×

தாம்பரம் சானடோரியம் பகுதியில் 464 படுக்கை வசதியுடன் அதிநவீன மகளிர் தங்கும் விடுதி கட்டுமான பணி: அமைச்சர் கீதாஜீவன் நேரில் ஆய்வு

தாம்பரம்: தாம்பரம் சானடோரியம் பகுதியில் 464 படுக்கை வசதியுடன் அதிநவீன மகளிர் தங்கும் விடுதி கட்டும் பணிகளை அமைச்சர் கீதாஜீவன் நேரில் ஆய்வு செய்தார். அப்போது, ஓஎம்ஆர் சாலை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய மாநகரங்களில் புதியதாக மகளிர் விடுதிகள் அமைக்கப்படும், என்று தெரிவித்துள்ளார். தாம்பரம் சானடோரியம், ஜட்ஜ் காலனி பகுதியில் அரசு பணிபுரியும் பெண்களுக்காக, ரூ.18 கோடி மதிப்பீட்டில் 464 படுக்கைகள் கொண்ட நவீன வசதியுடன் புதியதாக கட்டப்பட்டு வரும் பெண்களுக்கான விடுதியை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அமைச்சர் கீதா ஜீவன், புதியதாக அமைக்கப்படும் தங்கும் அறைகள், நவீன சமையலறை, யோகா உள்ளிட்ட பல பயன்பாடு அரங்கு, இணையதளம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தனியான கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் மகளிர் திறன் மேம்பாட்டு திட்டத்தில் கம்ப்யூட்டர் மற்றும் தையல் பயிற்சிகள் அளிப்பதற்கான வகுப்புகளை அமைச்சர் கீதாஜீவன் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் கீதாஜீவன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்பேரில், சமுகநலன் மற்றும் மகளிர் உரிமை துறை திறம்பட செயல்படுகிறது. இந்த துறை மூலம், பணிபுரியும் பெண்கள், பயிற்சி வகுப்புகளுக்கு வருபவர்கள், படிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக நகரங்களில் தங்குவதற்கு வசதியாகவும், பாதுகாப்பு அளித்திடும் வகையிலும், மகளிர் தங்கும் விடுதிகள் புதியதாக கட்டப்படுகிறது. மேலும் பழைய விடுதிகளையும் மேம்படுத்தும் பணி செய்து வருகிறோம். அதன் தொடர்ச்சியாக தாம்பரம் சானடோரியம் ரயில் நிலையம் அருகாமையில் அரசு பணிபுரியும் பெண்களுக்கு, ரூ.18 கோடி மதிப்பில் 464 படுக்கைகள் வசதியுடன் அதிநவீன மகளிர் தங்கும் விடுதி அமைக்கப்படுகிறது.

மேலும் இந்த விடுதியில் அதிநவீன வசதிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு கழிப்பிட வசதிகளுடன் அமைத்துள்ளோம். அதன் இறுதிகட்ட பணிகளை பார்வையிட்டுள்ளோம். இந்த விடுதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் திறக்கவுள்ளார். அதுபோல காஞ்சிபுரம் ஐ.டி நிறுவனங்கள் அதிகம் உள்ள ஓஎம்ஆர் சாலை மற்றும் தமிழகத்தின் பல்வேறு முக்கிய மாநகரங்களில் புதியதாக மகளிர் விடுதிகள் அமைக்கப்படும். இதுவரை 2 ஆண்டுகளில் கூடுதலாக 2 ஆயிரம் மகளிர்கள் தங்கும் விதமாக மகளிர் விடுதிகள் அதிகரித்துள்ளது,’’ என்றார். நிகழ்வின்போது சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆணையர் அமுதவல்லி, தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகுமீனா, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், துணை மேயர் கோ.காமராஜ், மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சுரேஷ் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

The post தாம்பரம் சானடோரியம் பகுதியில் 464 படுக்கை வசதியுடன் அதிநவீன மகளிர் தங்கும் விடுதி கட்டுமான பணி: அமைச்சர் கீதாஜீவன் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Tambaram Sanatorium ,Minister ,Geethajeevan ,Tambaram ,
× RELATED தூத்துக்குடி சிவன் கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்