×

சாப்பிடுறவங்களோட வயிறும், மனசும் நிறையணும்!

 

சமையல் கலைஞர் ஜெய்மாஹி ஜெயராமன்

வசீகரா என்ற படத்தில் `மேரேஜி என்றால் வெறும்பேச்சு இல்ல மீனாட்சி சுந்தரேசா’ என்ற ஒரு பாடல் வரும். கிராமங்களில் நடைபெறும் திருமணத்தின் ஒவ்வொரு காட்சியையும் நமக்கு அப்படியே நினைவுபடுத்தும் அந்தப் பாடல். திருமணத்தையொட்டி நடைபெறும் அத்தனை நிகழ்ச்சிகளும் நமக்கு எப்போதும் பசுமையாக இருக்கும். இதனால் திருமணத்திற்கு முன்னதாக பந்தக்கால் நடுவதில் தொடங்கி பந்தி வரை அனைத்து வைபவங்களுக்கும் அதி முக்கியம் தருகிறோம். இதில் எந்தப் பகுதியில் குறை இருந்தாலும் ஓரளவு சமாதானம் ஆகிவிடுவோம். ஆனால் சாப்பாடு விசயத்தில் ஒரு சிறு குறை இருந்தாலும் மிகப்பெரிய பிரச்னையாகிவிடும். சில இடங்களில் அடிதடி கூட ஏற்படுவது உண்டு. அந்தளவுக்கு திருமண வைபவத்தில் சாப்பாட்டுக்கு முக்கிய இடத்தை வழங்கி வருகிறோம். திருமணம் என்று முடிவானவுடன் யார் சாப்பாடு என்று கேட்கும் பழக்கம் கூட இப்போது வந்துவிட்டது. சிலரது பெயரைக் கேட்டாலே சாப்பாடு ரொம்ப நல்லா இருக்குமே என சொல்வார்கள். அப்படி ஒரு பெயர்தான் ஜெய்மாஹி ஜெயராமன்.

மத்திய தொழிலக பாதுகாப்புப் படையில் (CISF) பணிபுரிந்த இவர் இந்த தொழிலுக்காகவே அரசு வேலையைத் துறந்தவர். அதன்பயனாக இப்போது தமிழகத்தின் முக்கிய கேட்டரிங் நிபுணராகி இருக்கிறார். சாதாரண குடும்பங்கள் தொடங்கி பெரிய பெரிய விஐபிக்களின் குடும்பங்களில் நடைபெறும் சுபநிகழ்ச்சிகளுக்கு சுவை தரும் பொறுப்பை ஏற்கிறார். அமெரிக்காவிலும், டெல்லியிலும் நல்ல வருமானம் பெற்றுக்கொண்டிருந்த இவரது தம்பிகளும் இன்று இவரது கேட்டரிங் தொழிலுக்கு தூண்களாகி இருக்கிறார்கள். மடிப்பாக்கத்தில் உள்ள வீட்டில் ஒரு மதியப்பொழுதில் ஜெய்மாஹி ஜெயராமனை சந்தித்தோம். தொழிலுக்கு வந்த கதை, இப்போது தொழிலில் ஏற்படும் மாற்றங்கள் என பல விசயங்களைப் பகிர்ந்துகொண்டார்.“ கும்பகோணம் நாச்சியார்கோயில்தான் எங்க சொந்த ஊரு. 1983 – 89ல சிஐஎஸ்எப்ல வேலை செஞ்சேன். இதனால் சென்னையில குடும்பத்தோட இருந்தோம். 1987ம் வருசத்துல மேற்கு மாம்பலத்தில தேங்காய் கடை வச்சேன்.

