயில் மற்றும் வெளியேறும் நிலையங்களில் உள்ள தானியங்கி கட்டண வசூல் வாயில்களின் க்யூஆர் குறியீடு ஸ்கேனரின் முன், பயணிகள் ஸ்மார்ட்போனை வைத்த பின்னர் மெட்ரோ பயணத்தை மேற்கொள்ளலாம்,’’ என்றார். நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநர்கள், அர்ச்சுனன், பிரசன்ன குமார் ஆச்சார்யா, ஆலோசகர் மனோகரன், பேடிஎம் நிறுவனத்தின் உதவி துணைத் தலைவர் அங்கித் சவுத்ரி, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

The post சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்க பேடிஎம் செயலியை பயன்படுத்தி டிக்கெட் பெறும் வசதி: நிர்வாகம் அறிமுகம் appeared first on Dinakaran.

Tags : Chennai Metro ,Chennai ,Chennai Metro Rail ,
× RELATED சென்னை மெட்ரோ ரயில்களில் ஏப்ரல்...