×

வெற்றி வாகை சூடிய கால்பந்தாட்ட அணியின் கேப்டன் தேவி

பஞ்சாப்பில் நடைபெற்று முடிந்த 27வது தேசிய சீனியர் மகளிர் கால்பந்தாட்டத்தில் தமிழ்நாடு மகளிர் கால்பந்தாட்ட அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. வெற்றி பெற்ற மகிழ்ச்சியோடு இந்த அணியின் வீராங்கனைகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரைச் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த சத்தியவாடி கிராமத்தை சேர்ந்த மரம் வெட்டும் ஏழைக் கூலித் தொழிலாளி தம்பதியான தேவராஜ் – செல்வராணியின் மகள்தான் சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாடு சீனியர் மகளிர் கால்பந்தாட்ட அணியின் கேப்டன் தேவி. ஏழ்மையான குடும்ப சூழலில் பிறந்த தேவி தனது ஆறாம் வகுப்பு படிப்பை சத்தியவாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயின்று வந்தபோது தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விருத்தாசலம் மினி விளையாட்டு அரங்கம் சார்பாக பயிற்றுநர் அறிவழகன் சத்தியவாடி, செம்பளக்குறச்சி, கோ ஆதனூர் ஆகிய அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகளைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தினந்தோறும் கால்பந்தாட்டப் பயிற்சி அளித்தார்.

ஏழாம் வகுப்பு படிக்கும்போது மாணவி தேவியின் விளையாட்டுத் திறமையை பார்த்த பயிற்றுநர் அறிவழகன் விளையாட்டில் சாதனை படைத்து சிறந்து விளங்க அவரது பெற்றோர் சம்மதத்துடன் எட்டாம் வகுப்பு படிப்பை நாமக்கல்லில் உள்ள மகளிர் விளையாட்டு விடுதியில் கால்பந்து மாணவியாக சேர்த்தார். 12ம் வகுப்பு வரை பள்ளிப் படிப்பை அங்கு நிறைவு செய்த தேவி கால்பந்தாட்டத்தில் மாநில, தேசிய அளவில் பல சாதனைகளைப் படைத்தார்.. சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் இளங்கலைப் பட்டம் பயின்று வரும் நிலையில் தேசிய சீனியர் மகளிர் கால்பந்தாட்டத்தில் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற தமிழ்நாடு மகளிர் கால்பந்தாட்ட அணியின் கேப்டனாகவும் , லீக் போட்டியில் எதிரணிக்கு கோலே விடாத கோல் கீப்பராகவும் சாதித்துள்ளார்.

சாம்பியன்ஷிப் வெற்றி குறித்து தேவி கூறும்போது, ‘‘தேசிய சாம்பியன்ஷிப் பட்டம் வென்றிருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த இடத்தில் நான் ஒரு கேப்டனாக மட்டும் இல்லாமல் கோல்கீப்பராகவும் இருந்தது மிகவும் சந்தோஷமாக உள்ளது. என்னுடைய பயிற்சியாளர்கள் கொடுத்த பயிற்சியால்தான் இந்த தொடரில் விளையாடிய 10 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளோம். எங்கள் அணியில் நாங்கள் அனைவரும் சீனியர், ஜூனியர் என்ற பாகுபாடின்றி ஒன்றிணைந்து விளையாடிய தால்தான் எங்களால் வெற்றி பெற முடிந்தது.ஜூனியர் நேஷனல், கேலோ இந்தியா, எஸ்ஜிஎப்ஐ , ஆர்டிஜி என பல போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தாலும் தேசிய சீனியர் மகளிர் கால்பந்தாட்டம்தான் எனது இலக்காக இருந்தது. இன்று அதில் வெற்றி பெற்றிருப்பது பெரு மகிழ்ச்சியாக உள்ளது.

பள்ளிப் பருவத்திலேயே எனக்குள் இருந்த விளையாட்டுத் திறனை கண்டுபிடித்து ஊக்குவித்து வழிகாட்டிய பயிற்றுநர் அறிவழகன் சார், நாமக்கல் விளையாட்டு விடுதி கால்பந்து பயிற்றுநர் கோகிலா ,ஊக்கம் கொடுத்து வெற்றி பெற வைத்த தமிழ்நாடு மகளிர் அணி பொறுப்பாளர் சீனிமொய்தீன் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்’’ என்றார். மேலும் தேவி கூறுகையில், ‘‘பூட்சு கூட வாங்கிப் போட்டு விளையாட முடியாத கஷ்டமான குடும்பச் சூழ்நிலையிலும், உறவினர்கள் நான் விளையாடுவதை விமர்சனம் செய்தபோதும் என் விளையாட்டு ஆர்வத்துக்கு ஊக்கம் அளித்த பெற்றோருக்கும், நண்பர்களுக்கும் நன்றி சொல்லியே ஆக வேண்டும். எங்களைப் போன்ற விளையாட்டு வீராங்கனைகளுக்கு அரசு வேலையில் முன்னுரிமை கொடுத்து வேலை கிடைத்தால் குடும்பச் சூழல் மாறி விளையாட்டில் மேலும் பல சாதனைகள் படைக்க வழி வகுக்கும்.இன்னும் பல பெண்கள் தயக்கமின்றி விளையாட்டுப் போட்டிகளில் பங்கெடுத்து சாதிக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை. என்று வெற்றிக் களிப்போடு பேசி முடித்தார்.

The post வெற்றி வாகை சூடிய கால்பந்தாட்ட அணியின் கேப்டன் தேவி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Women's Soccer Team ,27th National Senior Women's Soccer ,Punjab ,Devi ,Dinakaran ,
× RELATED சென்னை – பஞ்சாப் அணிகளுக்கு இடையே...