×

பாஜ முதுகில் குத்தி விட்டது… இனி, பிரதமர் மோடி என்ன சொன்னாலும் நம்பாதீர்கள் : முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடும் விமர்சனம்.!

புதுடெல்லி : டெல்லி சேவைகள் மசோதாவை மக்களவையில் நிறைவேற்றியதின் மூலமாக, டெல்லி மக்களின் முதுகில் பாஜ குத்தி விட்டது. இனிமேல், மோடி என்ன சொன்னாலும் டெல்லி மக்கள் நம்பக் கூடாது,’ என்று முதல்வர் கெஜ்ரிவால் ஆதங்கத்துடன் கூறியுள்ளார்.டெல்லியில் ஐஏஎஸ் அதிகாரிகளை கட்டுப்படுத்தும் அதிகாரத்தை பெறுவதற்காக, ஒன்றிய அரசு அவசர சட்டத்தை பிறப்பித்தது, இதை நாடாளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றுவதற்காக, டெல்லி சேவைகள் மசோதாவை தாக்கல் செய்தது. மக்களவையில் நேற்று நடந்த காரசார விவாதத்துக்குப் பிறகு இது நிறைவேற்றப்பட்டது. டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இது தொடர்பாக கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘டெல்லி சேவைகள் மசோதாவை மக்களவையில் நிறைவேற்றியதின் மூலமாக, டெல்லி மக்களின் முதுகில் பாஜ குத்தி விட்டது. இதற்கு மேல் மோடி என்ன சொன்னாலும் அதை டெல்லி மக்கள் நம்பக் கூடாது. டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்குவதாக பாஜ எப்போதுமே கூறி ஏமாற்றி வந்துள்ளது.கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது, ‘நான் பிரதமரானால், டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்குவேன்,’ என்று கூறினார். ஆனால், இன்று இவர்கள் டெல்லி மக்களின் முதுகில் குத்தி விட்டனர்,’ என்று கூறியுள்ளார்.

முன்னதாக நேற்று காலை, மக்களவையில் இந்த மசோதாவை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்து பேசிய கருத்துகள் பற்றி கெஜ்ரிவால் பேட்டி அளித்தார். அதில், ‘மசோதாவை தாக்கல் செய்து அமித்ஷா பேசியதை கேட்டேன். இந்த மசோதா டெல்லி மக்களின் உரிமைகளை பறித்து விடும். இந்த மசோதாவை நியாயப்படுத்தக் கூடிய ஒரு வாதம் கூட அமித்ஷாவிடம் இல்லை. தவறு செய்கிறோம் என்பது அவர்களுக்கே தெரியும். டெல்லி மக்களை இந்த மசோதா, திக்கற்றவர்களாக்கி விடும். ‘இந்தியா’ கூட்டணி இதை நிறைவேற்ற அனுமதிக்காது,’ என்று தெரிவித்தார்.

The post பாஜ முதுகில் குத்தி விட்டது… இனி, பிரதமர் மோடி என்ன சொன்னாலும் நம்பாதீர்கள் : முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடும் விமர்சனம்.! appeared first on Dinakaran.

Tags : BJP ,PM Modi ,Chief Minister ,Arvind Kejriwal ,New Delhi ,Lok Sabha ,Delhi ,
× RELATED புதுச்சேரியில் பொங்கல் உதவி தொகையாக ரூ.3000 வழங்க துணை நிலை ஆளுநர் உத்தரவு..!!