×

குப்பை சேகரிப்பதில் தகராறு; கூலி தொழிலாளிக்கு அடிஉதை: சக தொழிலாளி கைது

பெரம்பூர்: சென்னை கொடுங்கையூர் ஆர்.ஆர்.நகர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (40). இவர் கொடுங்கையூர் குப்பைமேடு பகுதியில் குப்பையை சேகரித்து பழைய இரும்பு கடையில் விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார். கொடுங்கையூர் ராஜரத்தினம் நகர் பகுதியை சேர்ந்த பிலிப்ஸ் (23) என்பவரும் அந்த குப்பை மேட்டில் குப்பை சேகரித்து வருகின்றார். இந்த நிலையில், இருவருக்கும் குப்பை எடுப்பதில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுவந்துள்ள நிலையில், நேற்று மதியம் கொடுங்கையூர் குப்பைமேடு அருகே ஆறுமுகம் குப்பைகளை எடுத்துக்கொண்டு வரும்போது அவரை வழிமறித்த பிலிப்ஸ் கடும் வாக்குவாதம் செய்துள்ளார்.

இரண்டு பேருக்கும் தகராறு முற்றிய நிலையில், அங்கு கிடந்த கல்லால் பிலிப்ஸ் தாக்கியதில் ஆறுமுகத்துக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயக்கம் அடைந்தார். உடனடியாக அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்து தலையில் 10 தையல்கள் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.இதுதொடர்பாக கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குபதிவு செய்து விசாரித்து நேற்று மாலை பிலிப்சை கைது செய்தார். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post குப்பை சேகரிப்பதில் தகராறு; கூலி தொழிலாளிக்கு அடிஉதை: சக தொழிலாளி கைது appeared first on Dinakaran.

Tags : Arumugam ,Kodunkaiyur RR Nagar ,Chennai ,Kodunkaiyur ,
× RELATED போக்குவரத்து தொழிலாளர் – போலீசார்...