×

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு கொண்டாட்டம் மஞ்சள் கயிறு கட்டி காவிரி தாயை வழிபட்ட பெண்கள்

தஞ்சாவூர் : தஞ்சாவூர் பெரிய கோவில் புது ஆற்றுப்படித்துறை, வடவாற்று படித்துறை, வெண்ணாற்று படித்துறை, திருவையாறு புஷ்ப மண்டப படித்துறை, சுவாமிமலை காவிரி படித்துறை, கும்பகோணம் பாலக்கரை காவிரி படித்துறை, மகாமகக்குளம் உளபட பல்வேறு காவிரி ஆற்றங்கரைகளில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டது. திருவையாறு காவிரி ஆற்றங்கரையில் உள்ள புஷ்ய மண்டப படித்துறைக்கு நேற்று காலை முதலே பெண்கள் குடும்பம் குடும்பமாக வர தொடங்கினர்.

நேரம் செல்ல செல்ல கட்டுகடங்காத கூட்டம் காணப்பட்டது.
ஆடி பெருக்கை முன்னிட்டு தஞ்சாவூரில் உள்ள பல்வேறு அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தஞ்சாவூர் பெரிய கோயிலில் உள்ள பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் நேற்று காலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு நடத்தப்பட்டது. இதில் இல்லத்தரசிகள் தங்களின் மாங்கல்ய பாக்கியம் நிலைக்க வேண்டி வழிபாடு செய்தனர்.

திருமணம் ஆகாத பெண்கள் விரைவில் திருமணம் நடக்க வேண்டி தரிசனம் செய்தனர். தஞ்சாவூர் வடவாற்றங்கரை ராகவேந்திர சுவாமிகளின் பிருந்தாவனத்தில் நேற்று ராகவேந்திர சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் , தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு குருவை தரிசனம் செய்தனர்.

திருவையாறு: ஆடிபெருக்கை முன்னிட்டு திருவையாறு காவிரி ஆற்றில் புதுமண தம்பதியினர் குடும்பத்தோடு காவிரி ஆற்றில் புனித நீராடி புத்தாடை அணிந்து காவிரி தாய்க்கு படையல் போட்டு வழிபட்டனர். பெண்கள் ஒருவருக்கொருவர் மஞ்சள் கயிற்றை கழுத்தில் கட்டிக்கொண்டார்கள். புதுமண தம்பதியினர் திருமணத்தின் போது அணிந்திருந்த மாலைகளை காவிரி ஆற்றில் விட்டு வழிபட்டார்கள். திருவையாறு சுற்று வட்டாரத்தில் உள்ள ஆயிரக்கணக்கான புதுமண தம்பதிகள் காவிரி ஆற்றில் புனித நீராடினர்.

ஐயாறப்பர் கோவிலில் இருந்து ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் காவிரி ஆற்றின் புஷ்ய மண்டபத்துறையில் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெற்றது. சாமி வீதி உலா வந்து கோவிலை வந்தடைந்தது. திருவையாறு டிஎஸ்பி ராமதாஸ் தலைமையில் இன்ஸ்பெக்டர் வனிதா, சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார், தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

திருவிடைமருதூர்: திருவிடைமருதூர் தாலுகா பகுதியில் உள்ள ஆற்றங்கரைகளில் பெண்கள், குழந்தைகள் ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடினர். புதுமண தம்பதிகள் திருமணத்தின் போது அணிந்து கொண்ட பழைய மாலைகளை ஆறுகளில் விட்டனர்.பின்னர் திருமணத்தின் போது அணிந்து கொண்ட திருமாங்கல்ய மஞ்சள் கயிறை பிரித்து புதிய கயிற்றுடன் சேர்த்து அணிந்து கொண்டனர். வாழை இலையில் சந்தனம், குங்குமம், மஞ்சள் கிழங்கு, காதோலை கருகமணி, வெற்றிலை பாக்கு, வாழைப்பழம், பேரிக்காய், நாவல்பழம், விளாம்பழம், ஆப்பிள் உள்ளிட்ட பழ வகைகள், காப்பரிசி, இனிப்பு வகைகள் போன்றவற்றை வைத்து காவிரி தாய்க்கு படைத்து வழிபட்டனர்.

கும்பகோணம்: ஆடிப்பெருக்கையொட்டி கும்பகோணத்தில் உள்ள காவிரி ஆற்றின் கரைகளில் பெண்கள் ஒன்றுகூடி வாழை இலையில் அரிசி, பழங்கள், பனை ஓலை கருகமணி, மஞ்சள், மஞ்சள் கயிறு ஆகியவற்றை வைத்து காவிரி தாய்க்கு படையலிட்டனர். பின்னர், மஞ்சள் கயிற்றை பெண்கள் ஒருவருக்கொருவர் அணிவித்துக்கொண்டனர். புதுமணத் தம்பதிகள் திருமண மாலைகளை ஆற்றில் விட்டு, புதுத் தாலிக்கயிறு அணிந்து கொண்டனர். கும்பகோணம் பகவத் படித்துறை, டபீர் படித்துறை, தாராசுரம் அரசலாறு படித்துறை உள்ளிட்ட காவிரி, மற்றும் அரசலாறு ஆற்றின் படித்துறைகளில் அதிகாலை முதல் ஏராளமான பெண்கள், பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினர், உறவினர்களுடன் கூடி சிறப்பு வழிபாடு நடத்தினர்.

திருக்காட்டுப்பள்ளி: திருக்காட்டுப்பள்ளி அருகே சுற்றுலா தலமாக விளங்கும் கல்லணையில் நேற்று சுற்றுலா பயணிகள் திரண்டனர். கல்லணையில் உள்ள அனைத்து இடங்களையும் சுற்றி பார்த்துவிட்டு சிறுவர் பூங்காவில் உள்ள பெரிய ராட்டினம், ஏரோப்ளேன், படகு சவாரி, ராட்டினம், ஹெலிகாப்டர் ராட்டினம், மீன், ராட்டினம், சிறுவர் பழூன் , பெரிய பலூன், பைக், மயில், போன்றவற்றில் சிறுவர், சிறுமிகள் விளையாடி மகிழ்ந்தனர்.

The post தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு கொண்டாட்டம் மஞ்சள் கயிறு கட்டி காவிரி தாயை வழிபட்ட பெண்கள் appeared first on Dinakaran.

Tags : Aadiperku ,Thanjavur District ,Thanjavur ,Periya Kovil ,Pudu Atrupatthura ,Vadavattu Padithura ,Vennaerthu Padithura ,Tiruvaiyaru ,Pushpa ,Mandapa Padithura ,Adiperu ,
× RELATED தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பாண்டு...