×

பால் அளித்து அருளிய அன்னை!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

அபிராமி அந்தாதி-சக்தி தத்துவம்

கண்களிக்‌கும்படி கண்டு கொண்டேன்
‌கடம்பாடவியில்‌
பண்களிக்‌கும்குரல்‌வீணையும்‌கையும்‌
பயோதரமும்‌
மண்களிக்‌கும்பச்சை வண்ணமும்‌ஆகி மதங்கர்‌குலப்‌
பெண்களில்‌தோன்றிய எம்பெரு மாட்டிதன்‌பேரழகே.

– எழுபதாவது அந்தாதி“ஆதியாக”

எந்த விதமான செயலும் இல்லாமல் எண்ணத்தின் வண்ணத்தினால் ஒரு சில உருவங்களை மனதிலே பதிப்பதன் மூலமாகவே, அதாவது ஆகமங்கள் பரிந்துரைக்கிற தியானத்தின் மூலமாகவே பேரருளை பெற்றுவிடலாம் என்கிறார் பட்டர். தனக்கு எவ்வாறு காட்சியளித்தாள், தான் எவ்வாறு தியானித்தார் என்பதையும் நமக்கு சுட்டிக்காட்டுகிறார். நம்மையும் அவ்வாறு தியானிக்கச் சொல்கிறார். இந்த பாடலை படிக்காமல் தியானிப்போம். இனி பாடலுக்குள் நுழைவோம்.

“அந்தாதி பொருட்சொல் வரிசை”
கண்களிக் கும்படி கண்டு கொண்டேன்
கடம்பாடவியில்
பண்களிக் கும்குரல்
வீணையும் கையும்
பயோதரமும்
மண்களிக் கும்பச்சை வண்ணமும் ஆகி
மதங்கர் குலப் பெண்களில் தோன்றிய
எம்பெரு மாட்டி
தன் பேரழகே’’

இவ்வரிசையின் படி பாடலின் விளக்கதை இனி காண்போம்.

“கண்களிக் கும்படி கண்டு கொண்டேன்என்ற சொல்லால் அபிராமிபட்டர் அர்ச்சாவதார மூர்த்தியாக கோயிலில் உள்ள திருவுருவம் போல் அல்லாமல், தன் கண்களால் நேரடியாகவே உமையம்மையை உள்ள, “படி கண்டு கொண்டேன்” என்கிறார். “களிக்கும்’’ என்பதனால் உள்ளத்தின் உள்ளே தோன்றுகிற ஒருவிதமான, இதுவரை அனுபவிக்காத இன்ப உணர்வையும் பார்ப்பதனால் ஏற்படும் ஏதோ ஒரு அனுபவத்தை, “கொண்டு’’ என்ற சொல்லாலும் குறிப்பிடுகிறார். நாம் உலகியல் பொருள்களை உற்றுப் பார்ப்பதை போல, “கண்களிக் கும்படி” என்று கூறினாலும், அது அவ்வாறு அல்ல என்கிறது சாத்திர நூல்கள். அவர், புறக் கண்களை மூடி அகக் கண்களைத் திறந்து அதன் வழியேதான் கண்டதையே, “கண்களிக் கும்படி” என்கிறார்.

“கொண்டு’’ என்பதனால் உமையம்மையின் திருவருளையே கண்களாகக், “கொண்டு” கண்டேன் என்கிறார். மேலும், “கண்டு” என்ற சொல்லானது அறிதலையும், உணர்தலையும் குறிக்கும். சாத்திரங்களின் வழி உமையம்மையின் பூசனையை அறிந்து அதையே நெடுநாள் இடைவிடாமல் பின்பற்றி அதன் வழியே தோன்றிய சிறப்பு அனுபவத்தினையே “கொண்டேன்” என்கிறார். இதை ஒரு இதிகாச உதாரணத்தால் உணரலாம்.

