×

தமிழகத்தில் 4 நாள் பயணமாக குடியரசு தலைவர் 5ம் தேதி வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

சென்னை : தமிழகத்துக்கு முதன்முறையாக 4 நாள் அரசுமுறை பயணமாக குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வரும் 5ம் தேதி சென்னைக்கு வருகிறார். இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பொறுப்பேற்ற பிறகு, தமிழகத்துக்கு 4 நாட்கள் அரசு முறை பயணமாக சென்னைக்கு வருகை தருகிறார். 5ம் தேதி மாலை கர்நாடக மாநிலம், மைசூரில் இருந்து இந்திய விமானப்படையின் தனி விமானத்தில், சென்னை பழைய விமானநிலையத்துக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வருகிறார். அவருக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

பின்னர் அங்கிருந்து கிண்டி ராஜ்பவனுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு சென்று தங்குகிறார். இதைத் தொடர்ந்து, மறுநாள் (6ம் தேதி) காலை சென்னை பல்கலைக்கழகத்தில் காலை 10.30 மணி முதல் மதியம் 12.30 மணிவரை நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பங்கேற்கிறார்.இதைத் தொடர்ந்து மறுநாள் (7ம் தேதி) காலை 9.55 மணியளவில் ஹெலிகாப்டரில் புறப்பட்டு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு புதுச்சேரி மாநிலத்துக்கு செல்கிறார். பின்னர் 8ம் தேதி மாலை 5.05 மணியளவில் புதுவையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை பழைய விமானநிலையத்துக்கு வந்து சேருகிறார்.

அங்கு குடியரசு தலைவருக்கு வழியனுப்பு விழா நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. பின்னர் அங்கிருந்து மாலை 5.15 மணியளவில் தனி விமானத்தில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு புதுடெல்லி புறப்பட்டு செல்கிறார். சென்னைக்கு முதன்முறையாக குடியரசு தலைவர் திரவுபதி முர்முவின் வருகையை முன்னிட்டு, நேற்று காலை அவருக்கு அளிக்கவேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னை விமானநிலைய இயக்குநர் அலுவலகத்தில் சிறப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அரசின் பல்வேறு துறை உயர் அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

The post தமிழகத்தில் 4 நாள் பயணமாக குடியரசு தலைவர் 5ம் தேதி வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : President of the Republic ,Tamil Nadu ,Chennai ,Republic Leader ,Druvupathi Murmu ,
× RELATED அயோத்தி ராமர் கோயிலில் முர்மு இன்று வழிபாடு