- உலக தாய்ப்பால் விழிப்புணர்வு பேரணி
- ஒருங்கிணைந்த சிறுவர் அபிவிருத்தித் திட்டம்
- செங்கல்பட்டு
- சிறுவர் அபிவிருத்தித் திட்டம்
- உலக தாய்ப்பாலூட்டும் வார
- தின மலர்
செங்கல்பட்டு: ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பில், உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடந்தது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் மூலம் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், 2023ம் ஆண்டு உலக தாய்ப்பால் வாரத்தையொட்டி, ‘தாய்ப்பால் ஊட்டலை சாத்தியமாக்குவோம், பணிபுரியும் பெற்றோரின் வாழ்வில் மாறுதலை உருவாக்குவோம்’ என்ற தலைப்பில் நடைபெற்று வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் தாய்ப்பால் ஊட்டுதலின் சதவீதத்தை மேம்படுத்த விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தும்படி தமிழக அரசால் அறிவுறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்டத்தில் தாய்மார்கள் மற்றும் மக்களிடையே தாய்ப்பால் ஊட்டுதலின் முக்கியத்துவம், தாய்ப்பால் வழங்குதல் மூலம் தாய் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் நன்மைகள் மற்றும் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நேற்று முன்தினம் ராஜேஸ்வரி வேதாச்சலம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த பேரணில் 100க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர் தாய்ப்பால் வழங்குதல் குறித்த பதாகைகளை ஏந்தி கலெக்டர் அலுவலகத்திலிருந்து ராஜேஸ்வரி வேதாசலம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வரை சென்றனர். மேலும், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு சத்துமாவு மற்றும் ஊட்டச்சத்து பெட்டகம், தாய்ப்பால் விழிப்புணர்வு சார்ந்த துண்டு பிரசுரங்களை மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வழங்கினார். இதற்கு முன்னதாக, தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் மாவட்ட கலெக்டர் தலைமையில் ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சற்குணா மற்றும் அரசு அலுவலர்கள், கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
The post ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பில் உலக தாய்ப்பால் விழிப்புணர்வு பேரணி: கலெக்டர் துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.