×

வெட்டிங் ரீல்ஸை விரும்பும் 2k கிட்ஸ்!

நன்றி குங்குமம் தோழி

ஆரம்ப காலத்தில் எந்தவொரு விசேஷம் என்றாலும் விருந்தோம்பல் மட்டுமே முக்கியமாக கருதப்பட்டது. ஆனால், பின் வந்த நாட்களில் மக்கள் விருந்தோம்பலில் எவ்வளவு கவனமாக இருக்கிறார்களோ அதை விட அதிகமாக புகைப்படம் எடுப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். குறிப்பாக திருமணத்தில் மணப்பந்தலில் தொடங்கி மணமக்கள் வீட்டிற்கு அழைத்து செல்லும் வரையிலும் புகைப்படம் எடுக்கப்பட்டு அவர்களின் நினைவுகளை பொக்கிஷமாக்க ஆரம்பித்தனர்.

நாளடைவில் இவர்களின் இந்த புகைப்படம் எடுக்கும் கலாச்சாரம் நாளுக்கு நாள் பெருகி திருமணம் என்றால் முதலில் ஏற்பாடு செய்வது போட்டோகிராபி மற்றும் வீடியோகிராபிதான். திருமணத்திற்கு பின் எடுக்கப்படும் புகைப்படங்கள் மாறி தற்போது திருமணத்திற்கு முன்பே எடுக்கின்றனர். அதனை பலவிதங்களில் புகைப்படங்களாக மட்டுமில்லாமல் காணொளியாகவும் பதிவு செய்கின்றனர். அதை ப்ரீ வெட்டிங், போஸ்ட் வெட்டிங் எனவும் வகைப்படுத்தி சொல்கின்றனர்.

‘‘ப்ரீ வெட்டிங் மற்றும் போஸ்ட் வெட்டிங்கிற்கு பெரிய வித்தியாசங்கள் இல்லை. திருமணம் முடிந்து எடுக்கும் சில புகைப்படத்தை திருமணத்திற்கு முன்பே எடுத்து கொடுப்பதுதான் ப்ரீ வெட்டிங் புகைப்படங்கள். மேலும் ஒரு புகைப்படம் எப்படி எடுக்கிறோம் என்பது முக்கியமில்லை. அதை எப்போது பார்த்தாலுமே ஒரு உயிர்ப்பு இருக்கணும். நம்ம மனதோடு தொடர்பு கொண்டிருக்கணும்’’ என பேச ஆரம்பித்தார் புகைப்பட கலைஞர் சாரதா கோபாலகிருஷ்ணன் ‘‘நானும் என் கணவர் மணிகண்டனும் சேர்ந்துதான் 2011ல் எங்களோட போட்டோகிராபி மற்றும் வீடியோகிராபி தொழிலை ஆரம்பிச்சோம்.

அவர் என் குழுவில் ஒரு நபராக மட்டுமில்லாமல், என் தொழிலில் ஒரு பங்குதாரராகவும் இருக்கிறார். கிட்டத்தட்ட 10 வருஷத்துக்கு மேல போட்டோகிராபி மற்றும் வீடியோகிராபி செய்து வருகிறோம். அதில் வெட்டிங் புகைப்படங்களை மட்டுமேதான் நாங்க எடுப்போம். கல்யாணம் ஒருவரின் வாழ்வில் ஒரு முறை மட்டுமே நடக்கும் நிகழ்வு இல்லையா..? அதை அவங்க 50 வருஷம் கழிச்சு நினைத்து பார்க்கும் போது சிலருக்கு அங்கு நடந்த கலாட்டாக்கள், பிரச்னைகள், விளையாட்டுகள் என அனைத்தும் சேர்ந்து ஒரு கலவையான உணர்வு மற்றும் நினைவுகளை தரும். அந்த தருணத்தை எவ்வளவு காலம் ஆனாலும் கண் முன் கொண்டு வரணும்.

குறிப்பாக அவர்களின் சிரிப்பு மாறாமல் பல ஆண்டுகளுக்கு அவர்களின் நினைவுகளை பெட்டகமாக மாற்றும் தன்மை இந்த புகைப்படங்களுக்கும் உண்டு’’ என்ற சாரதா, எந்த மாதிரியான புகைப்படங்களை இந்த காலத்து மக்கள் அதிகம் விரும்புகிறார்கள் என்பது பற்றி விவரித்தார். ‘‘இன்று நடக்கும் திருமணங்களில் ப்ரீ வெட்டிங், போஸ்ட் வெட்டிங் என பிரித்துதான் எல்லோருமே புகைப்படங்களை எடுக்கிறோம். இது புதுசு கிடையாது.

