×

ஆடிப்பெருக்கு தாலிப்பெருக்கு

ஆடிப் பெருக்கு – 3.8.2023

நதிகள் ஏற்றம் பெறும் மாதம் ஆடி மாதம். ஆடிப் பதினெட்டாம் பெருக்கு பற்பல நதி தீரங்களில் கொண்டாடப்பட்டாலும், அடிப்படையில் அந்நதிகளை காவேரி நதியாகக் கருதி, காவேரி நதிக்குச் செய்யும் சிறப்பாகவே புராணங்கள் கூறுகின்றன. தாமிரபரணி போன்ற நதி தீரங்களிலும் இவ்விழா சிறப்பாகவே கொண்டாடப்படுகின்றன.

காவிரியின் பெருமை

புராணப்படி காவேரி நதியில் அன்று மற்ற நதிகளும் இணைந்து புனிதம் பெறுகின்றன. எல்லா நதிநீர் நிலையிலும் காவேரி அன்று பிரசன்னமாகிறாள்.காவேரி என்பது கவேர மன்னனுடைய மகள் என்பதைக் குறிக்கும் சொல். காவிரி என்றும் சொல்வார்கள். கா என்றால் சோலை. விரி என்றால் பயிர்களைச் செழித்து வளரச்செய்து, என்று பொருள். தான் தோன்றிய இடத்திலிருந்து, கடலில் கலக்கின்ற இடம் வரை அத்தனை இடங்களிலும் பசுமையான சோலைகளை வளர்த்துச் செல்லுகின்றது காவிரி.

சிலப்பதிகாரத்தில் காவிரி

காவிரி கடலில் கலக்கும் இடத்திற்கு காவேரிப்பூம்பட்டினம் என்றுதான் பெயர். ‘‘சங்கு முகம்”, “சங்க முகம்” என்றெல்லாம் சொல்வார்கள். இளங்கோவடிகள் காவிரியின் சிறப்பைச் சிலப்பதிகாரத்தில் பதிவு செய்கிறார்.

‘‘பூவிரி மதுகரம் நுகரவும், பொருகயல்
இரு கரை புரளவும், காவிரி எனவரும்
மடநவீர் கனக நெடுங்கடை திறமினே’’

சிலப்பதிகாரத்தில் கானல் வரிப்பகுதியில், மாதவி பாடுவதாக உள்ள இரண்டு பாடல்களில் காவிரி, பெண்ணாக உருவகிக்கப்பட்டிருப்பதையும் காணலாம்!

மருங்கு வண்டு சிறந்தார்ப்ப மணிப்பூ ஆடை அதுபோர்த்துக்
கருங்கயற்கண் விழித் தொல்கி நடந்தாய் வாழி காவேரி
– என்று வாழ்த்து பாடுகிறார்.

புது வெள்ளம்தான் ஆடிப்பெருக்கு

ஆடி மாதத்தில்தான் தென்மேற்குப் பருவ மழை வலுவடைந்து காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் புது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வரும். அப்படி ஆடியில், காவிரி பெருக்கெடுத்து வருவதைத் தான் மக்கள் “ஆடிப்பெருக்கு” என்று கொண்டாடுகிறார்கள். ஆறு, மக்களின் ஜீவ நாடியாதலால், அதில் ஆடி மாதம் புதுநீர் வருவதைக் கொண்டாடுவது பல நூற்றாண்டுகளாகத் தமிழர் மரபாகப் பின்பற்றப்படுகிறது. காவிரிக் கரையோரங்களில் இந்த விழா களைகட்டும். பிராயச்சித்தம் செய்து கொள்ளசாஸ்திரம் ஒரு ஸ்லோகத்தில், காவிரி அனைத்து பாபங்களையும் தீர்த்து புனிதமாக்குகிறது என்பதைச் சொல்கிறது.

அந்நிய ஷேத்ரே க்ருதம் பாவம்
புண்ணிய ஷேத்ரே விநச்யதி
புண்ணிய ஷேத்ரே க்ருதம் பாவம்
வாரணாச்யம் விநச்யதி
வாரணாச்யம் க்ருதம் பாவம்
கும்பகோனே விநச்யதி
கும்பகோனே க்ருதம் பாவம் காவேரி ஸ்நானே விநச்யதி

இதன் பொருள்: ஒருவன் எந்த ஊரில் பாவம் செய்திருந்தாலும், அதற்குப் பிராயச்சித்தமாக, அவன் புண்ணிய திருத்தலங்களில் பாவ விமோசனம் பெறலாம். புண்ணிய திருத்தலங்களில் பாவம் செய்தால், அதைக் காசிக்குச் சென்று பரிகாரம் செய்யலாம். காசியில் ஒருவன் பாவம் செய்தால், புனித நகரமாகிய கும்பகோணத்தில் வந்து பாவவிமோசனம் தேடலாம். ஆனால், கும்பகோணத்திலேயே ஒருவன் பாவம் செய்துவிட்டால், அதைக் காவேரி நதியில் தீர்த்தமாடி பிராயச்சித்தம் செய்து கொள்ளலாம்.

