×

மழையில் நனைந்து வீணானதால் கஞ்சா வழக்கில் 2 பேர் விடுதலை: சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு 

சென்னை: சென்னை வால்டாக்ஸ் சாலையில் கஞ்சா விற்பனை நடப்பதாக கடந்த 2007 அக்டோபர் 25ம் தேதி யானைகவுனி போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து அங்கு தீவிர சோதனையில் ஈடுபட்டபோது கஞ்சா விற்றுக்கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த மலர்மன்னன் (42), கல்யாணபுரத்தை சேர்ந்த முத்து (40), அம்பத்தூரை சேர்ந்த ராஜி (43) ஆகியோரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது, அவர்களிடம் தலா ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவர்களை கைது செய்து, அவர்கள் மீது போதை பொருள் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு போதைப்பொருள் தடுப்பு வழக்குகளுக்கான 2வது கூடுதல் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜெ.ஜூலியட் புஷ்பா முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணை காலத்தில் மலர்மன்னன் இறந்துவிட்டதால் அவர் மீதான வழக்கு முடித்துவைக்கப்பட்டது. முத்து மற்றும் ராஜி மீதான வழக்கு விசாரிக்கப்பட்டது. இருவர் தரப்பில் வழக்கறிஞர் டி.எஸ்.சீனிவாசன் ஆஜராகி, பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா இந்த நீதிமன்றத்திற்கு 53 நாட்களுக்கு பிறகே கொண்டு வரப்பட்டுள்ளது. இது விதிகளுக்கு முரணானது என்று வாதிட்டார். அப்போது அரசு தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர், வழக்கில் சம்பந்தப்பட்ட கஞ்சா கடந்த 2015ல் ஏற்பட்ட பெருமழையால் சேதமுற்று விட்டதாக தற்போதைய விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் தெரிவித்துள்ளதாக நீதிபதியிடம் தெரிவித்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா உரிய காலத்திற்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மழையால் சேதமடைந்துவிட்டதாக அரசு தரப்பு கூறுவதிலிருந்து இந்த வழக்கில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படாததால் முத்து மற்றும் ராஜி ஆகியோரை விடுதலை செய்து இந்த நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே, கஞ்சா மூட்டையை எலி கடித்ததால் ஒருவரை விடுதலை செய்த விவகாரம் ருசிகரமாக பேசப்பட்ட நிலையில் தற்போது கைப்பற்றப்பட்ட கஞ்சா மழையில் நனைந்ததால் விடுதலை என்ற தீர்ப்பு வழக்கறிஞர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

The post மழையில் நனைந்து வீணானதால் கஞ்சா வழக்கில் 2 பேர் விடுதலை: சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு  appeared first on Dinakaran.

Tags : Chennai ,Yanagauni ,Valtax Road, Chennai ,Dinakaran ,
× RELATED கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில்...