மகாபாரதத்தில், அர்ஜுனன் கிருஷ்ணனைப் பார்த்திருந்தாலும் கிருஷ்ணனால் அருளப் பட்ட ஞானக்கண்ணால் [திவ்யச சஷுஷ்] விஷ்வரூப தரிசனத்தைக் கண்டதைப் போல, உமையம்மையின் அருளால் அபிராமிபட்டர் அபிராமியின் மெய்வடிவத்தை கண்டார். அதை ‘நின்னை உள்ளவண்ணம் பேயேன் அறியும் அறிவுதந்தாய்’ (61) என்பதனால் உணரலாம். உமையம்மையை காணுதல் என்பது யாருக்கும் எளிதல்ல. விண்ணோரும் மற்றுனோரும்கூட அவளை காண இயலாதவளாக உள்ளனர். காரணம், அவளது இயல்பு உருவம் இவைகள் மானுட மனத்தாலும், மொழியாலும் அறிந்து கொள்ள முடியாத நிலையில் உள்ளது.

‘மொழிக்கும், நினைவுக்கும் எட்டாத நின்திரு மூர்த்தி’ (87) என்பதனால் அறியலாம். எவரும் காணமுடியாத காட்சியை, தான் கண்டதை சிறப்புடன் குறிப்பிடவே “கண்களிக் கும்படி கண்டுகொண்டேன்’’ என்கிறார்.

“கடம்பாடவியில்’’

இறைவியை தான் எங்கே கண்டு கொண்டேன் என்பதை இங்கே சூட்டுகிறார் பட்டர். சிவனுக்கு கைலாயம், விஷ்ணுவிற்கு வைகுண்டம் அதுபோல் உமையம்மைக்கு சிந்தாமணிக் கிரஹம் அந்த சிந்தாமணி கிருஹத்தில் இருபத்தி ஐந்து தத்துவங்களின் வடிவமானது உலோகங்களால் செய்யப்பட்ட ரத்தினங்களால் ஆன இருபத்தி ஐந்து மதில்களாக இருப்பதாக சொல்லப்படுகிறது. அதில் தங்கம், வெள்ளி என்ற இரு மதில்களுக்கு நடுவில் கடம்பவனம் உள்ளது.

பொதுவாக, வீட்டில் உணவு சமைக்க அடுக்களையும், உறங்க படுக்கை அறை என்று தனித்தனியாக இருப்பதுபோல, சிந்தாமணி கிருஹத்தில் கடம்பவனம் என்ற பகுதியானது உமையம்மை இசை கேட்டு மகிழும் இடமாக உள்ளது. அதில் உமையம்மை, தானே இசையை மீட்டுபவளாகவும் சில நேரங்களில் கலைவாணியால் மீட்டப்பட்ட இசையை கேட்பவளாகவும் இருக்கிறாள். கடம்பவனத்தில் இசை கேட்டு மகிழும் உமையம்மையை நினைத்து தியானம் செய்தால் உள்ளத்தில் மகிழ்ச்சி தோன்றும் புத்துணர்ச்சி ஏற்படும் என்கிறது தந்திர சாஸ்திரம்.

“கடம்பாடவியில்” என்ற சொல்லானது, அபிராமிபட்டரைப் பொறுத்தவரை கடம்ப மரங்கள் நிறைந்த காட்டிலே அமைந்த இன்று ஆலவாய் அல்லது மதுரை என அழைக்கப்படும் தலத்தில் எழுந்தருளியுள்ள மீனாட்சி அம்மையைக் குறிக்கும். இன்றும் மீனாட்சியை வழிபடும் ஆலய அர்ச்சகர்களுக்கு பட்டர் என்றே பெயர் வழங்கப்படுகிறது. அந்த வகையில் மீனாட்சியை வணங்குவது போலவே, அபிராமியை வணங்குவதால் அபிராமிபட்டர் என்றழைக்கப்பட்டார். “கடம்பாடவியில்” உள்ளவளாய் உமையம்மையை தரிசனம் [தியானம்] செய்தால் ராஜவஸ்யம் [அரசர்களின் உதவி] கிட்டும் என்கிறது ஸ்ரீதந்திரம். அந்த வகையில், அபிராமிபட்டர் அபிராமி அம்மையை மீனாட்சியாகக் கருதி தியானம் செய்திருக்கிறார்.

