×

எஸ்.ஐ. கையில் வெட்டிவிட்டு தப்ப முயன்ற பிரபல ரவுடிகள் 2 பேர் சுட்டுக்கொலை: கத்தி, வீச்சரிவாள், கார், செல்போன் பறிமுதல்; கூடுவாஞ்சேரி அருகே அதிகாலையில் பரபரப்பு

சென்னை: எஸ்.ஐ., கையில் வெட்டிவிட்டு தப்ப முயன்ற பிரபல ரவுடிகள் 2 பேர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். கத்தி, வீச்சரிவாள், கார் மற்றும் செல்போன் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன. கூடுவாஞ்சேரி அருகே அதிகாலை நடந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தப்பி ஓடிய இருவரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். தமிழகத்தில் ரவுடிகளை ஒழிப்பது குறித்து டிஜிபி சங்கர் ஜிவால் தலைமையில் நேற்று முன்தினம் இரவு டிஜிபி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதில் சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர், சட்டம் -ஒழுங்கு ஏடிஜிபி அருண், தாம்பரம் ஆணையர் அமல்ராஜ், ஆவடி ஆணையர் சங்கர் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில், ரவுடிகளை கைது செய்வது குறித்து தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டது. அப்போது செங்கல்பட்டு காவல் நிலையத்தில் பழைய குற்றவாளி படுகொலை மற்றும் பாமக பிரமுகர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இந்த கொலை வழக்கு குற்றவாளிகள் தாம்பரம் ஆணையரக பகுதிகளில் வசித்து வருகின்றனர். அவர்கள்தான் செங்கல்பட்டு மாவட்டங்களில் கொலை சம்பவங்களில் கூலிப்படையினராக செயல்பட்டு வருவதும் தெரியவந்தது.

இந்த இரு கொலைகள் நடப்பதற்கு முன்னதாகவே உளவுத்துறை போலீசார், தாம்பரம் ஆணையரகத்திற்கு ரகசிய தகவல் அனுப்பி, கூலிப்படையினரை கைது செய்ய கேட்டுக்கொண்டுள்ளனர். ஆனால், அவர்களை கைது செய்யாதால் இந்த இரு கொலைகளும் நடந்தது தெரியவந்தது. இதுகுறித்து கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டதோடு, மாநிலம் முழுவதும் ரவுடிகள் வேட்டையை தொடர்ந்து நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாகத்தான், தாம்பரம் மாநகர காவல், கூடுவாஞ்சேரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஊரப்பாக்கம் அடுத்த அருங்கால்-காட்டூர் வனப்பகுதியில் உள்ள சாலையில் நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் கூடுவாஞ்சேரி இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் எஸ்.ஐ சிவகுருநாதன் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, அதிவேகமாக வந்த சாம்பல் நிற காரை போலீசார் மடக்கி நிறுத்த முயன்றனர். கார் நிற்காமல் எஸ்.ஐ சிவகுருநாதனை இடிப்பதுபோல் போலீஸ் ஜீப் மீது மோதி நின்றது. அப்போது காரில் இருந்து இறங்கிய 4 பேர் கொண்ட ரவுடி கும்பல் அங்கிருந்த பாறாங்கல்லை தூக்கி போலீஸ் ஜீப்பின் முன்பக்க கண்ணாடியை உடைத்தனர். பிறகு காரில் இருந்த கத்தி, வீச்சரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் போலீசாரை தாக்க முயன்றனர். இதில் எஸ்ஐ சிவகுருநாதனின் இடது கையில் வெட்டு விழுந்தது. தொடர்ந்து, அவரது தலையில் வெட்ட பாய்ந்தனர். இதில் அவர் கீழே குனிந்தபோது அவரது தொப்பியில் வெட்டு விழுந்தது.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த இன்ஸ்பெக்டர் முருகேசன், ரவுடி கும்பலை சேர்ந்த ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதேபோல், எஸ்.ஐ சிவகுருநாதனும் மற்றொரு நபரை சுட்டார். இதில், ஒருவரின் மார்பிலும் ஒரு குண்டும், கால்களில் இரண்டு குண்டும் பாய்ந்தது. மற்றொருவரின் மார்பில் இரண்டு குண்டுகளும், காலில் ஒரு குண்டும் பாய்ந்தது. இதை பார்த்ததும் உடன் வந்த மற்ற 2 பேரும் ஆயுதங்களுடன் தப்பிஓடி விட்டனர். தற்காப்புக்காக போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

