×

மக்காச்சோளத்தில் படையெடுக்கும் படைப்புழுக்கள்

கட்டுப்படுத்த சில யோசனைகள்

மக்காச்சோளத்திற்கென்று உலகம் எங்கும் பெரும் வரவேற்பு உருவாகி இருக்கிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் சுவைத்துப் பார்க்கத் தூண்டும் இந்த மஞ்சள் நிறத் தானியம். பஸ் நிலையங்களில், ரயில் நிலையங்களில், கடற் கரைகளில் என எங்கும் மக்காச்சோளம் வியாபித்திருக்கிறது. மக்காச்சோளத்தை நேரடியாக சாப்பிடுவதை விட அதை சிப்ஸ், மாவு என மாற்றியும் பயன்படுத்தி வருகிறோம். மனிதர்கள் இப்படி சாப்பிடுவது ஒருபுறம். இது கால்நடைகளுக்கும் நல்ல தீவனமாக விளங்குகிறது. இதனால் மக்காச்சோளம் இப்போது ஆண்டு முழுவதும் சாகுபடி செய்யப்படும் பயிராக மாறியிருக்கிறது. தமிழ்நாட்டில் மக்காச்ேசாளம் சாகுபடி செய்யப்படும் விளைநிலங்களின் பரப்பு ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.

ஆனால் மக்காச்சோளத்தில் படைப்புழுக்களின் தாக்குதல் விவசாயிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. அவற்றை ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்துவது, மகசூல் இழப்பைத் தடுத்து, பொருளாதாரப் பாதிப்பில் இருந்து காக்க உதவும். படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து, திருவண்ணாமலை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சி.ஹரகுமார் சில தகவல்களை பகிர்ந்துகொண்டார். மக்காச்சோளப் பயிரைத் தாக்கும் படைப்புழுவை உரியநேரத்தில் கண்காணித்து, பரிந்துரை செய்யப்படும் மருந்துகளைப் பயன்படுத்தி கட்டுப்படுத்த முடியும். இந்தப்புழு மக்காச்சோள செடியின் குருத்துப் பகுதியில் சேதத்தை ஏற்படுத்தும். படைப்புழு உண்ணுவதால், வெளிவரும் இலைகள் வரிசையான சிறிய மற்றும் பெரிய வட்ட வடிவ அல்லது வடிவமற்ற துவாரங்களுடன் காணப்படும். சில செடிகளில் இலைகளின் மேல்பாகம் முற்றிலும் உண்ணப்படும். இப்புழுக்கள் உண்ணுவதால் சில இலைகள் மடிந்தும் காணப்படும். படைப்புழுக்கள் தண்டுப்பகுதியை துளைப்பதில்லை. மக்காச்சோள கதிர்களின் நுனி மற்றும் காம்புப் பகுதியை உண்ணும்.

தாய் அந்துப்பூச்சிகள் 100-200 முட்டைகளை குவியலாக இலைகளில் இட்டு, அதனை பழுப்பு நிற ரோமங்களால் மூடிவிடும். இந்த முட்டைகளிலிருந்து 2-3 நாட்களில் பச்சைநிற இளம் புழுக்கள் வெளிவந்து இளம் இலைகளின் பச்சையத்தை சுரண்டி சாப்பிடும். அதன்பிறகு, குருத்து இலைகளைச் சாப்பிடும். இந்தப்புழுக்கள் 14 முதல் 20 நாட்களில் முதிர்ச்சி அடைந்து மண்ணில் சென்று கூண்டுப்புழுவாக மாறிவிடும்.கூண்டுப்புழுக்களில் இருந்து 8-9 நாட்களில் தாய் அந்துப் பூச்சிகள் வெளிவந்து 10 முதல் 15 நாட்கள் உயிரோடு இருந்து முட்டைகளை இடும். தாய் அந்துப் பூச்சிகள் இரவுநேரங்களில் செயல் படும். ஆண் பூச்சிகளின் முன் இறக்கைகளின் நுனிப்பகுதியில் முக்கோண வடிவ வெள்ளைப்புள்ளி காணப்படும். பெண் பூச்சிகளில் முக்கோண வடிவ வெள்ளைப்புள்ளி இருக்காது.