ஆரம்பத்திலிருந்து திருமணம் என்றால் அதற்கு முன், பின் நடக்கக்கூடிய சடங்குகளைதான் பிரித்து இவர்கள் போஸ்ட் வெட்டிங், ப்ரீ வெட்டிங்னு சொல்லிட்டு இருக்காங்க. அதில் பெண் பார்ப்பது, நிச்சயதார்த்தம், நலங்கு, சங்தீத், முகூர்த்தம், பின்பு திருமண வரவேற்பு என அனைத்தையும் நாங்கள் எங்கள் பாணியில் அவர்களின் விருப்பத்திற்கு எடுத்து தருவோம். சிலர் புகைப்படங்களில் நிற்கவே தயங்குவாங்க, குறிப்பா, வீட்டில் பெரியோர்களால் நிச்சயிக்கப்படும் மணமக்கள். காதல் திருமணம் செய்பவர்களுக்கும், இவர்களுக்கும் ஒரு சில வித்தியாசங்கள்தான். காதல் திருமணத்தின் போது கணவனோ, மனைவியோ அவர்களிடம் ஒரு பாதுகாப்பான மனநிலை இருக்கும்.

நமக்கு பிடிச்ச வாழ்க்கைனு ஒரு ஆர்வம் ஏற்படும். பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்ட கல்யாணம் வரும் போது வாழ்க்கையோட முக்கியமான திருப்புமுனை என்று ஆர்வம் இருந்தாலும் வெட்கம், தயக்கம் என எல்லாமே வரும். எல்லோரும் நம்மையே பார்க்கிற மாதிரி சங்கோஜம் படுவாங்க. ஒரு புகைப்பட கலைஞரா எங்களுக்கு இவர்களை பார்க்கும் போது ரொம்பவே உற்சாகமாக இருக்கும். ஒவ்வொருத்தருடைய மனநிலை அவங்க முகத்தில் அப்படியே தெரியும். மேலும் அவங்க சந்தோஷத்தை இரண்டு மடங்கா நாம திரும்ப குடுக்கணும். அதற்கான எங்க உழைப்பும் அதிகமா இருக்கும்’’ என்கிறார்.

‘‘நாம எடுக்கும் புகைப்படங்களில் நிறைய வகை இருக்கு. உதாரணத்திற்கு, கேண்டிட், ட்ரடிஷ்னல், சினிமாட்டிக் போட்டோகிராபி…. அதில் ட்ரடிஷ்னல்னு சிலர் மண மக்களையும், மேடையில் வருபவர்களை மட்டுமே எடுப்பாங்க. என்னை பொறுத்தவரை திருமணம் என்பது ஒரு கதை. ஒரு கதையில் வரும் இடமும், ஆளும் எப்படி முக்கியமோ அது போல கல்யாணத்தில் பெண், மாப்பிள்ளை மட்டுமில்லாமல், அந்த இரண்டு நாட்களில் அங்கு வந்திருக்கும் அனைவருமே எனக்கு முக்கியம். அதனால் நான் அனைத்தையும் என்னோட கேமராவால் உயிர் கொடுக்க நினைப்பேன். இந்த புகைப்படங்களை 10 வருஷம் கழிச்சு பார்க்கும் போது அவங்களுக்கு சந்தோஷமா இருக்கணும்.

ஊரை கூட்டி அனைத்து சொந்தங்கள் முன் வீட்டில் திருமணம் நடந்த காலம் போய், இப்போ வெறும் பத்து இருபது பேர் மத்தியில் திருமணம் செய்யுறாங்க. அதை டெஸ்டினேஷன் வெட்டிங், இன்டிமேட் வெட்டிங்னு சொல்லுவாங்க. டெஸ்டினேஷன் வெட்டிங் கொஞ்ச காலம் முன்னாடி இருந்தே இருந்தது. சாதாரணமா திருமணத்தில் நடக்கும் அனைத்து விதமான சடங்குகள் எல்லாமே இருக்கும். ஆனால், கல்யாணம் மட்டும் ஏதாவது ஒரு ரெசார்ட்டில், கடற்கரையில் மணமக்களின் குடும்பங்கள் முன்னிலையில் மட்டும் நடக்கும். அதே போலதான் இன்டிமேட் வெட்டிங்கும். இந்த முறை திருமணங்கள் கொரோனா காலத்திலிருந்து அதிகமாகிடுச்சு.