போலீசாரிடம் கேட்டபோது, இருவரையும் மீட்டு ஆம்புலன்சில் அழைத்து சென்றபோது, வழியிலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியதாக தெரிவித்தனர். இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் கொடுத்த புகாரின்பேரில் கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில், போலீசார் நடத்திய என் கவுன்டரில் பலியானவர்கள் இருவரும் பிரபல ரவுடிகள் என்பது தெரிய வந்தது. வண்டலூர் அடுத்த மண்ணிவாக்கம் சுவாமி விவேகானந்த நகரை சேர்ந்த வினோத் (எ) சோட்டா வினோத் (36) என்பதும், இவர் ஓட்டேரி காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி. 50க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. 10 கொலை, 15 கொலை முயற்சி, 10 கூட்டு கொள்ளை, வழிப்பறி, அடிதடி மற்றும் மிரட்டி பணம் பறித்தல் வழக்குகள் என மொத்தம் 50 வழக்குகள் ஓட்டேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு காவல் நிலையங்களில் உள்ளது தெரிய வந்தது.

என்கவுன்டர் செய்யப்பட்ட மற்றொருவர், மண்ணிவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட அண்ணாநகர், கருமாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த ரமேஷ் (32). இவர் ஓட்டேரி காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளி. இவர் மீது 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் 5 கொலை, 7 கொலை முயற்சி, 8 அடிதடி மற்றும் மிரட்டி பணம் பறித்தல் வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. 2018ல் மண்ணிவாக்கம் திமுக பிரமுகர் பார்த்திபன், அதே ஆண்டில் சோமங்கலத்தை சேர்ந்த தொழிலதிபர் விஜய், ஆதனூர் அடுத்த மாதம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ஸ்கெட்ச் வெங்கடேசன், நாவலூர் குடியிருப்பில் அப்பா, மகன் ஆகியோரை கொலை செய்த வழக்கும் ரமேஷ் மீது நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது.

இதை தொடர்ந்து, படுகாயமடைந்த எஸ்.ஐ., சிவகுருநாதன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். என்கவுன்டர் செய்யப்பட்ட ரவுடிகளின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. நேற்று அதிகாலையில் போலீசார் நடத்திய என்கவுன்டரில் 2 ரவுடிகள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்து, டிஜிபி சங்கர் ஜிவால், தாம்பரம் மாநகர போலீஸ் ஆணையர் அமல்ராஜ், இணை ஆணையர் மூர்த்தி, துணை ஆணையர் அதிவீரபாண்டியன் ஆகியோர் நேற்று பகல் 12 மணி அளவில் என்கவுன்டர் நடந்த இடத்திற்கு சென்றனர். போலீஸ் ஜீப் மீது ரவுடிகளின் கார் மோதியது, அங்கு 6 துப்பாக்கி தோட்டாக்கள், 2 கத்திகள், ரத்தம் உறைந்த இடத்தையும் பார்வையிட்டனர்.

இந்த என்கவுன்டர் குறித்து போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் கூறும்போது, தப்பி ஓடிய மேலும் இருவரை பிடிக்க பீர்க்கன்காரணை, ஓட்டேரி, மணிமங்கலம், கூடுவாஞ்சேரி ஆகிய காவல் நிலையங்களை சேர்ந்த இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 20 போலீசாருடன் தனி படைகள் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் அவர்களை பிடிக்க உத்தரவிட்டுள்ளேன். என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட இருவரும் கடந்த 29ம் தேதி ஆதனூரை சேர்ந்த தொழிலதிபர் சக்கரபாணியை வெட்டியதில் முக்கிய குற்றவாளிகள். இதில், தொடர்புடைய முக்கிய குற்றவாளியான தீபக் ராஜீயை தேடி வருகிறோம் என்றார்.

* தொழிலதிபர்களை மிரட்டும் ரவுடிகள்
காஞ்சிபுரத்தை சேர்ந்த பிரபல ரவுடி ஸ்ரீதர், படப்பையை சேர்ந்த பிரபல ரவுடி படப்பை குணா ஆகிய இருவரும் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தை கலக்கி வந்தனர். இதில், ஸ்ரீதர் ஏற்கனவே வெளிநாட்டில் தற்கொலை செய்து கொண்டார். படப்பை குணா குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறைக்கு சென்று தற்போது வெளியே வந்துள்ளார். இந்நிலையில், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் படப்பை குணாவுக்கு போட்டியாக அவரிடம் இருந்து பிரிந்த 2 ரவுடிகள் செயல்பட்டு வருகின்றனர். அதில் முக்கியமானவர் சீசிங் ராஜா. மற்றொருவர் சூர்யா. அதில் சூர்யா, தாம்பரம் துணை கமிஷனராக இருந்த சிபிசக்கரவர்த்தியால் கைது செய்யப்பட்டார்.

அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சீசிங் ராஜா தலைமையிலான கும்பல் தற்போது மிகவும் தீவிரமாக உள்ளது. சென்னை புறநகரில் உள்ள ரவுடிகள், தொழிலதிபர்களையும், உள்ளாட்சி பிரமுகர்களையும் குறி வைத்து போனில் மிரட்டி வருவதாக கூறப்படுகிறது. தொடர்ந்து ஒரே போன் நம்பரில் மிரட்டிய நபர் போலீசாரால் என்கவுன்டர் செய்யப்பட்ட மண்ணிவாக்கத்தை சேர்ந்த பிரபல ரவுடி வினோத் என்ற சோட்டா வினோத் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

* மக்கள் மகிழ்ச்சி: ரவுடிகள் கலக்கம்
ரவுடிகள் என்கவுன்டர் செய்யப்பட்டது குறித்து, அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகையில், கடந்த 23 ஆண்டுகளாக வனத்துறையின் முட்டுக் கட்டையால், அறங்கால் – காட்டூர் சாலை சீரமைக்கப்படவில்லை. இதனால், காட்டு பகுதியில் நடந்து செல்லும் பள்ளி மாணவிகள், இளம்பெண்களிடம் ரவுடி கும்பல்கள் அத்துமீறிய செயல்களும் செயின் பறிப்பு போன்றவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இதுபோன்ற ரவுடிகளை போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக் கொலை செய்ததால் நிம்மதி அடைந்துள்ளளோம் என்றனர். ஒரே நாளில் 2 ரவுடிகள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் கூடுவாஞ்சேரி ரவுடிகளின் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

* தொடர்ந்து மாமூல் கேட்டு மிரட்டும் கும்பல்
குன்றத்தூர் ஒன்றியம், கூடுவாஞ்சேரி அடுத்த ஆதனூர் ஊராட்சியில், திமுக விவசாய அணி செயலாளரும், தொழிலதிபருமான சக்கரபாணி என்பவரை கடந்த 21ம் தேதி 7 பேர் கொண்ட ரவுடி கும்பல் மாமூல் கேட்டு கொடுக்க மறுத்ததால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியது. இதில் படுகாயம் அடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மணிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக ஏற்கனவே 4 பேர் அடங்கிய ரவுடி கும்பல் மதுரை நீதிமன்றத்தில் சரண் அடைந்தது. 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நீதிமன்றத்தில் சரணடைந்து சிறையில் உள்ளவர்களை போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரித்த பிறகுதான் உண்மை நிலவரம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்திருந்த நிலையில், ஆதனூர் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்அமுதனுக்கும் போன் செய்துள்ளனர். ஆனால் அவர் எடுக்காததால், ஆத்திரமடைந்த ரவுடி கும்பல் துணை தலைவரின் கணவர் ரவிக்கு அதே போன் நம்பர் மூலம் கடந்த 29ம் தேதி இரவு தொடர்ந்து போன் செய்து உங்க தலைவர் ஏன் போன் செய்தால் எடுக்க மாட்டாரா என்றும், ரவுடி மாமூல் கேட்டும் மிரட்டியதாக கூறப்படுகிறது. அதே ரவுடி கும்பல் ஆதனூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஷீலாராணி பிரபாகரனிடம் மாமூல் கேட்டு நாட்டு வெடிகுண்டுகளுடன் சென்றதாகவும், அவர் அங்கு இல்லாததால் ஆதனூர் தொழிலதிபரான மணவாளன் என்பவருக்கும், இதேபோல் 1வது வார்டு கவுன்சிலர் சுந்தர் ஆகியோருக்கும் போன் மூலம் மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதில் பதறிப்போன ரவி உயிர் பிழைத்தால் போதும், எனக்கு துணை தலைவர் பதவியே வேண்டாம், துணை தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்றும் ஊராட்சி மன்ற தலைவரிடம் முறையிட்டுள்ளார். இதன் எதிரொலியாக ஆதனூர் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்அமுதன் வீட்டுக்கு கடந்த 29ம் தேதி இரவு முதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில் மணிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து போனில் மிரட்டும் ரவுடி கும்பலை பிடிப்பதற்காக தாம்பரம் போலீஸ் துணை கமிஷனர் அதிவீரபாண்டியன் தலைமையில் 5 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

The post எஸ்.ஐ. கையில் வெட்டிவிட்டு தப்ப முயன்ற பிரபல ரவுடிகள் 2 பேர் சுட்டுக்கொலை: கத்தி, வீச்சரிவாள், கார், செல்போன் பறிமுதல்; கூடுவாஞ்சேரி அருகே அதிகாலையில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Kuduvancheri ,CHENNAI ,S.I. ,Guduvanchery ,Dinakaran ,
× RELATED எரிந்த நிலையில் பெண் சடலம்: கொலையா என விசாரணை