×

மயிலாடுதுறையில் போராட்டம்: 2வது நாளாக 10,000 மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

தரங்கம்பாடி: மயிலாடுதுறை மாவட்டத்தில் 28 மீனவ கிராமங்கள் உள்ளன. இதில் தரங்கம்பாடி உள்ளிட்ட 21 மீனவ கிராமங்கள் சுருக்குமடி வலைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், பூம்புகார், சந்திரபாடி உள்ளிட்ட 7 கிராம மீனவர்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் எனவும் கூறி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடித்ததாக மீனை ஏற்றி வந்த பைபர் படகையும், படகில் இருந்த சந்திரபாடி மீனவர்கள் 3 பேரையும் தரங்கம்பாடி மீனவர்கள் சிறைபிடித்தனர். தகவலறிந்து தரங்கம்பாடி கடலோர போலீசார் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று சந்திரபாடி மீனவர்கள் 3 பேரையும் மீட்டனர்.

இதைதொடர்ந்து நேற்று மாலை தரங்கம்பாடி தாலுகா அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது. மீன்வளத்துறை துணை இயக்குநர் ராஜேஷ் மற்றும் போலீசார், சந்திரப்பாடி மீனவ பிரதிநிதிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், கைப்பற்றப்பட்ட பைபர் படகை மீன்வளத்துறை கட்டுப்பாட்டில் வைப்பது, இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை மூலம் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்று முடிவு செய்யப்பட்டது. இதைதொடர்ந்து தரங்கம்பாடியில் கிராம பஞ்சாயத்தார் முன்னிலையில் 21 கிராம மீனவ பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டம் நடந்தது. இதில் மயிலாடுதுறை மாவட்டத்தில் சுருக்குமடி வலையை முற்றிலும் தடை செய்ய வேண்டும். மயிலாடுதுறை, நாகை, காரைக்கால், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்ட மீனவர்களை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவது.

சுருக்குமடி வலையை முற்றிலும் தடை செய்யும் வரை 21 கிராம மீனவர்கள், கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் வேலைநிறுத்த போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. ேநற்று தரங்கம்பாடியை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இன்று தரங்கம்பாடி உட்பட 21 மீனவ கிராமங்களை சேர்ந்த 5,000 பைபர் படகு, 150 விசைப்படகுகளை சேர்ந்த 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

The post மயிலாடுதுறையில் போராட்டம்: 2வது நாளாக 10,000 மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை appeared first on Dinakaran.

Tags : Tharangambadi ,Mayiladuthurai district ,Tangambadi ,Dinakaran ,
× RELATED கொள்ளிடம் பகுதியில் உளுந்து, பயறு சாகுபடி பரப்பளவு குறைந்தது