கோவிட் காலத்தில் விசேஷங்களில் நிறைய பேர் கலந்து கொள்ள கூடாதுனு அரசு உத்தரவு குடுத்தது. அதன் பேரில் மணமக்களின் குடும்பம் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கூட்டம் மட்டுமே அங்கு இருக்கும். பொதுவா புது ஆட்களை பார்த்தால் ஒரு வித பதட்டம், தயக்கம் எல்லோருக்குமே இருக்கும். ஆனால் இந்த திருமணத்தில் அப்படி இருக்காது. எனவே எப்பவும் நண்பர்களோடு இருப்பது போல ஆட்டம், பாட்டம்னு சந்தோஷமா ஒவ்வொரு நிமிடத்தையும் கடந்து வருவாங்க. அவங்களோட இந்த சந்தோஷத்தை பார்க்கும் போது அதுவே எங்களுக்கு ஒரு சக்தி கிடைத்த மாதிரி இருக்கும். கோவிட் முடிந்தாலும் இன்றும் சிலர் இன்டிமேட் வெட்டிங்கைதான் விரும்புறாங்க’’ என்றவர், அனைத்து கலாச்சார முறை திருமணங்களையும் புகைப்படம் எடுத்துஉள்ளார்.

தற்போது, ப்ரீ வெட்டிங் என்ற பெயரில் எடுக்கப்படும் சில புகைப்படங்கள் முகச்சுளிப்பினை ஏற்படுத்துகிறது. அது குறித்து அவரே விளக்கம் அளித்தார். ‘‘ப்ரீவெட்டிங் ஷூட் மணமக்களின் விருப்பத்திற்கு ஏற்பதான் நாங்க எடுப்போம். உதாரணத்திற்கு முன்பு பெண்கள் புடவைகளை தவிர வேறு உடை அணியமாட்டாங்க. அதன் பிறகு சுடிதாருக்கு மாறினாங்க. அவங்களுக்கு தான் போட்டிருக்கும் ஆடை சரியா இருக்கு என்ற ஒரு உணர்வு இருக்கும். ஆனால் அதை பார்க்கும் மற்றவர்களுக்கு அதே உணர்வு தோன்றாது.

அது போல்தான் இந்த ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட்டும். இது அவங்களோட தனிப்பட்ட விஷயம். என்னிடமே நிறைய பேர் இந்த மாதிரியான போட்டோஸ் எடுத்து தரச் சொல்லி கேட்டு இருக்காங்க. நாளைக்கு அதையெல்லாம் பார்க்க போறது அவங்கதான். எங்களை பொறுத்தவரை அவர்கள் திருப்தி அடையும் வகையில் புகைப்படம் எடுத்துக் கொடுப்பதுதான் எங்களின் வேலை. இதே ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட் பொறுத்தவரை சில ஜோடிகள் அவர்களுக்கு பிடித்த போஸ்சில் எடுக்க சொல்வாங்க.

ஒரு சிலருக்கு நாம தான் எந்த போஸில் எடுக்கலாம் என பரிந்துரை செய்ய வேண்டி இருக்கும். இன்றைய 2k கிட்ஸ்களில் பெரும்பாலானவர்கள் புகைப்படத்தை விட ரீல்ஸ் என சொல்லப்படும் வீடியோக்களைதான் விரும்புறாங்க. சிலர் திருமணத்திற்கு பிறகு அவுட்டோர் ஷூட் விரும்புவாங்க. இதற்கு பொதுவா மலைப் பிரதேசங்களைதான் தேர்வு செய்வோம். இதற்கான கட்டணம் அவர்கள் எடுத்துக்கொள்ளும் நாள், கேமரா மற்றும் ஆட்களை பொருத்து வேறுபடும்.

என் திருமணத்தை என் டீம்தான் புகைப்படம் எடுத்தாங்க. திருமணங்களில் இப்படி புகைப்படம் எடுத்தா நல்லா இருக்கும்னு நான் யோசிச்சு இருக்கேன். அப்படி நான் விரும்பிய மாதிரியான புகைப்படம் எல்லாம் என் திருமணத்தில் எடுத்தேன்’’ என்ற சாரதா கோபாலகிருஷ்ணன் திருமணங்கள் மட்டுமில்லாமல், பிரெக்னன்சி ஷூட் மற்றும் ஜஸ்ட்பார்ன் பேபி ஷூட்டும் செய்து வருகிறார்.

தொகுப்பு : காயத்ரி காமராஜ்

The post வெட்டிங் ரீல்ஸை விரும்பும் 2k கிட்ஸ்! appeared first on Dinakaran.

Tags : 2k Kids who ,Wetting Reels ,Kumkum Doshi ,Reels ,Dinakaran ,
× RELATED கிச்சன் டிப்ஸ்