×

பெரியபாளையத்தில் பவுர்ணமியை முன்னிட்டு பவானியம்மன் கோயிலில் 108 பெண்கள் திருவிளக்கு பூஜை

பெரியபாளையம்: பெரியபாளையத்தில் ஆடி மாதத்தை முன்னிட்டு பவானியம்மன் திருக்கோயிலில் ஆடி திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து, நேற்றிரவு ஆடி பவுர்ணமி தினத்தை முன்னிட்டு 108 சுமங்கலி பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியத்தில் அடங்கிய பெரியபாளையத்தில் பிரசித்தி பெற்ற மிகப் பழமையான  பவானியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.

இக்கோயிலில் ஆடி மாத முதல் வாரம் முதல் 14 வாரங்களுக்கு ஆடித் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து, வாரத்தின் இறுதி நாளான சனிக்கிழமை இரவு கோயிலுக்கு பாதயாத்திரை மற்றும் பல்வேறு வாகனங்களில் வரும் பக்தர்கள், மறுநாள் காலை மொட்டை அடித்து, வேப்பிலை ஆடை உடுத்தி ஏராளமான பக்தர்கள் ஆடு, கோழி ஆகியவற்றை தானமாக வழங்கியும், பொங்கலிட்டும் அம்மனை பக்தி பரவசத்துடன் தரிசித்து வருகின்றனர். இதனால் அப்பகுதிகளில் போலீசார் பலத்த பாதுகாப்பு மற்றும் வாகன நெரிசலை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பெரியபாளையம் பவானியம்மன் திருக்கோயிலில் நேற்று மாலை ஆடி மாத பவுர்ணமி தினத்தை முன்னிட்டு உலக நன்மைக்காகவும், பொது அமைதி வேண்டியும், மக்கள் நோயின்றி வாழவும் 108 சுமங்கலி பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை இரவு வரை நடைபெற்றது. இதில் உற்சவர் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் காட்சியளித்து, திருவிளக்கு பூஜையில் பங்கேற்ற சுமங்கலி பெண்களுக்கு பவானியம்மன் அருள்பாலித்தார். இதில் பங்கேற்ற சுமங்கலி பெண்கள் குத்துவிளக்கேற்றி குங்குமம், மலர்களால் அர்ச்சனை செய்து அம்மனை வழிபட்டனர்.

முன்னதாக, நேற்று அதிகாலை முதல் மூலவர் பவானியம்மனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், ஜவ்வாது உள்பட பல்வேறு வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பவானியம்மனுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் நேற்றிரவு உற்சவர் ராஜராஜேஸ்வரி அம்மன் வெள்ளி கவசத்தினால் அலங்கரிக்கப்பட்டு, கோயில் வளாகத்தை சுற்றி 3 முறை தேர்பவனி நடைபெற்றது.

இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைத்து பக்தர்களுக்கும் அன்னதான பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் தலைமையில் ஊழியர்கள் சிறப்பாக செய்திருந்தனர். கோயிலில் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

The post பெரியபாளையத்தில் பவுர்ணமியை முன்னிட்டு பவானியம்மன் கோயிலில் 108 பெண்கள் திருவிளக்கு பூஜை appeared first on Dinakaran.

Tags : Thiruvilakku Puja ,Bhavaniyamman Temple ,Poornami ,Periyapalayam ,Aadi ,Adi festival ,Thiruvilakku Pooja ,
× RELATED சித்ரா பௌர்ணமி ஏன் கொண்டாடப்படுகிறது?