×

பச்சிளம் குழந்தையை கொன்ற வழக்கில் கள்ளக்காதலன் கைது

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த கொசவன்பாளையம் சுடுகாடு அருகே வறண்ட குளம் உள்ளது. இங்கு, கடந்த 1ம் தேதி அன்று ஆண் குழந்தையை மர்ம நபர் உயிருடன் சுமார் 5 அடி ஆழ குழி தோண்டி அதற்குள் குழந்தையை போட்டு மண்கட்டிகளை மேலே நிரப்பி குழந்தையை கொல்ல முயற்சி செய்துள்ளார். அப்போது, அப்பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கவே அப்படியே விட்டுவிட்டு ஓடிவிட்டார். இந்நிலையில், குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டதும் அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்தனர். அப்போது, பிறந்த சில மணி நேரங்களேயான பச்சிளம் குழந்தை இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே, கிராம நிர்வாக அலுவலர் லோகநாதன் மற்றும் திருவள்ளூர் தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன் அடிப்படையில், திருவள்ளூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, குழந்தையை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி குழந்தை பரிதாபமாக பலியானது. இது குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் நடத்திய விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த லதா என்பவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கும் நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு அவரது கணவர் சங்கர் உயிரிழந்துள்ளார். இதை அடுத்து லதாவிற்கு வேறு ஒருவருடன் கள்ள தொடர்பு ஏற்பட்டுள்ளது.

அதனால் கர்ப்பமான லதாவிற்கு குழந்தை பிறந்ததும் அருகில் உள்ள குளத்தில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொள்ள முயற்சி செய்ததும் தெரியவந்தது. இதை அடுத்து லதாவை போலீசார் கைது செய்தனர். இதனை தொடர்ந்து, கள்ளக்காதலன் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். இதில், கள்ளக்காதலன் திருப்பாச்சூர் கோட்டை காலனி பகுதியை சேர்ந்த பாக்கியராஜ் மகன் சக்திவேல்(24). கூலி தொழிலாளி. லதா மற்றும் சக்திவேல் ஆகிய இருவரும் அதே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களுக்குள் தகாத உறவு ஏற்பட்டது. இவர்கள் இருவருக்கும் பிறந்த குழந்தையை கொலை செய்ய சக்திவேல் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, நேற்றுமுன்தினம் இரவு சக்திவேலை போலீசார் கைது செய்தனர்.

The post பச்சிளம் குழந்தையை கொன்ற வழக்கில் கள்ளக்காதலன் கைது appeared first on Dinakaran.

Tags : Forger ,Tiruvallur ,Kosavanpalayam crematorium ,
× RELATED திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தேர்தலில்...