×

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்பான டெண்டர் முறைகேடு வழக்கில் 6 வாரத்தில் நிறுவனங்கள் மீது குற்றப்பத்திரிகை: லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தொடர்பான டெண்டர் முறைகேடு வழக்கில் தொடர்புடைய நிறுவனங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை 6 வாரத்தில் தாக்கல் செய்யுமாறு லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட்டுள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரி அறப்போர் இயக்கம் மற்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இதில் டெண்டர் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி.பொன்னி ஆரம்ப கட்ட விசாரணை நடத்தி தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் வழக்கை கைவிடுவது என்று அதிமுக அரசு முடிவு செய்தது. இந்நிலையில் தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை அடுத்து, முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக டெண்டர் முறைகேடு தொடர்பாகவும், வருமானத்துக்கு அதிகமாக 58 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாகவும் குற்றம் சாட்டி இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி வேலுமணி தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் ஆர்.எம்.டி.டீக்காராமன் அடங்கிய அமர்வு, டெண்டர் பணிகளில் முறைகேடு தொடர்பான புகாரில் வேலுமணி மீதான வழக்கை மட்டும் ரத்து செய்து உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய எம்.எஸ். கன்ஷ்ட்ரோனிக்ஸ் இன்ஃப்ரா லிமிடெட், ஆலம் கோல்டு அண்ட் டைமன்ட் லிமிடெட், ஆலயம் பவுண்டேஷன், வைதூரியா ஹோட்டல், ரத்னா லட்சுமி ஹோட்டல் மற்றும் கண்ஷ்ட்ரோ மால் குட்ஸ் ஆகிய நிறுவனங்கள் தங்கள் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரி தனித்தனியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அதில், எஸ்.பி. வேலுமணி மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர் பொது ஊழியர் அவருக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்பதால் தங்கள் மீதான வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டுமென்று கோரியிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த நிறுவனங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய எதிர்ப்பு தெரிவித்து அறப்போர் இயக்கம் சார்பில் இடையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அறப்போர் இயக்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுரேஷ், இந்த நிறுவனங்களுக்கு முறைகேட்டில் தொடர்புள்ளது என்றும் அதற்கான ஆதாரங்கள் உள்ளதாக தெரிவித்தார். அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ் திலக் ஆஜராகி, இந்த வழக்கில் இறுதி விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகை தயாராக இருப்பதாக கூறினார். வழக்கை விசாரித்த நீதிபதி அளித்த உத்தரவு வருமாறு: விசாரணை அதிகாரி வழக்கின் இறுதி அறிக்கையை தயாரித்துள்ளார். இதில் ஆதாரங்கள் கிடைக்காத சில நிறுவனங்கள் வழக்கிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.

இந்த முறைகேட்டில் சில அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதால் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார். இதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரியின் அனுமதிக்காக காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கின் இந்த முன்னேற்றத்தை கருத்தில்கொண்டு எப்ஐஆரை ரத்து செய்ய முடியாது. சம்மந்தப்பட்ட நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு துறை இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய அனுமதிக்கப்படுகிறது. எந்த நிறுவனங்களின் பெயர் இறுதி அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது எந்த நிறுவனங்களின் பெயர் நீக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தெரிந்துகொள்ள மனுதாரர்கள் காத்திருப்பது அவசியமாகிறது. எனவே லஞ்ச ஒழிப்பு துறை, முறைகேட்டில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளையும் இறுதி அறிக்கையில் சேர்ப்பதற்காக சம்மந்தப்பட்ட அதிகாரியிடம் அனுமதி பெற்று சம்மந்தப்பட்ட நீதிமன்றத்தில் 6 வாரங்களுக்குள் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

The post முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்பான டெண்டர் முறைகேடு வழக்கில் 6 வாரத்தில் நிறுவனங்கள் மீது குற்றப்பத்திரிகை: லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Former Minister S. GP ,iCort ,Chennai ,Former minister ,SP Velani ,iCourt ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...