கடம்பவனத்தில் பாண்டியமன்னர் குலத்தில் தோன்றியவளாய் மதுரையை தடாதகை என்ற பெயரில் ஆட்சி செய்ததாக சொல்கிறது தலபுராணம். சஹஸ்ரநாமம் ‘மஹாராஜ்ஞீ’ [பேரரசி] என்று கூறுவதால் இதை அறியலாம். அரசியாரை பெருமாட்டி என்று தமிழ் வழக்கத்தில் கூறுவர். அதையே எம்பெருமாட்டி என்று பட்டர் கூறுவதிலிருந்து அறியலாம்.

திருக்கடையூரில் உள்ள பட்டர் மதுரையில் உள்ள மீனாட்சியை எப்படி தியானம் செய்கிறார் என்றால், ஜபத்தில் தியானத்தை மாற்றிச் சொன்னால் அதற்குரிய பலன் மாறுபடும். அந்த வகையில், உடனடியாக காரியத்தை நிறைவேற்றுவதற்கு மீனாட்சி அம்மனின் தியானத்தை இங்கே தியானிக்கிறார். மேலும், ‘துயில் கூறும் விழுப்பொருளே’ (35) என்பதை கொண்டு மகாவிஷ்ணுவாகவும் தியானம் செய்வதை இங்கே அறிந்து உறுதி செய்துகொள்ளலாம். இவையாவற்றையும் இணைத்தே “கடம்பாடவியில்” என்றார்.

“பண்களிக் கும்குரல்’’

இப்பதத்தை அறிந்து கொள்வதற்கு முன் சில இசைக் குறிப்புகளை புரிந்து கொள்வது உதவியாக அமையும். “பண்” என்பது நிலம் சார்ந்து குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற தமிழர் வாழும் பகுதியில் நிலத்தின் வகை சார்ந்து இசையும், இசைக்கும் கருவிகளும், இசைக்கும்முறையும் அமைந்திருந்தன. நிலத்தின் ஒழுக்கத்தைச் சார்ந்து புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் என்று உள்ள உணர்வை தூண்டும் அளவிற்கு இசையானது தனித்தனியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், பட்டர் இப்பாடலை இருத்தல் உணர்வுடன் கூறுகிறார். காடும் காடு சார்ந்த இடமாகிய முல்லையை “கடம்பாடவி” என்பதனால் அறியலாம். இருத்தல் இயல்புக்குரிய முல்லைப் பண்பையே இங்கு குறிப்பிடுகிறார். “களிக்கும்” என்பதனால் மகிழ்ச்சியைச் சூட்டுகிறார்.

“பண்” என்ற வார்த்தையால் முல்லை நிலத்தில் இசைக்கும் முல்லைப் பண்ணை இங்கே குறிப்பிடுகிறார். இதையே ‘இசைவடி வாய் நின்ற நாயகியே’ (49) என்பதனால் அறியலாம். “களிக்கும்’’ – ஒவ்வொரு நிலத்திற்குரிய சுக உணர்வையும், துக்க உணர்வையும் இசையால் தமிழர்கள் பாகுபடுத்தியிருந்தனர். அதனடிப்படையிலேயே துக்க உணர்வைக் நீக்கி சுக உணர்வை குறிப்பதற்கு “களிக்கும்’’ என்ற சொல்லைக் குறிப்பிடுகிறார். “குரல்’’ என்ற வார்த்தையால் இசையானது வாய்பாட்டாகவும், இசைக் கருவிகளும் என்ற இரண்டு வகையில் தோற்றுவிக்கப்படுகிறது. அதில் வாய்பாட்டையும், இசையையும் பிரித்து கூறவே “குரல்’’ என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்.

“பண் களிக்கும் குரல்” என்பதனால் மகிழ்ச்சியூட்டக்கூடிய வாய்ப்பாட்டு இசை என்கின்ற வார்த்தையால் உமையம்மையை பிறர் பாடி மகிழ்விப்பதையும், உமையம்மைதான் பாடி மகிழ்வதையும், இந்த ஒரே வார்த்தையால் குறிப்பிடுகின்றார். இவளை, ஆகம சாஸ்திரங்கள் ‘மாதங்கி’ என்று சொல்கிறது. இவளை வணங்கினால் உள்ள மகிழ்ச்சியும், புத்துணர்ச்சியும் தோன்றும் என்கிறது தந்திர சாத்திரம். இதையே “பண்களிக் கும்குரல்’’ என்றார்.

“வீணையும் கையும்’’

“வீணையும்’’ – இசைக் கருவியில் நான்கு வகை உள்ளது. ரந்த்ர வாத்தியமான நாயனம், புல்லாங்குழல் போன்றவை, சர்ம வாத்யமான மேளம் உடுக்கை போன்றவை, லோக வாத்யம் – சிலம்பு, ஜால்ரா போன்றவை, தந்தி வாத்தியமான யாழ், வயலின் போன்றவைகள் உள்ளன. குறிப்பாக, தந்தி வாத்தியமான வீணையை குறிப்பிடுகிறார். அம்பாள் மீட்டுகின்ற வீணையில் ஆயிரம் நரம்புகள் இருக்கும். அதை மீட்டுவது மிகவும் கடினம். இதை மீட்ட வாத்தியம், வாய்ப்பாட்டு, நாட்டியம் போன்ற எல்லாவற்றையும் கற்ற பின்பே கற்பிப்பர். அனைத்து இசைக் கருவிக்கும் தலையாயது வீணை. பொதுவாக, எல்லா நாதத்திற்கும் அடிப்படை இந்த இசைக் கருவியில் இருந்து வெளிப்படும் அந்த இசையின் ஒலி வடிவாக உமையம்மையே இருக்கிறாள்.

இதை அனைத்து விதமான இசைக் கச்சேரி, நாட்டியங்களலும் பயன்படுத்துவர். அது இரண்டையுமே இணைத்து “வீணையும்’’ என்ற ஒரே வார்த்தையால் குறிப்பிடுகின்றார். சிற்ப சாத்திரமானது சரஸ்வதி, மாதங்கி, வீணா தட்சிணாமூர்த்தி, நாரதர் போன்றோர் கையில் வீணை இருப்பதாக வடிக்கப்பட்டிருக்கிறது. மேலும், வீணையை இருகைகளாலேயும், மீட்டுவது போலவே அமைப்பர். அந்த வகையில், ஒரே நேரத்தில் பாடவும், ஆயிரம் நரம்பு கொண்ட வீணையை மீட்டுபவளாக மாதங்கியின் தியானம் சொல்லப்படுகிறது. சரஸ்வதி, தட்சிணாமூர்த்தி, நாரதர் இவர்கள் வீணையை மட்டுமே மீட்டுவர். இவ்வாறு வீணையுடன் அமைக்கப்படும் உருவங்களை வணங்கினால் கலை, ஞானம், வளரும்.

கலை என்பது வாய், கை என்ற இரு வகையாக பிரிக்கப்படுகிறது. வாய் தொடர்பாக மொழி, நீதி, புராணம், வேதம் போன்றவைகளை சொல்வது. கை தொடர்பாக சிற்பம், ஓவியம், இசைக் கருவிகளை இசைத்தல் போன்றது. கற்பிக்கும் முறையையும், கற்றலும் வெவ்வேறானவை இவை அனைத்தையும் கற்கவும், கற்பிக்கவும் ஆற்றலைத் தருபவள் உமையம்மையே. இதையே “வீணையும்’’ என்கிறார்.“கையும்’’ என்பதனால் கலைகளை கற்பிக்கும் முறையை குறிப்பிடுகிறார். சிற்பம் ஓவியம் இது போன்ற கலைகளை வாரிசுகளின் வழி உபதேசிப்பர். மேலும், கையும் என்பதனால் வீணை மற்ற இசைக்கருவிகள் இவைகளை மீட்டும் முறையை குறிப்பிடுகிறார்.

