×

நேசம் மனிதவள மேம்பாட்டு மையம் சார்பில் வடசென்னை புத்தக திருவிழா: 6ம் தேதி தொடங்கி 10 நாள் நடக்கிறது

சென்னை: வடசென்னை மக்களின் வாசிக்கும் பழக்கத்தை மேம்படுத்தும் வகையில், நேசம் மனிதவள மேம்பாட்டு மையம் சார்பில் 8ம் ஆண்டு வடசென்னை புத்தக திருவிழா மற்றும் துறைதோறும் சிறந்தோர்க்கு பாராட்டு விழா, சுங்கச்சாவடி பகுதியில் உள்ள தங்கம் மாளிகையில், வரும் 6ம் தேதி தொடங்கி, 15ம் தேதி வரை நடக்கிறது. ‘வாசிப்பை நேசிப்போம்’ என்ற கருத்தை மையப்படுத்தி, நடைபெறும் புத்தக திருவிழாவில், மிகச்சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள், முன்னணி பதிப்பாளர்கள், புத்தக விற்பனையாளர்களின் படைப்புகள் இடம்பெறுகிறது. அமைச்சர் பி.கே.சேகர்பாபு, அரசு கொறடா கோவி.செழியன் விழாவை தொடங்கி வைக்கின்றனர். தா.இளைய அருணா, எம்பிக்கள் கலாநிதி வீராசாமி, நவாஸ்கனி மற்றும் ஜே.ஜே.எபினேசர் எம்எல்ஏ சிறப்பு விருந்தினராக பங்கேற்கின்றனர்.

சுந்தர ஆவுடையப்பன் சிறப்புரையாற்றுகிறார். வி.ஜி.சந்தோசம், ஏ.எம்.விக்கிரமராஜா, வி.கே.டி.பாலன், பலராமன், நடிகர் கே.ராஜன், கே.கணேசன், தி.மு.தனியரசு, யு.கணேசன், க.தேவி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். தினசரி மாலை 3 மணி முதல், இரவு 8 மணி வரையிலும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை புத்தக கண்காட்சி நடக்கிறது. 1000 ரூபாய்க்கு மேல் புத்தகம் வாங்குபவர்களுக்கு நூல் ஆர்வலர் விருது வழங்கப்படும். தினசரி மாலை 6 மணிக்கு கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்கம், பட்டிமன்றம், கவியரங்கம் மற்றும் நூல் வெளியீட்டு விழா நடைபெறும். தினசரி கவிதை, கட்டுரை, ஓவியம், சதுரங்கம், பேச்சுப் போட்டி ஆகியவை நடைபெறுகிறது.

The post நேசம் மனிதவள மேம்பாட்டு மையம் சார்பில் வடசென்னை புத்தக திருவிழா: 6ம் தேதி தொடங்கி 10 நாள் நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : North Chennai Book Festival ,Nesam Human Resource Development Center ,Chennai ,North Chennai ,
× RELATED சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் என கூறி...