×

மாநகரில் 26 இடத்தில் 86 சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிப்பு

சேலம், ஆக.4: ஆடித்திருவிழாவையொட்டி திருட்டு சம்பவங்களை தடுக்க சேலம் மாநகர் பகுதியில் 26 இடங்களில் 86 சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. தினசரி 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் 22 நாட்கள் ஆடித்திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழா ஆடி 18ம் தேதியை மையப்படுத்தி கொண்டாடப்படுகிறது. ஆடி 18ம் தேதிக்கு முன்னாள் முதல் செவ்வாயில் பூச்சாட்டுதலும், இரண்டாவது செவ்வாயில் கம்பம் நடுதலும், மூன்றாவது செவ்வாயில் சக்தி அழைப்பு, மாவிளக்கு, பொங்கல் வைத்தல், அக்னி கரகம், பூங்கரகம், அலகு குத்துதல், தீ மிதித்தல், பூந்தோர், வண்டிவேடிக்கை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கும்.

நடப்பாண்டு ஆடித்திருவிழா தொடக்கமாக கடந்த 25ம் தேதி பூச்சாட்டுதல் விழா நடந்தது. கடந்த 1ம் தேதி கம்பம் நடுதலும், வரும் 8, 9, 10ம் தேதிகளில் மாவிளக்கு பொங்கல் வைபவமும், 11ம் தேதி வண்டிவேடிக்கை நிகழ்ச்சி நடக்கிறது. சேலம் மாநகரில் செவ்வாய்பேட்டை மாரியம்மன், குகை காளியம்மன், மாரியம்மன், அம்மாப்பேட்டை செங்குந்தர் மாரியம்மன், பலப்பட்டரை மாரியம்மன், அன்னதானப்பட்டி மாரியம்மன், தாதகாப்பட்டி மாரியம்மன், சஞ்சீவிராயன்பேட்டை மாரியம்மன், பொன்னம்மாப்பேட்டை மாரியம்மன், சின்னகடைவீதி சின்னமாரியம்மன் கோயில்களில் ஆடித்திருவிழா தொடங்கியதில் இருந்தே தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

இவ்வாறு தரிசனம் செய்யும் பக்தர்களிடம் திருடர்கள் திருட்டு சம்பவங்களில் ஈடுபட வாய்ப்புள்ளது. அதனால் சேலம் மாநகரில் ஆடித்திருவிழா கொண்டாடப்படும் மாரியம்மன், காளியம்மன் கோயில்களில் ஒலிப்பெருக்கி மூலம் திருட்டு சம்பந்தமான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பண்டிகை காலங்களில் பொதுமக்கள் தங்கள் உடைமைகளை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்றும் எடுத்துரைக்கப்பட்டு வருகிறது. மேலும் பண்டிகை கால திருட்டை தடுக்க சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் பகுதிகளை சுற்றி சேலம் மாநகர போலீஸ் சார்பில் சிசிடிவி கேமராக்கள் ெபாருத்தப்பட்டுள்ளது. இதேபோல் அந்தந்த கோயில்களில் பகுதிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு புறகாவல் நிலையங்களில் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து சேலம் மாநகர போலீசார் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் ஆடித்திருவிழாவின்போது சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருவார்கள். கூட்டத்தில் பெண்களின் தங்கம் உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போக வாய்ப்புள்ளது. முன்பு எல்லாம் ஆண்கள் மட்டும் தான் திருட்டில் அதிகளவில் ஈடுப்பட்டனர். கடந்த சில ஆண்டாக உள்ளூர், வெளி மாநிலங்களை பெண்கள் டிப் டாப் வந்து பெண்கள் தரிசனம் செய்யும்போது அவர்களுக்கே தெரியாமல் தங்கத்தை திருடிச்சென்றுவிடுகின்றனர்.

சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் திருவிழா தொடங்கி 12 நாட்களாகிறது. சேலம் மாநகர காவல் ஆணையர் விஜயகுமாரி, துணை ஆணையர் லாவண்யா உத்தரவின்பேரில் இக்கோயிலில் திருட்டை தடுக்க கோயிலை சுற்றி தற்காலிகமாக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கேமராக்கள் பதிவாகும் காட்சிகளை கண்காணிக்க கோயில் வளாகத்தில் தற்காலிகமாக புறகாவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புறகாவல் நிலையத்தில் சுழற்சி முறையில் அவ்வப்போது போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

மேலும் கோயில் மற்றும் அங்குள்ள சில பகுதிகளில் 26 இடங்களில் 86 சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதைதவிர வழக்கமாக இயங்கும் சிசிடிவி கேமராக்கள் நூற்றுகணக்கில் உள்ளது. அவைகளும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இக்கோயில் மட்டுமில்லாமல் மற்ற மாரியம்மன் கோயிலும் தற்காலிகமாக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதைதவிர மற்ற ஒலிப்பெருக்கி மூலம் திருட்டு சம்பந்தமான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆடித்திருவிழாவையொட்டி தினசரி 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பில் பணியில் ஈடுப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post மாநகரில் 26 இடத்தில் 86 சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிப்பு appeared first on Dinakaran.

Tags : Salem ,Dinakaran ,
× RELATED போதைக்காக வலி நிவாரண மாத்திரைகள் பதுக்கி விற்பனை