ஆழமான கோடை உழவு செய்வதன் மூலம், இப்புழுவின் கூண்டுப்புழுக்கள் வெளியில் கொண்டு வரப்படுகிறது. அவற்றை, பறவைகள் கொத்தித் தின்று விடுவதால், வாழ்க்கைச் சுழற்சி தடுக்கப்படும். கடைசி உழவின் போது, 250 கிலோ வேப்பம் புண்ணாக்கு இட வேண்டும். இது கூண்டுப்புழு வெளிவருவதைத் தடுத்துவிடும். பிவேரியா பேசியானா எனும் பூஞ்சாணக் கொல்லி 10 கிராம் மருந்தை, ஒரு கிலோ மக்காச்சோள விதைக்கு என்ற அளவிலும் அல்லது இமிடாகுளோப்ரிட் 70 மி.லி அல்லது தயோமீத்தாக்ஸாம் 70 மி.லி மருந்தை ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் என்ற அளவில் கலக்க வேண்டும். மானாவரி மக்காச்சோளம் 45க்கு 20 செமீ என்ற இடைவெளியிலும், நீர் பாய்ச்சும் பயிர்களுக்கு 60க்கு 20 செ.மீ என்ற இடைவெளியிலும் விதைக்க வேண்டும். அருகருகே விதைத்தால் புழு விரைவாக பரவி அனைத்துச் செடிகளும் பாதிக்கப்படும்.

பத்து வரிசை விதைத்த பிறகு, 75 செ.மீ இடைவெளி விட வேண்டும். இதன் மூலம், பின்னாளில் பூச்சி மருந்து தெளிக்க வசதியாக இருக்கும். வயலைச் சுற்றி வரப்புகளில் சூரியகாந்தி, எள், சாமந்திப் பூ, உளுந்து அல்லது காராமணி போன்ற மஞ்சள் நிறப் பூக்கள் பூக்கும் செடிகளை வளர்க்க வேண்டும். அதன்மூலம், பூச்சிகளின் இயற்கை எதிரிகள் ஈர்க்கப்பட்டு, பூச்சிக் கட்டுப்பாட்டிற்கு உதவியாக இருக்கும். முட்டைக் குவியல்கள் மற்றும் வளர்ந்த புழுக்களை கைகளால் பெருக்கி அழிக்க வேண்டும். மக்காச்சோளம் நட்ட வயலில், மீண்டும் மக்காச்சோளம் நடக்கூடாது. ஊரில் உள்ள விவசாயிகள் ஒரே நேரத்தில் விதைப்புப் பணிகளை செய்ய வேண்டும்.கைத் தெளிப்பான் மூலம் மருந்து தெளிப்பதாக இருந்தால், கீழே குறிப்பிட்டுள்ள மருந்துகளில் ஏதேனும் ஒரு மருந்தைக் குறிப்பிட்ட அளவில் தெளிக்க வேண்டும்.

அசாடிராக்டின் 10000 பிபிஎம் 20 மிலி/ 10 லிட்டர்
தயோடிகாரப் 75 டபிள்யூபி 20 கிராம்/ 10 லிட்டர்
குளோரின் டிரனிலி புரோல் 18.5 எஸ்சி 3 மிலி/ 10 லிட்டர்
எமாமக்டின் பென்சோயேட் 5 எஸ்ஜி 4 கிராம்/ 10 லிட்டர்
ஸ்பெனிடோரம் 12 எஸ்சி 5மி.லி/ 10லிட்டர்
விசைத்தெளிப்பானை உபயோகித்தால் மட்டும் கீழே குறிப்பிட்டுள்ள மருந்தில் ஏதாவது ஒன்றை குறிப்பிட்ட அளவு தெளிக்க வேண்டும்.
அசாடிராக்டின் 10000பிபிஎம் 60மிலி/ 10 லிட்டர்
தயோடிகாரப் 75 டபிள்யூபி 60 கிராம்/ 10 லிட்டர்
பென்டைமைட் 480 எஸ்சி 9 மிலி/ 10 லிட்டர்
குளோரின்டிரனிலிபுரோல் 18.5 எஸ்சி 9 மிலி/ 10 லிட்டர்
எமாமக்டின் பென்சோயேட் 5 எஸ்ஜி 12 கிராம்/ 10 லிட்டர்
ஸ்பெனிடோரம் 12 எஸ்சி 15 மிலி/ 10 லிட்டர்
பூச்சிமருந்தை உபயோகிக்கும்போது, ஒரே பூச்சிமருந்தை மீண்டும் உபயோகிக்கக்கூடாது. பூச்சிமருந்தை செடியில் குருத்துப் பகுதியை நோக்கி தெளிக்க வேண்டும்.
தொடர்புக்கு:
சி.ஹரகுமார்,
வேளாண் இணை இயக்குனர்,
திருவண்ணாமலை மாவட்டம்.
செல்: 93611 10552

The post மக்காச்சோளத்தில் படையெடுக்கும் படைப்புழுக்கள் appeared first on Dinakaran.

Tags :
× RELATED மேற்கு மண்டல அதிமுகவில் உள்கட்சி...