×

அம்மா மண்டபத்தில் ஆடிப்பெருக்கு கோலாகலம்: புதுமண தம்பதிகள் சிறப்பு வழிபாடு

திருச்சி: ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் உள்ளிட்ட காவிரி படித்துறைகளில் இன்று ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்துக்களின் முக்கிய திருவிழாக்களில் ஆடி 18 எனப்படும் ஆடிப்ெபருக்கு விழாவும் ஒன்று. இந்த நாளில் காவிரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாக காவிரிக்கு படையலிட்டு வழிபடுவது வழக்கம். தமிழ்நாடு முழுவதும் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டாலும் சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் துவங்கி காவிரி ஆற்றின் கரையோரங்களான மயிலாடுதுறை வரை அதிக உற்சாகத்தோடு இது கொண்டாடப்படும். புதுமண தம்பதிகள், திருமணமான பெண்கள், திருமணமாகாத கன்னி பெண்கள் ஆறு, குளக்கரைகளில் திரண்டு வழிபாடு செய்து மஞ்சள் கயிற்றை கழுத்தில் கட்டி கொள்வர். புதுமண தம்பதிகள் காவிரியில் நீராடி தங்களது திருமண மாலைகளை ஆற்றில் விட்டு வழிபடுவர்.

அதன்படி காவிரி பாயும் டெல்டா மாவட்டங்களில் இன்று ஆடிப்பெருக்கு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திருச்சி அம்மா மண்டப படித்துறையில் இன்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து காவிரி தாயை வணங்கி வழிபாடு செய்தனர். புதுமண தம்பதிகள், கன்னி பெண்கள், பொதுமக்கள் புனித நீராடினர். பின்னர் காவிரி தாய்க்கு படையலிட்டு மஞ்சள் கயிற்றை கட்டி கொண்டனர். புதுமண தம்பதிகள் தங்களது திருமண மாலைகளை ஆற்றில் விட்டனர். மேலும் பெண்கள் தாலி கயிற்றை மாற்றி புதிதாக கட்டி கொண்டனர். பின்னர் அம்மா மண்டப கரையில் உள்ள கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

இதேபோல் சிந்தாமணி ஓடத்துறை, தில்லையம்மன் படித்துறைகளில் இன்று காலை முதலே பக்தர்கள் திரண்டு வழிபாடு நடத்தினர். மேலும் கருடா மண்டபம், கீதாபுரம், சுப்பிரமணிய சுவாமி கோவில் படித்துறை, காந்தி படித்துறை, அய்யாளம்மன் படித்துறைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

அசம்பாவிதத்தை தடுக்கும் வகையிலும், காவிரியில் யாராவது அடித்து செல்லப்பட்டால் காப்பாற்றுவதற்காகவும் ரப்பர் படகில் தீயணைப்பு வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். ஆற்றில் 10 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் மற்றும் முதியோர் இறங்கி குளிக்க போலீசார் அனுமதிக்கவில்லை. சுற்றுலா தலமான முக்கொம்பு, கல்லணையிலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு வழிபாடு நடத்தியதுடன், பொழுதை கழித்தனர். இதைபோல் நாகை, மயிலாடுதுறை, தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

படையலில் என்னென்ன?
காவிரி கரைகளில் இன்று நடந்த வழிபாட்டில் வாழை இலையில் மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு, பூ, அரிசி, தேங்காய், வாழை பழங்கள், வெற்றிலை, மாவிளக்கு, பாக்கு, சூடம் ஆகிய பொருட்களை வைத்து படையலிட்டனர். பின்னர் பெண்கள் தாலியை பிரித்து கோர்த்து, புதிதாக கட்டி கொண்டனர்.

அம்மா மண்டபத்தில் வழிபட்டது மனநிறைவு
ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் இன்று வழிபாடு நடத்த வந்த திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை சேர்ந்த புதுமண தம்பதி சிவராமகிருஷ்ணன்- அபிநயா வாசுகி ஆகியோர் கூறுகையில், எங்களுக்கு திருமணமாகி 3 மாதங்களாகிறது. ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பிரசித்தி பெற்ற இடமாகும். ஆடிப்பெருக்கு வழிபாட்டை நமது முன்னோர்கள் பாரம்பரியமாக தொன்றுதொட்டு நடத்தி வருகின்றனர். அதனால் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்துக்கு வந்து படையலிட்டு வழிபாடு நடத்தினோம்.

எங்களுக்கு மகிழ்ச்சியையும், எல்லா வளங்களையும் கொடுக்க வேண்டுமென காவிரி தாயிடம் வேண்டிக்கொண்டோம். அம்மா மண்டபத்தில் அதிகளவில் பக்தர்களை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. பக்தர்கள் வசதிக்காக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். போதுமான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. எங்களது வாழ்க்கை இனிதே துவங்க அம்மா மண்டபத்தில் வழிபாடு செய்ததில் மிகுந்த மனநிறைவு அடைகிறோம் என்றனர்.

ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சீர்வரிசை
ஆடிப்பெருக்கு நாளான இன்று ஸ்ரீரங்கம் நம்பெருமாள், காவிரி தாயாருக்கு சீர்வரிசை கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதையொட்டி கோயில் மூலஸ்தானத்தில் இருந்து காலை 6.30 மணிக்கு தங்கப்பல்லக்கில் நம்பெருமாள் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி காலை 11.30 மணிக்கு அம்மா மண்டபம் ஆஸ்தான மண்டபத்துக்கு வந்தடைந்தார். இதையடுத்து நம்பெருமாளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு மாலை 4 மணி வரை பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

4.45 மணிக்கு காவிரி தாயாருக்கு பட்டுசேலை, மாலை, சந்தனம், தாம்பூலம் உள்ளிட்ட மங்கல பொருட்கள் சீர் கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதன்பின், நம்பெருமாள் அம்மா மண்டபத்தில் இருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு மேலஅடைய வளஞ்சான் வீதியில் உள்ள வெளி ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றி கொண்டு இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.

The post அம்மா மண்டபத்தில் ஆடிப்பெருக்கு கோலாகலம்: புதுமண தம்பதிகள் சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Adipperu Sphere ,Trichy ,Adipperu ,Kaviri hideas ,Sriranangam Mamma Hall ,
× RELATED ட்ராலி பேக் வீல்களின் ஸ்குரூக்களில் தங்கம் கடத்தல்