அந்த சமயத்துல தாசில்தாரா இருந்த ராதாகிருஷ்ணன் அடிக்கடி எங்க கடைக்கு வருவாரு. அவரு வரப்ப எல்லாம் ஏதாவது அறிவுரைகளை சொல்லுவாரு. அப்படித்தான் ஒரு நாளு, ` இந்த காலம் கிராமத்து மக்கள் எல்லாம் நகரத்தை நோக்கி வர்ற காலமாக இருக்கு, அப்படி வரவங்க கல்யாண மண்டபத்திலதான் கல்யாணம் பண்றாங்க. அதுக்கு மண்டபத்துல சாப்பாடு போட வேண்டியிருக்கு. அதனால சமையல் தொழில் பண்ணா நல்லா வரும்’னு ஐடியா கொடுத்தாரு. இது நல்லா இருக்கேன்னு சமையல் தொழில்ல இறங்கலாம்னு முடிவு பண்ணேன். இதுக்காக நான் பார்த்த வேலைய விட்டுட்டு சமையல் தொழிலுக்கு வந்தேன். சமையல கத்துக்கணும்னா முதல்ல சப்ளையரா இருக்கணும்னு முடிவு பண்ணி சப்ளையர் வேலைக்குப் போனேன். அப்புறமா சமைக்க ஆரம்பிச்சேன். போகப்போக நல்லா சமைக்க ஆரமிச்சி நானே ஆர்டர் எடுக்க ஆரம்பிச்சேன். என்னோட சமையல் பிடிச்சி போயி ராஜா அண்ணாமலை மன்ற உரிமையாளர் வீட்டு கல்யாணத்துக்கு ஆர்டர் கொடுத்தாங்க.

திருப்பதியில நடந்த இந்த கல்யாணத்துல சாப்பாடு ரொம்ப நல்லா இருந்துச்சி. இதுல சாப்பிட்ட நாலஞ்சி பேரு என்னோட விசிட்டிங் கார்டை வாங்கிட்டு போனாங்க. அதுல இருந்து சிலர் மாம்பலம், திருத்தணின்னு சமைக்க கூப்பிட்டாங்க. எல்லா இடத்திலயும் சாப்பாடு நல்லா இருக்குன்னு பேர் வாங்குனோம். சமையல் ஆர்டர் நிறைய வந்ததால என்னோட அரசு வேலை, தேங்காய்க்கடை எல்லாத்தையும் இழுத்து மூடிட்டு முழுசா சமையல் தொழில்ல இறங்கிட்டேன். எழுத்தாளர் சாவியோட கல்யாணம் கலைஞர் தலைமையில் நடந்துச்சி. அதுல எங்க சமையல்தான். எழுத்தாளர் தேவிபாலா உள்ளிட்ட எழுத்தாளர்கள் வீட்டு கல்யாணத்திலயும் சமைச்சிருக்கோம். சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில ஒருசமயம் அப்துல்கலாம் கலந்துகிட்ட மாநாடு நடந்துச்சி. அப்போ 10 ஆயிரம் பேருக்கு சமைச்சி போட்டோம். வந்தவுங்க எல்லோரும் சாப்பாடு நல்லா இருக்குன்னு சொன்னாங்க. ஒரு தடவை திருப்பதில நடந்த பிரம்மோற்சவத்துக்கு 10 நாள் சமைச்சிக்கொடுக்கும் பாக்கியம் கிடைச்சிது.

ஒரு நாளைக்கு 25 ஆயிரம் பேருக்கு சாப்பாடு. சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல், புளிசாதம், தயிர்சாதம் கூட உண்டு. சாமி பார்க்க வந்து லைன்ல நிக்கிறவுங்களுக்கும் இந்த சாப்பாடு உண்டு. எல்லோர் மனசையும் நிறைச்சது போல இருந்தது. நாங்க சமைக்கப்போற குடும்பங்களோட எப்பவும் எங்களுக்கும் உறவு இருக்கும். கல்யாணம் முடிஞ்சிது. நம்ம வேலை முடிஞ்சிதுன்னு இருக்க மாட்டோம். எங்களோட சுவையும், பரிமாறுகிற அன்பும் அவங்க கிட்ட நிச்சயம் அன்பை சம்பாதிச்சி கொடுக்கும். அவங்களோட வயிறும், மனசும் நிறைஞ்சாதான் நமக்கு நிம்மதி கிடைக்கும். அவங்களோட மன நிறைவுதான் நம்மள வாழ வைக்குதுங்குறதுல எப்பவும் உறுதியா இருக்கோம். எந்த விசேசத்தில சமைச்சாலும், சாப்பிட்டவங்க கை கழுவுற இடத்தில நின்னு அவங்க என்ன பேசிக்கிறாங்கன்னு கேட்டுப்பேன். சாப்பிடுறவங்க பெரும்பாலும் கை கழுவுற இடத்திலதான் சாப்பாட்டைப் பத்தி பேசுவாங்க. அங்கதான் மனசுவிட்டு சாப்பாடு எப்படி இருந்ததுன்னு சொல்லுவாங்க.

