×

ஒடிசாவில் புதிய அனல்மின் நிலையத்தை அமைக்கிறது என்எல்சி நிர்வாகம் : தமிழகத்திற்கு 1,450 மெகாவாட் கிடைக்கும்

புவனேஸ்வர் : ஒடிசாவில் 2,400 மெகாவாட் தயாரிப்பு திறன் உள்ள புதிய அனல் மின் நிலையம் அமைக்க என்எல்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. தமிழகத்தைத் தலைமையிடமாக கொண்ட என்எல்சி (நெய்வேலி பழுப்பு நிலக்கரி) நிறுவனம், மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. இந்த நிறுவனம் மூலம் வருடம் முழுக்க 30 மில்லியன் டன் லிக்னைட் எடுக்கப்படுகிறது.என்எல்சி நிறுவனத்திற்கு நெய்வேலியில் 3 நிலக்கரி சுரங்கமும் ராஜஸ்தான் மாநிலம் பர்சிங்சார் மற்றும் ஒடிசாவின் தலபிராவில் தலா 1 நிலக்கரி சுரங்கமும் உள்ளது.இந்த நிலையில், ஒடிசாவின் தலபிரா பகுதியில், அமைந்துள்ள சுரங்கத்திற்கு அருகே புதிய அனல் மின் நிலையம் அமைக்க என்எல்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

2,400 மெகா வாட் தயாரிப்பு திறனுடன் ரூ.19,422 கோடி முதலீட்டில் இந்த அனல் மின் நிலையம் அமைக்கப்படும் என்றும் தலா 800 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 3 அலகுகள் அமைக்க உள்ளதாகவும் நிலக்கரி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் பணிகள் இவ்வாண்டு இறுதிக்குள் தொடங்கி 2028 -2029க்குள் முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆலையில் இருந்து தமிழகத்திற்கு 1,450 மெகாவாட் மின்சாரமும் புதுச்சேரிக்கு 100 மெகா வாட் மற்றும் கேரளாவிற்கு 400 மெகாவாட் மின்சாரமும் வழங்கப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. இத்திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்துதல் மற்றும் இதர ஒப்புதல்கள் இறுதிக்கட்டத்தில் உள்ளன.

The post ஒடிசாவில் புதிய அனல்மின் நிலையத்தை அமைக்கிறது என்எல்சி நிர்வாகம் : தமிழகத்திற்கு 1,450 மெகாவாட் கிடைக்கும் appeared first on Dinakaran.

Tags : NLC administration ,Odissa ,Tamil Nadu ,Bhubaneswar ,Odisha ,NLC ,
× RELATED தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய...