×

செங்கல்பட்டில் தாய், சேய் நல கட்டுப்பாட்டு மையம்: கலெக்டர் துவக்கி வைத்தார்

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் தாய், சேய் நல கட்டுப்பாட்டு மையத்தை கலெக்டர் ராகுல்நாத் துவக்கி வைத்தார். செங்கல்பட்டு மாவட்டத்தில் 49 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. மாவட்டத்தில் ஒவ்வொரு வருடமும் சுமார் 37 ஆயிரம் கர்ப்பிணிகள் தங்கள் கர்ப்பத்தை பதிவு செய்கின்றனர். இவர்களில் சுமார் 13 ஆயிரம் கர்ப்பிணி தாய்மார்கள் சிக்கலுள்ள கர்ப்பிணிகள் என்று கண்டறியப்பட்டுள்ளனர். இவர்கள் ஆரம்ப சுகாதார நிலைய குழுவின் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். கர்ப்ப காலத்தில் ஏற்படும் உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இருதய நோய், இரத்த சோகை, தைராய்டு, முந்தைய பிரசவம் சிசேரியன் அறுவை சிகிச்சை போன்ற அதிக கவனம் தேவைப்படும் கர்ப்பிணிகளை கண்டறிந்து அவர்களை தொடர்ந்து கிராம சுகாதார செவிலியர் கண்காணித்து வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் இந்த சிக்கலுள்ள கர்ப்பிணி தாய்மார்களை தொடர்ந்து கண்காணிப்பதற்காக துணை இயக்குநர் அலுவலகத்தில் 24 மணி நேர தாய் சேய் நல கட்டுப்பாட்டு மையத்தினை கலெக்டர் ராகுல்நாத் துவக்கி வைத்தார். இந்த கட்டுப்பாட்டு அறையிலிருந்து தினமும் சிக்கலுள்ள கர்ப்பிணிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்கள் சிகிச்சைக்கு சென்றனரா, தேவைப்படும் பரிசோதனைகள் மேற்கொண்டனரா, மாத்திரைகளை சரிவர உட்கொண்டனரா என்பதை கண்காணிப்பதோடு அவர்களுக்கு தொடர் சிகிச்சைகள் மற்றும் பரிசோதனைகளின் அவசியம் பற்றிய அறிவுரைகள் வழங்கப்படும்.

மேலும், கர்ப்பிணிகளுக்கு ஏதேனும் சந்தேகம், புகார்கள் இருப்பின் இந்த 24 மணி நேர தாய் சேய் நலக்கட்டுப்பாட்டு அறையினை 73396 97545 மற்றும் 72002 10545 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு விவரங்கள் அறியலாம். இவ்வாறு இந்த தாய்சேய் நல மையத்தின் மூலம் மாதம் இருமுறை அதிக கவனம் தேவைப்படும் கர்ப்பிணிகளை தொடர்பு கொண்டு முறையாக மற்றும் பரிசோதனை மேற்கொள்ள ஊக்குவித்தல் மூலம் தாய் மரண விகிதம் குறைக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) பரணிதரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post செங்கல்பட்டில் தாய், சேய் நல கட்டுப்பாட்டு மையம்: கலெக்டர் துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Mother, Child Welfare Control Center ,Chengalpattu ,Collector ,Rahul Nath ,Mother and Child Welfare Control Center ,Dinakaran ,
× RELATED செங்கை அரசு மருத்துவமனையில் மீட்கப்பட்ட குழந்தைக்கு உரிமை கோரலாம்