“வீணையும் கையும்’’ என்பதனால், வீணை இசைப்பதிலிருந்து வெளிப்படும் நாதத்தையும், அதிலிருந்து வெளி வருகின்ற ஒலியையும், அதை கேட்பதனால் ஏற்படும் மகிழ்ச்சியையும், இசை தொடர்பான கருவிகளை இசைப்பதாக உள்ள அனைத்து மூர்த்தங்களும் அமைதி, தெளிவு, ஆனந்தம், மனோலயம், கருத்து திளைப்பு என்ற உணர்வுகளை மானுட மனதிற்குள் தோற்றவல்லது. அதை பெற விரும்புபவர்கள் அந்தந்த மூர்த்தத்திற்கு வழிபாடு செய்து அவ்வப்பயனை எய்துவதற்கே “வீணையும் கையும்’’ என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார்.

“பயோதரமும்’’

என்பதனால் உமையம்மையின் அழகை குறிப்பிடுவதாக தோன்றினாலும், குழந்தை பிறந்தவுடன் தாயின் முலையில் குழந்தைக்குரிய உணவாகிய பால் தானாக சுரக்கும். அத்தகைய நிலையில் உள்ள தாய்மையை சூட்டவே “பயோதரமும்’’ என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார். உமையம்மையின் முலையானது ஞானத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் அடிப்படையான இரண்டு விதமான பாலையும் ஒருசேர சுரக்கும் பண்புடையது. இதையே அபிராமிபட்டர் ‘பால் அழும் பிள்ளைக்கு நல்கின’ (9) என்பதனால் ஞானசம்பந்தருக்கு பால் அளித்து அருளியதையும், ‘பேர் அருள்கூர்’ (9) என்பதனால் மார்க்கண்டேயருக்கு ஆயுள், இளமை, ஆரோக்கியம் மூன்றையும் உமையம்மை வழங்கியதையும் ‘மாயா முனிவரும்’ (4) என்ற சொல்லினாலும் உணரலாம்.

மகாவிஷ்ணு, பிரம்மாவிற்கு பிறவாவீடருளி இறையாக்கியது உண்ணாமுலையம்மை. இவையெல்லாம் உமையம்மையின் தாய்மையை எண்ணி தியானம் செய்தால், பக்தர்கள் செய்கிற குறை மற்றும் குற்றங்களை பாராமல் அனுக்கிரஹத்தை வழங்குவாள். இதை பயோதரமும் என்ற வார்த்தையால் குறிப்பிடுகின்றார். இதையே ‘அம்பிகை’ என்கிறது ஆகம சாத்திரம். மேலும், “பயோதரமும்’’ என்ற வார்த்தை ஆகம கலைச் சொல்லின் படி பால் சுரக்கும் காளியை குறித்தது. இதை, ஒரு தல புராணத்தை கொண்டு விளங்கிக் கொள்ள முடியும்.

மகிஷாசுரவதம் செய்யும் போது அவன் கழுத்தை துர்கையானவள் ஓங்கி வெட்டினாள். அவன் சிவலிங்கத்தை விழுங்கியதாலும், அவன் உடலை வெட்டியதால் சிதறிய ரத்தத்துளிகள் ஒவ்வொன்றிலிருந்தும் ஒவ்வொரு மகிஷாசூரர் தோன்றினார்கள். இந்த பெரும் துன்பத்தை போக்க துர்க்கை சிவனை வேண்ட, சிவபெருமான் தனது கழுத்திலுள்ள விஷத்திலிருந்து காளியை தோற்றுவித்தார்.

அவள் செய்யும் போரில், மகிஷாசூரன் உடலில் இருந்து வெளிப்படும் ரத்தத்தை பூமியில் விழாமல் காளியானவள் தானே குடித்தாள், அதனால் துர்க்கையால் மகிஷாசூரனை வெல்ல முடிந்தது. அவன் ரத்தத்தை குடித்ததால் காளி, அசுர குணம் கொண்டவளாக மாறி நல்லவர்களையும் துன்புறுத்தி அனைவரின் ரத்தத்தையும் குடிக்க ஆரம்பித்தாள். அதை நீக்க சிவபெருமான் குழந்தையாகி யுத்தகளத்தின் நடுவில் நின்று அழுதார். அதைக் கண்ட காளியின் முலையில் பால் சுரந்தது. அந்தக் குழந்தைக்கு பாலூட்டினாள், குழந்தையான சிவன் பாலுடன் அவள் ஆணவத்தையும் சேர்த்து பருகினார். ரத்தம் பருகிய காளி, சினம் தணிந்து பத்ரகாளியாக மாறினாள்.

