×

டெல்டாவில் ஆடிப்பெருக்கு கோலாகலம்: புதுமண தம்பதிகள் சிறப்பு வழிபாடு

திருச்சி: டெல்டா மாவட்டங்களில் இன்று ஆடிப்பெருக்கு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்துக்களின் முக்கிய திருவிழாக்களில் ஆடி 18 எனப்படும் ஆடிப்ெபருக்கு விழாவும் ஒன்று. இந்த நாளில் காவிரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாக காவிரிக்கு படையலிட்டு வழிபடுவது வழக்கம். தமிழ்நாடு முழுவதும் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டாலும் சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் துவங்கி காவிரி ஆற்றின் கரையோரங்களான மயிலாடுதுறை வரை அதிக உற்சாகத்தோடு இது கொண்டாடப்படும்.

புதுமண தம்பதிகள், திருமணமான பெண்கள், திருமணமாகாத கன்னி பெண்கள் ஆறு, குளக்கரைகளில் திரண்டு வழிபாடு செய்து மஞ்சள் கயிற்றை கழுத்தில் கட்டி கொள்வர். புதுமண தம்பதிகள் காவிரியில் நீராடி தங்களது திருமண மாலைகளை ஆற்றில் விட்டு வழிபடுவர். அதன்படி காவிரி பாயும் டெல்டா மாவட்டங்களில் இன்று ஆடிப்பெருக்கு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நாகை புதிய கடற்கரை, வேதாரண்யம் ராமேஸ்வரம் கடற்கரை, வேளாங்கண்ணி கடற்கரைகளில் இன்று அதிகாலை முதலே பொதுமக்கள் திரண்டு வழிபாடு நடத்தினர். திருவாரூர் ஓடம்போக்கி ஆறு, வெட்டாறு, பாண்டவையாறு மற்றும் கமலாலய குளம் உட்பட பல்வேறு நீர்நிலைகளில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டது.

மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் புதுமண தம்பதிகள், கன்னி பெண்கள், பொதுமக்கள் திரண்டு அரிசி, பூ, மஞ்சள், குங்குமம், சந்தனம், பழங்களை வைத்து வழிபாடு நடத்தினர். புதுமண தம்பதிகள் திருமண மாலைகளை ஆற்றில் விட்டு மஞ்சள் கயிறு கட்டி கொண்டனர். பின்னர் கரையில் உள்ள காவிரி தாய் சிலைக்கு பூஜை செய்தனர். பூம்புகார் கடற்கரையில் இன்று காலை முதல் மக்கள் திரண்டு வழிபாடு நடத்தினர். தஞ்சை கல்லணை கால்வாய், வடவாறு, வெட்டாறுகளில் இன்று காலை படையலிட்டு காவிரி தாய்க்கு மக்கள் வழிபாடு நடத்தினர். திருவையாறு புஷ்ப மண்டப படித்துறைக்கு அதிகாலை 5 மணி முதல் பொதுமக்கள் சென்று காவிரி தாய்க்கு வழிபாடு செய்தனர்.
திருச்சி அம்மா மண்டப படித்துறைக்கு இன்று அதிகாலை முதலே திரளான பக்தர்கள் திரண்டு வந்து புனித நீராடி காவிரி தாயை வணங்கி வழிபாடு நடத்தினர்.

ஒகேனக்கல், மேட்டூர்: ஆடிப்பெருக்கு விழாவையொட்டி இன்று, ஒகேனக்கல் காவிரி, மேட்டூர் அணை மற்றும் நீர்நிலைகளில் ஒரு லட்சம் பேர் குவிந்தனர். அவர்கள் காவிரியில் புனித நீராடி, கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

பவானி கூடுதுறை: ஈரோடு மாவட்டத்தில் பவானி, காவிரி மற்றும் கண்ணுக்குத் தெரியாத அமுத நதியும் சங்கமிக்கும் பவானி கூடுதுறையில் ஆடிப்பெருக்கு விழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இதனை முன்னிட்டு, கூடுதுறை நுழைவாயில் இன்று அதிகாலை 4 மணிக்குத் திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடினர்.

ஈரோடு: இதே போல் ஈரோடு கருங்கல்பாளையம் காவிரிக்கரையில் அதிகாலை முதலே ஏராளமான மக்கள் தங்களது குடும்பத்துடன் வந்து, ஆற்றில் நீராடி வழிபாடு நடத்தினர். இதில், பொதுமக்கள் சிலர் வாழை இலையில் காதோலை கருகமணி, பழம், தேங்காய், வெற்றிலை பாக்கு வைத்து, காவிரி தாயையும், அவர்களது குலதெய்வத்தையும் வழிபட்டு, வீட்டில் இருந்து கொண்டு வந்த முளைபாரியை நீரில் விட்டனர்.

The post டெல்டாவில் ஆடிப்பெருக்கு கோலாகலம்: புதுமண தம்பதிகள் சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Addiperku Kogalam ,Adiperu ,Aadi 18 ,Hindus ,Aadi Pebar ,
× RELATED தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு...