×

ஒன்றிய பாஜ அரசை கண்டித்து பெருந்துறையில் அனைத்து தொழிற்சங்கத்தினர் பிரச்சார இயக்கம்

 

ஈரோடு, ஆக.2: ஒன்றிய பாஜ அரசை கண்டித்து, அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் பெருந்துறையில் நேற்று முன்தினம் மாலையில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. ஒன்றிய பாஜ அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத, கொள்கைகளை கண்டித்து ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் நேற்று முன்தினம் மாலையில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதில், தொழிலாளர் விரோத சட்ட தொகுப்புகளை கைவிட வேண்டும், தொழிலாளர்களை நிரந்தரப்படுத்தி, சமவேலைக்கு சமஊதிய சட்டத்தை அமலாக்க வேண்டும், அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ. 28 ஆயிரம் நிர்ணயிக்க வேண்டும்,

குறைந்தபட்ச ஓய்வூதியமாக மாதம் ரூ.10 ஆயிரம் நிர்ணயிக்க வேண்டும், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு திட்டங்களை விரிவுபடுத்த வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கக் கூடாது, சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் சுங்க கட்டண கொள்ளையை கைவிட வேண்டும், பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் மீதான கலால் வரியை நீக்க வேண்டும், விவசாயிகளின் விளைபொருளுக்கு விவசாயிகளே விலை நிர்ணயம் செய்ய சட்டம் இயற்ற வேண்டும், கல்வி, மருத்துவம் அனைவருக்கும் சமமாக கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்,

சுற்றுச்சூழலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் வரும் 9ம் தேதி வெள்ளையனே வெளியேறு இயக்க நாளில் நாடு முழுவதும் மாநில தலை நகரங்களில் பெருந்திரள் அமர்வு போராட்டம் நடைபெற இருக்கிறது. இதை விளக்கி நாடு முழுவதும் பிரச்சார இயக்கம் நடைபெற்று வருகிறது. ஈரோடு மாவட்டத்திலும் கடந்த ஜூலை 28ம் தேதி முதல் பிரச்சார இயக்கம் நடைபெற்று வருகிறது என தெரிவிக்கப்பட்டது.

மேலும் அனைத்து தொழிற்சங்கத்தினர் சார்பில் பெருந்துறை புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை, அண்ணா சிலை, குன்னத்தூர் ரோடு, பெத்தாம்பாளையம் பிரிவு, ராஜவீதி, மஜீத் வீதி சந்திப்பு உள்ளிட்ட, நகரின் முக்கிய பகுதிகளில் இப்பிரச்சார இயக்கம் நடைபெற்றது. எல்பிஎப் நிர்வாகி மனோகரன், ஏஐடியுசி நிர்வாகி ஜெயபாரதி, சிஐடியு நிர்வாகி மயில்சாமி ஆகியோர் தலைமை வகித்தனர். ஏஐடியுசி மாநில செயலாளர் சின்னசாமி கோரிக்கைகளை விளக்கி பேசினார்.இப்பிரச்சாரத்தின் போது பொதுமக்களிடம் துண்டறிக்கைகளும் வழங்கப்பட்டன. இதில், அனைத்து தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள், சண்முகம், வடிவேல், சந்திரசேகரன், கணேசமூர்த்தி, சரவணன் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

The post ஒன்றிய பாஜ அரசை கண்டித்து பெருந்துறையில் அனைத்து தொழிற்சங்கத்தினர் பிரச்சார இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Perundhurai ,Union BJP government ,Erode ,Perundurai ,
× RELATED நீட் தேர்வு முறைகேடு; மாணவர்களை...