அதாவது, முலைகளில் பால் எப்பொழுதும் நிறைந்திருக்கிறது, அந்தப் பாலை பருகுவதால் அடியார்களுக்கு, போக, மோட்ச, ஞானம் அனைத்தும் தோன்றும், அந்தக் காளி வடிவத்தையே “பயோதரமும்” என்கிறார். காளிதாசன், கம்பன் போன்ற பெரும் கவிஞர்கள் இவளின் அருளை பெற்றவர்களே என்கிறது ஒரு செவிவழிச் செய்தி. காளியான அவள் கை, கால்களால் நாட்டிய சாத்திரத்தையும், கற்பிக்கிறார். எட்டு திருக்கரங்களை கொண்டவளாக திருவெண்காட்டில் எழுந்தருளியிருக்கும் அகோரேசியை இன்றும் காணலாம். அவள் எதிரே அகோர ருத்ர வடிவில் இருப்பதையும் காணலாம்.

ருத்ரர் என்ற சொல்லிற்கு அழச் செய்பவன் என்று பொருள். அகோரேசி என்ற சொல்லுக்கு அழகு அமைதிபடுத்துபவள் என்பது பொருள். இதையெல்லாம் மனதில் கொண்டு கலை
ஞானம் அருளும் காளியை “பயோதரமும்” என்கிறார்.

“மண்களிக் கும்பச்சை
வண்ணமும் ஆகி’’

“மண்களிக்கும்” என்ற வார்த்தையால் பூமியை, குறிப்பாக விளைநிலத்தை குறிப்பிடுகிறார். அபிராமிபட்டர் வாழ்ந்த பகுதியானது வயலும் வயல் சார்ந்துமாகும். அதில் வயல்களில் நீர்ப்பாசனம் செய்து நாற்று நட்டு பசுமையாக இருக்கும் நிலையை காட்டவே பச்சை வண்ணமும் என்கிறார். இந்த விளைச்சலை அருள்பவள் உமையம்மையும் உணவு உற்பத்தியைப் பெருக்கி நாட்டிற்கும் நன்மை செய்வதற்கு உமையம்மையை இப்படி தியானிக்க பூமியானது பயிர்களுடன் திகழும் மேலும் ‘பிரத்திவி சஸ்ய ஷாலினி’ என்பதைக் கொண்டும் அறியலாம். கும்பாபிஷேகம் மற்றும் ஆலய விழா காலங்களில் ம்ருத்சங்ச கிரஹணம் மற்றும் அங்குரார்ப்பணம் என்ற இரு பூசைகளையும் செய்கிறார்கள்.

பட்டர் பரிசாரகர் பணியில் இருந்ததால், அவர் செய்யும் வேலையில் இதுவும் ஒன்று ஆனதால், இதை நன்கு அறிவார். இந்தப் பூசனையில் பூமாதேவியானவர் வணங்கப்படுகிறாள். அவளை வணங்குவதால் விவசாயம் செழிக்கும். அதற்காக நெல் முதலான நவதானியங்களை, அதாவது விதைகளை விதைப்பர். அவ்வாறு விதைப்பது என்பது வழிபாடாக செய்யப்படுவதால் பூமியில் விதைக்கப்படும் பயிரானது நோய் மற்றும் நீரின்மை, மழையால் வெள்ளம், மாடு, யானை, போன்ற உயிரினங்களால் பயிருக்கு ஏற்படும் அழிவு, இவைகளில் இருந்து பாதுகாத்து வளம் உடையதாக ஆக்க பூமாதேவியை வழிபடுகின்றனர். இந்த பூமாதேவியை உமையம்மையாய் கருதி இங்கு குறிப்பிடுகிறார் பட்டர். இதன் மிகுந்த விளைச்சலை அதனால் தோன்றும் வறுமை நீங்கி செல்வச் செழிப்பினால் ஏற்படும் மகிழ்ச்சியே “மண்களிக்கும்’’ என்கிறார்.