காவிரி அன்னைக்குச் சீர்

‘ஆடிப்பெருக்கு அன்று காவிரி அன்னைக்கு சீர் செய்து வணங்குவது வழக்கமாக உள்ளது. இந்த நாளில் அனைத்து நீர்நிலைகளிலும் அன்னை காவிரி எழுந்தருளியிருப்பாள்’ என்பது ஐதீகம்.

ஆடிப்பெருக்கு திருவிழா ஸ்ரீரங்கம் அம்மா மண்டபப் படித்துறையில் விமரிசையாக நடைபெறும். அப்போது பெருமாள் அம்மா மண்டபத்துக்கு எழுந்தருள்வார். யானையின் மீது சீர்வரிசை கொண்டு வந்து, கங்கையினும் புனிதமான காவிரிக்கு, சகல மரியாதையுடன் சமர்ப்பிக்கும் வைபவம் காணக் காணப் பரவசம். ஸ்ரீரங்கத்தில் இந்த ஸ்லோகம் தினசரி சொல்லப்படுகிறது.

“காவேரீ வர்த்ததாம் காலே காலே
வர்ஷது வாஸவ:
ஸ்ரீரங்கநாதோ ஜயது ஸ்ரீரங்க ஸ்ரீஸ்ச வர்த்ததாம்”

இதன் பொருள்: திருக்காவேரியானது (பயிர்களுக்கு) வேண்டிய காலங்களில் பெருகட்டும். வேண்டிய காலங்களில் இந்திரன் மழை பொழியட்டும். ஸ்ரீரங்கநாதன் வெற்றிபெற்று வாழட்டும்.

திருவரங்கச் செல்வம் வளரட்டும்!
வாமன அவதாரமும் காவிரியும்

காவேரியின் சிறப்பை ஸ்ரீபிரம்ம சம்ஹிதை விளக்குகிறது. ஆடிமாதத்திற்கு உரிய அதிதேவதை வாமனன். வாமனன் மகாபலியிடம் மூன்றடி மண் கேட்டுப் பெற்றார். அதை அளக்கும்போது விண்ணுக்கும் மண்ணுக்கும் திரிவிக்கிரமனாக உயர்ந்தார். அப்பொழுது அவருடைய திருவடி அண்ட முகடுகளைப் பிளந்துக் கொண்டு அப்பால் சென்றது. விண்ணிலுள்ள ஒரு பிலத்தை அவருடைய கால் விரல் தீண்டியது. அது பிளந்து அங்கிருந்த தீர்த்தம் அவன் திருவடி தீண்டி வெளியே வழிந்து பிரம்மலோகத்தில் விழுந்தது. பிரம்மன் அதை புனித நீராகக் கருதி தன் கமண்டலத்தில் வைத்துக் கொண்டான்.

சப்தநதிகளில் நீராடிய புண்ணியம்

அந்த நதிகளே கங்கை, கோதாவரி, யமுனை, சரஸ்வதி, நர்மதை, சிந்து, காவேரி, என ஏழு நதிகளாகப் பிரிந்தது. அதை வைத்தே பின்வரும் ஸ்லோகம் கும்ப ஆவாஹனத்தில் ஓதப்படுகிறது.

‘கங்கேச யமுனா சைவ கோதாவரி சரஸ்வதி
நர்மதா சிந்து காவேரி ஜலேஸ்மின்
சந்நிதம் குரும்’.

கிழக்கு அல்லது வடக்கு முகமாக நின்று, இந்த ஸ்லோகத்தைச் சொல்லி விட்டு, நீராடினால் சாதாரண குளியல்கூட புனித தீர்த்தங்களில் நீராடிய புண்ணியத்தைத் தரும். இந்த சப்த நதிகளை அனைத்து முனிவர்களும் தேவர்களும் பூஜைசெய்தனர். இப்படிப் பெருக்கெடுத்து ஓடிய நீர்ப்பெருக்கு ஆடிப்பெருக்கு ஆகியது. இதை முறையாகக் கொண்டாட வேண்டும் என்று ஆகமங்களில் சொல்லப்பட்டிருக்கின்றது.

சில வைணவத் திருத்தலங்களில் பதினெட்டாம் பெருக்கு

சில வைணவத் திருத்தலங்களில் பதினெட்டாம் பெருக்கு அன்று பெருமாளை பல்லக்கில் எழுந்தருளச் செய்கின்றனர். காரணம் பெருமாளுக்குத் “தீர்த்தன்” என்கின்ற பெயர் உண்டு. அவன் ஸ்பரிசம் பட்டு நதிகள் புனிதத்துவம் பெறுகின்றன. நதிதீரத்திலே எழுந்தருளச்செய்த பெருமாளுக்கு முன்புறம் தானியத்தைப் பரப்பி 9 கும்பங்களை வைக்கின்றனர். அவற்றை அலங்கரித்து அதில் நதிகளை ஆவாஹனம் செய்கின்றனர். புண்யாகவாசனம் செய்து தீர்த்தத்தை புரோட் சனம் செய்கின்றனர்.

