×

லைட் ஹவுஸ் தொடங்கி 4.5 கி.மீ. தூரத்திற்கு பழவேற்காட்டில் நிரந்தர முகத்துவாரம்: அமைச்சர், எம்எல்ஏக்கள் படகில் சென்று ஆய்வு

பொன்னேரி: பழவேற்காட்டில் நிரந்தர முகத்துவாரம் அமைக்க அனுமதி வழங்குவது தொடர்பாக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் படகில் சென்று நேரில் ஆய்வு செய்தார்.பொன்னேரி அடுத்த பழவேற்காடு மீனவ மக்களின் வாழ்வாதாரமாக பழவேற்காடு ஏரியும், வங்காள விரிகுடா கடலும் இணையும் முகத்துவாரம் விளங்கி வருகிறது. முகத்துவாரம் அடைபட்டு மணல் திட்டுக்களாக மாறும் காலங்களில் எளிதில் படகுகளில் கடலுக்குள் செல்ல முடியாமலும், மீன்வளம், இறால் உள்ளிட்டவை கிடைக்காமல் மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். அவ்வப்போது அடைபடும் முகத்துவாரத்தை சொந்த செலவில் தற்காலிகமாக மீனவர்களே தூர்வாரி வரும் நிலையில் நிரந்தர முகத்துவாரம் ஏற்படுத்தி தர வேண்டும் என மீனவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து, கடந்த மாதம் ரூ.27 கோடி மதிப்பீட்டில் நிரந்திர முகத்துவாரம் அமைக்க தமிழக அரசு திட்டம் தயாரித்து பல்வேறு துறைகளின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.இந்நிலையில், ஒன்றிய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஒப்புதல் வழங்கிய நிலையில் கடந்த வாரம் பழவேற்காட்டில் நிரந்தர முகத்துவாரம் அமைக்க லைட் ஹவுஸ் பகுதியில் இருந்து முகத்துவாரம் வரையிலான 4.5 கி.மீ. வரையிலான நீரோட்ட வழிப்படுத்து சுவர் அடிக்கல் நாட்டு விழாவை திருவள்ளூர் எம்பி ஜெயகுமார், பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தனர். நிரந்திர முகத்துவாரம் அமைக்க வனத்துறை அனுமதி பெறுவதற்கான இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் நேற்றுமுன்தினம் மாலை படகில் சென்று பழவேற்காடு முகத்துவாரத்தில் நேரில் சென்று ஆய்வு செய்தார். பொன்னேரி எம்எல்ஏ துரை.சந்திரசேகர், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராசன், வனத்துறை அதிகாரிகள், மீன்வளத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகளுடன் ஆய்வு செய்தனர். முகத்துவாரத்தின் அவசியம் குறித்தும், முகத்துவாரம் அடைபடும் காலங்களில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் மீனவர்கள் வனத்துறை அமைச்சரிடம் முறையிட்டனர். விரைந்து அனுமதி பெற்று பணிகளை தொடங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதன் பிறகு அமைச்சர் மதிவேந்தன் நிருபர்களிடம் பேசியபோது, சுற்றுச்சூழல் தொடர்பாக அனுமதி பெற வேண்டி உள்ளதாகவும், தேசிய பசுமை தீர்ப்பாயம் மற்றும் மாநில வனத்துறை அனுமதி நிலுவையில் இருப்பதாகவும், நீதிமன்ற தீர்ப்பிற்கு ஏற்ப நிரந்தர முகத்துவாரத்திற்கு அனுமதி வழங்குவது குறித்து அதிகாரிகளிடம் சாதக பாதகங்களை கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். பழவேற்காடு ஏரியில் பாதுகாப்பற்ற படகு சவாரி சுற்றுலா நடைபெறுவது தொடர்பாக தற்போது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அது குறித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கடல் மணல் கொள்ளை குறித்தும் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இது சம்பந்தமாக உரிய துறை அதிகாரிகளிடம் பேசி அனுமதி பெற்று பணி தொடங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

* பணிகளை தடுக்க அதிமுக சதி
தமிழ்நாட்டில், கடந்த காலத்தில் அதிமுக ஆட்சி நடந்தபோது. திருவள்ளூர் எம்பி ஜெயகுமார் ஒன்றிய அரசிடம் போராடி பழவேற்காட்டில் லைட் ஹவுஸ்- முகத்துவாரம் வரையிலான 4.5 கீ.மீ. வரையிலான நிரந்த முகதுவார பணிகள் தொடங்க கோரிக்கை வைத்தார். இந்நிலையில், திமுக அரசு வந்தபிறகு அனுமதியும் கிடைத்தது. இதனை தொடர்ந்து, இந்த பணிகளுக்கான பூஜையும் கடந்த மாதம் நடந்தது. அப்போது, பழவேற்காடு பகுதியை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் ரகசிய கூட்டம் நடத்தினர். இதில், அனுமதி பெறாமலேயே பூஜை போட்டதாகவும் இந்த, பணி துவங்கினால் தடுத்து நிறுத்த வேண்டும் என இந்த ரகசிய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இது குறித்த தகவல், திருவள்ளூர் மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி கோவிந்தராஜன் எம்எல்ஏவுக்கு தெரிய வந்தது. திமுக ஆட்சி காலத்தில் மக்களுக்கு சாதகமான எந்த பணியும் தடுத்து நிறுத்த கூடாது என்ற அடிப்படையில் கோவிந்தராஜன், நேற்று முன்தினம் வனத்துறை அமைச்சர் மதிவேந்தனை அழைத்து வந்து, அவருடன் மீன் வளத்துறை, வனத்துறை மற்றும் பொதுபணித்துறை அதிகாரிகளும் வந்து பழவேற்காடு முகத்துவாரத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

The post லைட் ஹவுஸ் தொடங்கி 4.5 கி.மீ. தூரத்திற்கு பழவேற்காட்டில் நிரந்தர முகத்துவாரம்: அமைச்சர், எம்எல்ஏக்கள் படகில் சென்று ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Palavekkad ,Ponneri ,Forest Minister ,Mathiventhan ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த...