×

மதுராந்தகம் நகரில் உள்ள ஏரி காத்த ராமர் கோயில் புனரமைப்பு பணிகள் விறுவிறு: கும்பாபிஷேகம் நடக்க இருப்பதாக தகவல்

மதுராந்தகம்: மதுராந்தகம் நகரில் உள்ள ஸ்ரீ ஏரி காத்த ராமர் கோயிலில் புனரமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இக்கோயிலில் கும்பாபிஷேகம் விழா விரைவில் நடக்க இருப்பதாக செயல் அலுவலர் தெரிவித்துள்ளார். மதுராந்தகம் நகரில் புகழ்பெற்ற ஸ்ரீ ஏரிகாத்த ராமர் கோயில் என அழைக்கப்படும் கோதண்ட ராமர் கோயில் உள்ளது. இக்கோயிலில், கடந்த 2006ம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பிறகு, 17 ஆண்டுகள் கடந்து தற்போது கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.

இந்த பிரபலமான கோயிலில் அமைந்துள்ள மூலவர் சன்னதியான ராமர் சன்னதி, தாயார், ஆண்டாள், லட்சுமி நரசிம்மர், தேசிகர், சக்கரத்தாழ்வார், ராமானுஜர் ஆகிய சன்னதிகளும், கோயிலின் பிரதான ராஜகோபுரம் மற்றும் கோயில் எதிரே அமைந்துள்ள ஆஞ்சநேயர் சன்னதி ஆகியவை புனரமைக்கும் பணிகள் ஒரு மாதத்திற்கு முன்பு துவங்கியது. இந்தப பணிகள் தற்போது மிக வேகமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து கோயில் செயல் அலுவலர் மேகவண்ணன் கூறுகையில், ‘இந்த கோயிலின் பிரதான கோபுரம் சீரமைக்கும் பணிகளுக்கு கூடுதலான நாட்கள் தேவைப்படும்.

மற்றபடி கோயிலின் உள் பிரகாரத்தில் அமைந்துள்ள சிறு சிறு கோயில்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பல பகுதிகள் சீரமைக்கும் பணிகள் விரைவாக நடைபெறும். எனவே, குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை முடித்து கும்பாபிஷேகம் நடத்துவதற்கான முயற்சிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. எனவே, மிக விரைவில் பணிகள் நிறைவு பெறும் எனவும் கோயில் சீரமைப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்த பின்பு இந்து சமய அறநிலையத்துறை உயர் அதிகாரிகளின் ஆலோசனையின்பேரில் தேதி குறிப்பிடப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெறும்’ என்றார்.

The post மதுராந்தகம் நகரில் உள்ள ஏரி காத்த ராமர் கோயில் புனரமைப்பு பணிகள் விறுவிறு: கும்பாபிஷேகம் நடக்க இருப்பதாக தகவல் appeared first on Dinakaran.

Tags : Lake Katha Ramar Temple ,Madurandakam City ,Mathurandagam ,Sri Lake Katha Ramar ,temple ,Madurandagam Nagar ,Ikhoil ,Ramar ,Kumbaphishesha ,
× RELATED போலீசாரை தாக்கிய வழக்கில் சென்னை வாலிபர் உள்பட 5 பேர் கைது