மேலும், “மண்களிக் கும்பச்சை வண்ணமும் ஆகி” என்பதனால் மன்மதனுக்கு அருள்புரிந்த மதனாஅனுக்கிரக மூர்த்தியின் உமையம்மை நிறம் ‘பச்சை நிறம்’ என்கிறது ஆகமம். இந்த மூர்த்தியை வழிபாடு செய்வது என்பது விளைச்சலை பெருக்கும் இது காமமூர்த்தி வழிபாடும் காமதஹனமும் இன்றும் வழக்கத்தில் உள்ளது.திருக்கடவூர் தலபுராணத்தில் எமனை காலால் உதைத்த மிருத்யுஞ்சயரை பூமாதேவி பிரார்த்திக்கிறாள். அவள் பிரார்த்தனையின் வண்ணமே இறந்த எமனை எழுப்புகிறார். இந்த பூமாதேவியானவள், இலக்குமி தேவியுடன் திருக்கடவூரில் இன்றும் காட்சியளிக்கின்றாள். இந்த மூன்று வகையிலுமே உறுதிசெய்யும் வண்ணமாய் “மண்களிக் கும்பச்சை வண்ணமும் ஆகி” என்கின்றார்.

“மதங்கர் குலப் பெண்களில் தோன்றிய”

என்ற வார்த்தையால் உமையம்மையை உலகிலுள்ளோர் நலன் பொருட்டு ஒவ்வொரு குலத்திலும் தோன்றி சிவபெருமானை மணந்து அக்குலத்திற்கு நன்மையை செய்கிறாள். மீனவர் குலத்தில் தோன்றியது, உத்திரகோசமங்கையில் வணிகர்கள் குலத்தில் கன்னியம்மன் என்ற பெயரிலும், அந்தணர் குலத்தில் பிறந்து பசுபதீஸ்வரரை மணந்தாள் என்றும் தல வரலாறுகளின் மூலம் அறியலாம் அந்த வகையில் மதங்க முனிவர் என்னும் முனிவருக்கு மகளாக தோன்றி அம்முனியால் வளர்க்கப்பட்டு சிவ
பெருமானை மனத்தாள்.

இந்த முனியானவர், ராமாயணத்தில் வாலியை எதிர்த்து சாபமிட்டவர். இவர் வாழ்ந்த இடம் மதங்காசிரமம் எனப்படுகிறது. திருவெண்காட்டை அடுத்து திருநாங்கூர் என்று இன்று அழைக்கப்படும் ஊரில் மதங்கமுனிவருக்கு மகளாகப் பிறந்தாள் திருவெண்காட்டு ஈசனை மணந்தாள்.இந்த உமையம்மையையே “மதங்கர் குலப் பெண்களில் தோன்றிய” என்ற வார்த்தையால் குறிப்பிடுகின்றார்.

திருக்கடவூரில் இருந்து ஐந்து மயில் தொலைவில் உள்ள மதங்கீஸ்வரர் கோயில் பிறந்து வளர்ந்த உமையம்மையை மாதங்கி என்றும், அவளே ஸ்வேதவனேஸ்வரரை மணந்த பிறகு பிரம்ம வித்யாம்பிகை என்ற பெயர் பெற்றாள். இத்தகைய மணக்கோலத்தில் உமையம்மையை தரிசித்தால், மன மகிழ்ச்சி பெருகும் புத்திர சந்தானம் பெருகும் இதையெல்லாம் மனதில் கொண்டே “மதங்கர் குலப் பெண்களில் தோன்றிய” என்கின்றார்.

தொகுப்பு: முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்

The post பால் அளித்து அருளிய அன்னை! appeared first on Dinakaran.

Tags : Abraami Anathathi ,
× RELATED அருமறைகள் பழகிச்சிவந்த பாதாம்புயத்தாள்