×

மணிப்பூர் விவகாரத்தை கண்டித்து தொடர் அமளி!: மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு; மக்களவை மதியம் 2 மணிவரை ஒத்திவைப்பு..!!

டெல்லி: மணிப்பூர் விவகாரத்தை எழுப்பி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பி வருகின்றனர். மணிப்பூர் விவகாரம் குறித்து மக்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கம் எழுப்பினர். சபாநாயகர் ஓம் பிர்லாவின் இருக்கையை முற்றுகையிட்டு எதிர்க்கட்சி எம்.பிக்கள் முழக்கமிட்டனர். மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வலியுறுத்தினர். மணிப்பூர் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

எதிர்க்கட்சிகள் முழக்கம் காரணமாக 10-வது நாளாக மக்களவை ஒத்திவைக்கப்படுவது நினைவுகூரத்தக்கது. இதேபோல் மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பினர். மணிப்பூர் கொடூரம் குறித்து பிரதமர் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர். பிரதமர் ஏன் பதில் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவையில் விளக்கம் அளித்தார்.

அவை தலைவரால் பிரதமர் வர வேண்டும் என்று உத்தரவிட முடியாது என்று மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தங்கர் குறிப்பிட்டார். பிரதமர் வருவதும் வராததும் அவரது விருப்பத்தை பொறுத்தது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார். தொடர்ந்து மணிப்பூர் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதம் நடத்த கோரிய எதிர்க்கட்சிகளின் 60 நோட்டீஸ்கள் நிராகரிக்கப்பட்டது. நோட்டீஸ் நிராகரிப்பை அடுத்து மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

The post மணிப்பூர் விவகாரத்தை கண்டித்து தொடர் அமளி!: மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு; மக்களவை மதியம் 2 மணிவரை ஒத்திவைப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Delhi ,Parliament ,Manipur ,Dinakaran ,
× RELATED 18வது மக்களவை நாளை முதல் கூடும்...