×

அரியானாவில் தொடரும் வன்முறை: 176 பேர் கைது, 93 வழக்குகள் பதிவு

குருகிராம்; அரியானாவில் ஒரே நாள் இரவில் 2 மத வழிபாட்டு தலங்கள் தீக்கிரையானது. மர்ம கும்பல் பெட்ரோல் குண்டு வீசியதால் இந்த சம்பவம் நடத்தி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அரியானா மாநிலம் நூஹ் மாவட்டத்தில் விஷ்வ இந்து பரிசத் ஏற்பாட்டில் கடந்த 31ம் தேதி நடந்த ஊர்வலத்தை, இன்னொரு தரப்பினர் வழிமறித்ததால் பயங்கர கலவரம் வெடித்தது. இதில் 6 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமான வாகனங்கள், கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதனால் உபி மற்றும் டெல்லி எல்லையோர மாவட்டங்களிலும் கலவரம் ஏற்பட்டுள்ளது. கலவரத்தை தடுக்க கூடுதல் ஒன்றிய படைகள் குவிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் அரியானாவில் வன்முறை நடந்த நூஹ் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு 2 வழிபாட்டு தலங்கள் திடீரென தீப்பற்றி எரிந்தன. நூஹ் பகுதியில் தீப்பிடித்து எரிந்த வழிபாட்டு தலங்களில் ஒன்று விஜய் சவுக் அருகிலும், மற்றொன்று காவல் நிலையத்திற்கு அருகிலும் அமைந்துள்ளது.

தீப்பற்றியதால் இரண்டு வழிபாட்டு தலங்களும் சிறிது சேதம் அடைந்தன. மர்ம கும்பல் தீ வைத்து எரித்ததா என்ற விவரம் தெரியவில்லை. இருப்பினும் மர்ம கும்பல் தீ வைத்து இருக்கலாம் என்ற கண்ணோட்டத்தில் போலீசார் விசாரித்து வருகிறார்கள். நூஹ் மாவட்ட எஸ்பி வருண் சிங்லா கூறுகையில், “ ஒருவழிபாட்டு தலத்துக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. மற்றொன்றில் மின்கசிவு ஏற்பட்டது தீ விபத்திற்கு காரணம் என்று தெரிகிறது. அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் போலீசார் நிலைமையைக் கட்டுப்படுத்தி சோதனை நடத்தி வருகின்றனர். இரண்டு இடங்களிலும் தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். மர்ம கும்பல் தீ வைத்து இருந்தால், அதை கண்டுபிடிக்க அருகில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் குற்றவாளிகளை அடையாளம் காண முயற்சி நடந்து வருகிறது’ என்று தெரிவித்தார்.

முன்னதாக, இரண்டு வழிபாட்டு தலங்கள் மீதும் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதாக போலீசார் கூறியுள்ளனர். மேலும் ஒரு கட்டிடத்தை சுற்றிவளைத்த 10 முதல் 15 பேர் அதை சேதப்படுத்த முயற்சி செய்ததாகவும், உரிய நேரத்தில் போலீசார் அங்கு சென்று அவர்களை விரட்டியடித்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கிடையே பல்வால் மாவட்டத்தில் உள்ள மினார் கேட் சந்தையில் அடையாளம் தெரியாத ஆசாமிகள் வளையல் கடைக்கு தீ வைத்தனர். இதனால் அரியானா,உபி, டெல்லி ஆகிய மாநிலங்களில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. குருகிராமில் நிசார் அலி மற்றும் அவரது சகோதரர் ருஸ்தம் அலி ஆகியோரை சுமார் 30 பேர் கொண்ட குழுவால் தாக்கப்பட்டனர். இவர்கள் இருவரும் மேற்கு வங்கத்தில் உள்ள மால்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். குருகிராமில் உள்ள பால்டா கிராமத்தில் உள்ள குடிசைப்பகுதியில் வசித்து வந்தனர். அவர்களை 30 பேர் கும்பல் தாக்கியது.

The post அரியானாவில் தொடரும் வன்முறை: 176 பேர் கைது, 93 வழக்குகள் பதிவு appeared first on Dinakaran.

Tags : Haryana ,Gurugram ,Ariana ,Dinakaran ,
× RELATED அரியானாவில் பேருந்து தீ விபத்து: 8 பேர் பலி