அப்போ அவங்க என்ன சொல்றாங்கன்னு கேட்டு விமர்சனம் இருந்தா சரிபண்ணிப்பேன். இதுவரைக்கும் 1320 நிகழ்ச்சிகள்ல சமையல் பண்ணியிருக்கேன். அதில 1100 கல்யாணத்தில சமைச்சிருக்கேன். அவங்க எல்லோர் கூடவும் இன்னும் நட்பா இருக்கேன். அவுங்க கேட்குற மாதிரி சமைச்சி கொடுப்போம். பிசிபலாபாத்தும், கும்பகோணம் தயிர்சாதமும் எங்களோட ஸ்பெஷல் ஐட்டமா இன்னிக்கும் இருக்கு. இதில கும்பகோணம் தயிர் சாதம் ரொம்ப ஸ்பெஷல். தாளிப்பு, கருவேப்பிலை, இஞ்சி, பச்சை மிளகாய், மாங்காய் துருவல்னு ரொம்ப டேஸ்ட்டியா இருக்கும். சாப்பிடுறவங்க இன்னும் கொஞ்சம் கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க. என்னோட தம்பி வெங்கட்ராமன் அமெரிக்காவுல இருந்தாரு. இன்னொரு தம்பி ரமேஷ் டெல்லியில அட்வர்டைசிங் கம்பெனில வேலை பாத்தாரு. அவங்க ரெண்டு பேருமே அந்த வேலைகளை விட்டுட்டு என்னோட வந்துட்டாங்க. 20 வருசம் ஆளுக்கொரு மூலையில பிரிஞ்சிகிடந்த எங்க குடும்பத்தை சேர்த்து வச்சதே இந்த சமையல் தொழில்தாங்க’’ என நெகிழ்ச்சியுடன் பேசி முடிக்கிறார்.

– அ.உ.வீரமணி
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்

தொழிலாளர்களுக்கு பரிசு

ஆடி மாதங்கள் பெரிய அளவுக்கு விசேசங்கள் இருக்காது. அந்த சமயங்களில் தங்கள் குழுவில் பணியாற்றும் தொழிலாளர்களை சுற்றுலா அழைத்து செல்கிறார் ஜெயராமன். அப்போது அவர்கள் விரும்பும் ஊர்களுக்கு அழைத்து சென்று மகிழ வைக்கிறார். ஆண்டுதோறும் சிறப்பாக பணியாற்றும் தொழிலாளர்களுக்கு 2 கிராம் மோதிரமும் பரிசளிக்கிறார். இவரிடம் பழைய ஆட்களும் இருக்கிறார்கள். இப்போது இளைய தலைமுறையும் சமையலுக்கு வந்திருக்கிறது. எல்லோருக்கும் இந்த சலுகை உண்டு. எனக்கு சோறிடும் அன்னபூரணி இவர்கள்தான், இவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பது எனது கடமை என்கிறார் ஜெயராமன்.

ஏ டூ இசட் சேவை

திருமணத்திற்கு சமையல் மட்டுமில்லாமல் வேறு சில பணிகளையும் கான்ட்ராக்ட் முறையில் செய்து கொடுக்கிறார் ஜெயராமன். மங்கள வாத்தியம், மண்டபத்தில் கோலம் போடுதல், மாலை, சீர் பட்சணங்கள், அங்குமணி சாமான்கள், தாம்பூலப்பை, மடி சமையல், கட்டு சாதம், வாழை மரம், குதிரை வண்டி, ஜெனரேட்டர் லைட், திருமணப்பதிவு உள்ளிட்ட அனைத்து பொறுப்பு
களையும் ஏற்று முடித்து தருகிறார்.

The post சாப்பிடுறவங்களோட வயிறும், மனசும் நிறையணும்! appeared first on Dinakaran.

Tags : Jaimahi Jayaraman Vasikara ,`Mereji ,Suntaresa ,
× RELATED பிரபலமாகி வரும் வாக்-இன் திருமணங்கள்!