×

38 ஆண்டுகள் நர்சாக சேவை செய்தவருக்கு பதவி உயர்வு ராணுவத்தில் முதன்முறையாக தமிழக பெண் மேஜர் ஜெனரல்: கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்டவர்

கன்னியாகுமரியை சேர்ந்த இக்னேஷியஸ் டெலோஸ் புளோரா, இந்திய ராணுவத்தின் மதிப்பிற்குரிய ராணுவ செவிலியர் சேவையில் மேஜர் ஜெனரல் என்ற மதிப்புமிக்க பதவியை அடைந்துள்ளார். அவருக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக துருவா கமாண்ட் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், ‘கொரோனா காலத்தின்போது நிலைமையைக் கையாள்வது உட்பட அவரது 38 ஆண்டுகால நர்சிங் வாழ்க்கையில் தளராத ஆர்வத்துடன் தேசத்திற்கு சேவை செய்துள்ளார்’ என தெரிவித்திருந்தார்.

இந்திய ராணுவத்தில் மேஜர் ஜெனரலாக பதவியேற்றுள்ள கன்னியாகுமரியை சேர்ந்த இக்னேஷியஸ் டெலோஸ் புளோராவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்து இருந்தார். ‘பெண்களால் முன்னேறக் கூடும் நம் வண்தமிழ் நாடும் எந்நாடும்’ என மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். ராணுவத்தில் மேஜர் ஜெனரலாக பதவியேற்றுள்ள இக்னேஷியஸ் டெலோஸ் புளோரா கன்னியாகுமரி மாவட்டம் ராஜாவூரை சேர்ந்தவர் ஆவார். கணவர் இக்னேஷியஸ் ஜாண், 2 மகன்கள் சென்னையில் நந்தம்பாக்கம் அருகே ராமபுரத்தில் வசித்து வருகின்றனர்.

இக்னேஷியஸ் ஜாண் நந்தனம் அரசு கலை கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி 2 மாதங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றிருந்தார். மகன்கள் இருவரும் ஐ.டி துறையில் வேலைபார்த்து வருகின்றனர். இக்னேஷியஸ் டெலோஸ் புளோரா தனது தொடக்க கல்வியை குமரி மாவட்டம் ராஜாவூரில் உள்ள புனித மிக்கேல் தொடக்க பள்ளியில் பயின்றுள்ளார். தொடர்ந்து 6 முதல் 12ம் வகுப்பு வரை நாகர்கோவில் உள்ள தனியார் பள்ளியில் (லிட்டில் பிளவர்) பயின்றுள்ளார். 12ம் வகுப்பு முடித்து இந்திய ராணுவத்தில் செவிலியராக பணியில் சேர இந்திய ராணுவ பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கான நுழைவுத்தேர்வான எம்என்எஸ் தேர்வு எழுதி முதல் முயற்சியிலேயே அவர் தேர்ச்சி பெற்றார். பின்னர் ராணுவ நர்சிங் கல்லூரியில் நர்சிங் பயின்று அங்கேயே பணியிலும் சேர்ந்துள்ளார்.

இதுதொடர்பாக புளோராவின் சகோதரர் ராஜாவூரை சேர்ந்த ஓய்வுபெற்ற பிஎஸ்எப் அதிகாரி ஜாண் பிரிட்டோ கூறியதாவது: எனது தங்கை எப்போதும் பிஸியாக இருப்பார். இரவு 9 மணிக்கு பிறகுதான் பேசுவோம். மூன்று மாதங்களுக்கு முன்புதான் புளோரா ராஜாவூர் வந்து சென்றிருந்தார். ராஜாவூரில் 2 தங்கை வீடுகள் உள்ளது. நாங்கள் குடும்பத்தில் 3 ஆண்கள், 3 பெண்கள் என்று மொத்தம் 6 பேர். சகோதரர் ஜார்ஜ் ராஜா மிலிட்டரி இன்ஜினியரிங் சர்வீசில் வேலைபார்த்து வந்தார். சர்வீசில் இருக்கும்போதே இறந்துவிட்டார். மற்றொரு சகோதரர் அந்தோணிசாமி விமானப்படையில் ஹார்னரி பிளைட் லெப்டினென்ட் ஆக பணியாற்றி ஓய்வு பெற்றவர். 2 சகோதரிகள் குடும்ப தலைவிகளாக வசித்து வருகின்றனர். புளோரா கடைசி தங்கை. ராணுவத்தில் செவிலியராக வேலைபார்த்து வருகிறார். இன்னும் ஒன்றரை ஆண்டுகள் அவருக்கு பணிக்காலம் உள்ளது.

டெல்லி கன்டோன்மென்டுக்கு தற்போது இடமாறுதல் பெற்றுள்ளார். ஜம்மு காஷ்மீர் உதம்பூரில் பணியாற்றி வந்த நிலையில் கடந்த ஜூலை 30ம் தேதி அவருக்கு பதவி உயர்வு மற்றும் இடமாறுதல் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு டெல்லி வந்து மேஜர் ஜெனரலாக பதவியேற்றுள்ளார். டெல்லியில் அவருக்கு இன்னும் குவாட்டர்ஸ் கிடைக்கவில்லை, நெஸ்டில்தான் தங்கியுள்ளார். குவாட்டர்ஸ் ஒதுக்கீடு பெற்றதும் நாங்கள் குடும்பத்தினருடன் டெல்லி சென்று அவரை சந்திக்க உள்ளோம்’ என்றார். தமிழகத்தில் இருந்து முதல் பெண் மேஜர் ஜெனரலாக பதவியேற்று உள்ள புளோராவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

* முதல்வர் வாழ்த்தை மீண்டும் பதிவு செய்த ராணுவம்
இந்திய ராணுவத்தில் மேஜர் ஜெனரலாக இக்னேஷியஸ் டெலோஸ் புளோரா பதவி உயர்வு பெற்ற பதிவை இந்தியன் ஆர்மியின் வடக்கு கமாண்ட் டிவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இதை பார்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில், டிவிட்டர் மற்றும் பேஸ்புக் சமூக வலைதளத்தில் இந்த பதிவுகள் அடுத்தடுத்து நீக்கப்பட்டது தொடர்பாக கனிமொழி எம்.பி கேள்வி எழுப்பியிருந்தார். அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் ‘தமிழ்நாடு முதலமைச்சர், தனது மாநிலத்தில் இருந்து முதல் பெண்மணியாக மேஜர் ஜெனரல் பதவி உயர்வு பெற்றிருப்பவருக்கு வாழ்த்திய பதிவை ஏன் நீக்க வேண்டும்? இதன் பின்னணி என்ன? என்று தெரிவித்திருந்தார். இந்த விஷயம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியிருந்தது. இதற்கிடையே ஜம்மு காஷ்மீரில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்ப உள்ளதாக சென்னை மண்டல பாதுகாப்பு அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறியிருந்தார்.

இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், ‘இந்திய ராணுவத்தின் வடக்கு பிராந்தியத்தின் கீழ் இக்னேஷியஸ் டெலாஸ் புளோரா ஜூலை 31ம் தேதி வரை பணியில் இருந்தார். ஆகஸ்ட் 1 முதல் டெல்லியில் உள்ள ஆர் அன்ட் ஆர் ராணுவ மருத்துவமனையில் பணிபுரிகிறார். எனவே அவர் இந்தியன் டிபன்ஸ் ஸ்டாப் ஆகிவிடுகிறார். இந்திய பாதுகாப்பு ஊழியர் பிரிவின் கீழ் அவர் வந்துவிடுவதால் அவரது பதவி உயர்வு தொடர்பாக உள்ள தகவலை ஐடிஎஸ் எனப்படும் இந்திய டிபன்ஸ் பிரிவுதான் அதிகாரபூர்வமாக தெரிவிக்க வேண்டும். எனவே அந்த பதிவு மீண்டும் ஐடிஎஸ் பிரிவால் பதிவிடப்படும்’ என்று கூறியிருந்தார். இதையடுத்து இந்திய ராணுவத்தின் ஐடிஎஸ் பிரிவு டிவிட்டரில் அதிகாரபூர்வமாக இக்னேஷியஸ் டெலாஸ் புளோராவுக்கு வாழ்த்து பதிவு மீண்டும் பதியப்பட்டது.

The post 38 ஆண்டுகள் நர்சாக சேவை செய்தவருக்கு பதவி உயர்வு ராணுவத்தில் முதன்முறையாக தமிழக பெண் மேஜர் ஜெனரல்: கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்டவர் appeared first on Dinakaran.

Tags : General ,Ignatius Delos Flora ,Kanyakumari ,Indian Army ,Army Nursing Service ,
× RELATED பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு எடப்பாடி வாழ்த்து