காவிரியை மந்திரப்பூர்வமாக வரவழைத்து, எம்பெருமான் திருவடி தொட்டு, கும்பத்தில் ஆவாஹனம் செய்வதாகப் பாவித்து பூஜை செய்கின்றனர். பெருமாள் திருவடி ஸ்பரிசம் பட்ட நீருக்கு முறையான திருவாராதனம் நடத்தப்பட்டு, புண்ணிய நீராக்கி, நதிகளில் எம்பெருமான் மாலை பிரசாதத்தோடும் மங்கலப்பொருட்களோடும், திருவடித் தீர்த்தமாக, சேர்க்கப்படுகிறது. அதற்குப் பிறகு பெருமாளுக்கு திருமஞ்சனம் நடக்கிறது.

பெண்களுக்கு மங்கலத் திருவிழா

பூமாதேவி அவதரித்த இந்த ஆடியில்தான் எல்லா நதிகளும் புனிதம் பெறுகின்றன. அதனால்தான் நதிக்கரையில் சென்று பெண்கள் பூஜை செய்து நலம் பெறுகின்றனர். பூஜையின் மூலம் சகல தோஷங்களும் நீங்குகின்றன. புதுமணத்தம்பதிகள் ஆடிப் பால் வைப்பதும் இந்த மாதத்தில்தான்.

முளைப்பாலிகை

ஆடி பதினெட்டிற்கு சில நாட்களுக்கு முன்பாக நவதானியங்களை முளைப்பாலிகையாக (பாலிகைத்தட்டுகளில்) வைப்பார்கள். ஆடி 18 அன்று பிற்பகல் வேளையில் முளைப்பாலிகையை ஏந்தி ஊர்வலமாக ஆற்றுக்குச் செல்வர். ஆற்றங்கரையில் பசுஞ்சாணத்தில் பிள்ளையார் பிடித்து வைப்பர். முளைப்பாலிகைகளை வரிசையாக வைப்பார்கள். தலைவாழையிலையில் பச்சரிசி, வெல்லம் போட்டுக் கலந்து, படைப்பார்கள். காதோலை கருகமணி, வளையல்கள், தாம்பூலம், எலுமிச்சங்கனி, விளாம் பழம், நாவற்பழம், வாழைப்பழம், பூச்சரம் இவற்றுடன் காப்பரிசியும் படைத்து, தீபம் ஏற்றி, தேங்காய் உடைத்து, கற்பூரங்காட்டி வணங்குவார்கள்.

ஆடிப்பெருக்கு தாலிப்பெருக்கு

அன்றைய தினம் சுமங்கலிகள் தாலிக் கயிறை மாற்றுவார்கள். திருமணம், சஷ்டி-யப்த பூர்த்தி, பீமரதசாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம் உள்ளிட்ட ஐந்துமுறை மாங்கல்யத்தை அணிந்துகொள்ளும் பாக்கியத்தைப் பெற காவேரியை வேண்டிக்கொண்டு ஆடி 18-ஆம் பெருக்கு அன்று தாலி மாற்றிக் கொள்கின்றனர். வயதான சுமங்கலி ஒருவர், அங்கு வந்திருக்கும் பெண்களுக்கு மஞ்சள் தடவிய நூலைக் கொடுப்பார்.

சிலர் கைகளிலும், சிலர் கழுத்திலுமாகக் கட்டிக் கொள்வார்கள். அதன்பின், அவரவர் கொண்டு வந்த முளைப்பாலிகை, பனை ஓலைகளால் செய்யப்பட்ட வட்டமான காதோலை, கருகமணி ஆகியவற்றை நீரில் விடுவர். படைக்கப்பட்ட பச்சரிசி, வெல்லக் கலவையை வந்திருப்பவர்களுக்கு வழங்குவார்கள். சிலர் தேங்காய்ச் சாதம் முதலான சித்ரான்னங்களைக் கொண்டு வந்து, ஆற்றங்கரையில் அமர்ந்து உண்பார்கள். ஆடிப் பதினெட்டு மகிழ்ச்சி, அனைத்துத் தினங்களிலும் நீடிக்கும்
என்பது காலம் காலமாக உள்ள நம்பிக்கை.

தொகுப்பு: நாகலட்சுமி

The post ஆடிப்பெருக்கு தாலிப்பெருக்கு appeared first on Dinakaran.

Tags : Aadi Peruku ,Peru ,Adippala River ,Talipperuku ,Dinakaran ,
× RELATED பெருவில் 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த 5...