
மதுரை: பரமக்குடி பள்ளி மாணவி கூட்டு பலாத்கார வழக்கில், அதிமுக கவுன்சிலரின் ஜாமீனை ரத்து செய்த ஐகோர்ட் கிளை அவரை உடனடியாக சிறையில் அடைக்க உத்தரவிட்டது. ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தனியார் பள்ளி 9ம் வகுப்பு மாணவி, தன்னை பரமக்குடி நகர் அதிமுக அவைத்தலைவர் மற்றும் பரமக்குடி நகராட்சி கவுன்சிலரான சிகாமணி, மறத்தமிழர் சேனை நிறுவனத் தலைவர் புதுமலர் பிரபாகர், பார்த்திபனூரில் ரெடிமேட் கடை நடத்தும் ராஜா முகமது ஆகியோர் கடத்தி சென்று கட்டாயப்படுத்தி 26.12.22 முதல் 21.2.2023 வரை பார்த்திபனூர் அருகே உள்ள விடுதியில் வைத்து பலமுறை கூட்டு பலாத்காரம் செய்ததாக கூறியிருந்தார்.
இதையடுத்து சிகாமணி, புதுமலர் பிரபாகர், ராஜா முகமது மற்றும் உடந்தையாக இருந்த உமா, கயல்விழி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. கவுன்சிலர் சிகாமணிக்கு ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இது உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களுக்கு முரணாக உள்ளதாக கூறி சிகாமணியின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி சிபிசிஐடி தரப்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்யப்பட்டது. இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி ஜி.இளங்கோவன், சிகாமணிக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்தார். மேலும், அவரை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்கவும், சம்பந்தப்பட்ட வழக்கு விசாரணையை ராமநாதபுரம் மகளிர் நீதிமன்றத்தில் இருந்து, விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் நீதிமன்றத்திற்கு மாற்றியும் உத்தரவிட்டார்.
The post பள்ளி மாணவி கூட்டு பலாத்காரம்; அதிமுக கவுன்சிலர் ஜாமீன் ரத்து உடனே சிறையிலடைக்க உத்தரவு appeared first on Dinakaran.