×

பதவியை பறித்து ஐகோர்ட் உத்தரவிட்ட காலக்கெடு முடிகிறது ஓ.பன்னீர்செல்வம் மகன் எம்பி பதவி தப்புமா? உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு மீது இன்று விசாரணை

புதுடெல்லி: ஓ.பி.எஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத்தின் எம்.பி பதவியைப் பறித்த சென்னை உயர் நீதிமன்றம், அந்த தீர்ப்பை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்தது. இந்த காலக்கெடு இன்றுடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில் ஓ.பி.ரவீந்திரநாத்தின் மேல் முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. இதனால் அவரது பதவி நிலைக்குமா? அல்லது பறிக்கப்படுமா என்ற பரபரப்பு எழுந்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஓபிஎஸ் மகனான ஓ.பி.ரவீந்திரநாத், 76,319 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

தேர்தலின்போது அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவில், தனது வருமானம் உள்ளிட்ட உண்மை விபரங்களை மறைத்ததாகவும், எனவே அவரது வேட்புமனு ஏற்கப்பட்டதே சட்டவிரோதம் எனவும், அவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்க கோரியும் தேனி தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஓ.பி.ரவீந்திரநாத்தின் வெற்றி செல்லாது என தீர்ப்பளித்தது.

அதில், விவசாயத்தில் மட்டுமே வருமானம் கிடைத்ததாக வேட்பு மனுவில் கூறிய நிலையில், வாணி பின்னலாடை நிறுவனத்தில் இயக்குனராக இருந்தபோது வாங்கிய சம்பளம், வாணி பேப்ரிக்ஸ் நிறுவனத்தில் 15 ஆயிரம் பங்குகள் வைத்திருப்பது ஆகியவற்றை ரவீந்திரநாத் மறைத்துள்ளதாக நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. அத்துடன் 4 கோடியே 16 லட்ச ரூபாய்க்கு அசையும் சொத்துகள் இருக்கக்கூடிய நிலையில், ஒரு கோடியே 35 லட்ச ரூபாய் சொத்து மட்டுமே வேட்பு மனுவில் காட்டியிருக்கிறார். இந்த சொத்து விவரங்கள் குறித்து தேர்தல் அதிகாரி முறையான விசாரணை செய்யவில்லை என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்தது. மேலும் மேல் முறையீடு செய்ய ஒரு மாத காலம் அவகாசம் வழங்கி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது.

இதற்கிடையே சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓ.பி.ரவீந்திரநாத் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் திபங்கர் தத்தா ஆகியோர் கொண்ட அமர்வு முன் இன்று விசாரணைக்கு வருகிறது. இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டால் மட்டுமே அவரது பதவி நீடிக்கும். இல்லாவிட்டால் அவரது பதவி உடனடியாக பறிக்கப்பட வாய்ப்பு உள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இன்று தடை விதிக்கப்படாவிட்டால் அவரது பதவி பறிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

* ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் ஜூலை 6ம் தேதி தீர்ப்பளித்தது.
* இந்த தீர்ப்பு 30 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டது.
* அந்த காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது.

The post பதவியை பறித்து ஐகோர்ட் உத்தரவிட்ட காலக்கெடு முடிகிறது ஓ.பன்னீர்செல்வம் மகன் எம்பி பதவி தப்புமா? உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு மீது இன்று விசாரணை appeared first on Dinakaran.

Tags : O. Panneerselvam ,Supreme Court ,New Delhi ,Madras High Court ,OPS ,OP ,Ravindranath ,Dinakaran ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு