×

போலீஸ் ஸ்டேஷனுக்குள் புகுந்து கையில பாம் இருக்கு என பெண் காவலர்களிடம் ரகளை: பிரபல ரவுடி அதிரடி கைது; நெஞ்சுவலி என கூறி மருத்துவமனையில் அட்மிட்

சென்னை: குடிபோதையில் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்திற்குள் புகுந்து, பெண் காவலர்களிடம் கையில் பாம் வைத்திருக்கிறேன் எனக்கூறி மிரட்டல் விடுத்து ரகளையில் ஈடுபட்ட பிரபல ரவுடி தர்கா மோகனை போலீசார் கைது செய்தனர். பிறகு போலீசார் அளித்த வைத்தியத்துக்கு பிறகு ‘அய்யா எனக்கு நெஞ்சு வலிக்கிறது’ என்று அலறியதால் அந்த ரவுடியை அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் போலீசார் சேர்த்தனர். சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்துக்கு நேற்று முன்தினம் இரவு கொலை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி தர்கா மோகன் (61) வந்தார். அப்போது இரவு ரோந்து பணிக்கு இன்ஸ்பெக்டர் உள்பட அனைவரும் சென்றுவிட்டதால், பெண் தலைமை காவலர் ஜெலிபா மற்றும் முதல் நிலை காவலர் இந்துமதி ஆகியோர் மட்டும் இருந்தனர்.

இந்நிலையில் குடிபோதையில் இருந்த ரவுடி தர்கா மோகன், திடீரென காவல் நிலையத்தில் நுழைந்து அங்கிருந்த பெண் காவலர்களிடம் ‘‘நான் யார் தெரியுமா, சிந்தாதிரிப்பேட்டையில் மிகப்பெரிய ரவுடி, முடிந்தால் என்னை கை, கால்களை உடைத்து ஜெயிலுக்கு அனுப்புங்கள் பார்ப்போம். நீ ஒன்னா சண்டைக்கு வாடி…’’ என ஒருமையில் பேசியுள்ளார். அத்துடன் தனது கையில் ‘பாம்’ இருக்கிறது என்றும் கூறி மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் ஸ்டேஷனில் இருந்த 2 பெண் காவலர்களும் பதற்றமடைந்தனர். பிறகு ஆபாச வார்த்தைகளால் பேசிவிட்டு ரவுடி தர்கா மோகன் அங்கிருந்து சென்றுள்ளார். இதன் பிறகு பெண் காவலர்கள் நடந்த சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் ஸ்டேஷனுக்கு விரைந்து வந்து நடந்த சம்பவம் குறித்து 2 பெண் காவலர்களிடம் விசாரணை நடத்தினர்.

பிறகு ஜெலிபா அளித்த புகாரின்படி, ஆபாசமாக பேசுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், மிரட்டல் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் என 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதேபோல் முதல் நிலை காவலர் இந்துமதி அளித்த புகாரின் படி, 294(பி), 353, 307, ஆயுத தடை சட்டம் பிரிவு 25 ஏ ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து காவல் நிலையத்திற்குள் புகுந்து பாம் கையில் வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்து சென்ற ரவுடி தர்கா மோகனை போலீசார் 3 மணி நேர தேடலுக்கு பிறகு சிந்தாதிரிப்பேட்டை அம்மா நகர் பூத் அருகே கைது செய்தனர்.

பிறகு தர்கா மோகனை நீதிமன்றத்துக்கு அழைத்து செல்ல போலீசார் அனைத்து ஏற்பாடுகளும் செய்தனர். அப்போது திடீரென ரவுடி தர்கா மோகன் ‘அய்யா எனக்கு நெஞ்சு வலிக்கிறது’ எனக்கூறி இரண்டு கைகளால் மார்பை பிடித்துக்கொண்டு கதறினார். இதனால், வேறு வழியின்றி போலீசார் ரவுடி தர்கா மோகனை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ள கைதிகள் வார்டில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ரவுடி ஒருவர் குடிபோதையில் கையில் பாம் வைத்திருப்பதாக காவல் நிலையத்திற்குள் புகுந்து பெண் காவலர்களிடம் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் சிறிது நேரம் சிந்தாதிரிப்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post போலீஸ் ஸ்டேஷனுக்குள் புகுந்து கையில பாம் இருக்கு என பெண் காவலர்களிடம் ரகளை: பிரபல ரவுடி அதிரடி கைது; நெஞ்சுவலி என கூறி மருத்துவமனையில் அட்மிட் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Chindathiripet ,police station ,Dinakaran ,
× RELATED டிடிஎஃப் வாசன் தனது செல்போனை...