×

தடை செய்யப்பட்ட பிஎப்ஐ அமைப்பின் ஆயுத பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு: என்ஐஏ அதிரடி

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் மலப்புரம் அருகே தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பின் ஆயுத பயிற்சி முகாம் கண்டுபிடிக்கப்பட்டது. தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) நேற்று முன்தினம் நள்ளிரவு நடத்திய சோதனையில் இது கண்டுபிடிக்கப்பட்டது. பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பை கடந்த வருடம் ஒன்றிய அரசு தடை செய்தது. இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் இந்த அமைப்புடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டனர். பிஎப்ஐ அமைப்புக்கு சொந்தமான நிறுவனங்கள், கட்டிடங்கள் அனைத்தும் கையகப்படுத்தப்பட்டன. வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டன.

தற்போதும் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, டெல்லி உள்பட பல்வேறு மாநிலங்களில் பிஎப்ஐ அமைப்புக்கு தொடர்புடைய இடங்களில் என்ஐஏ சோதனை நடத்தி வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு என்ஐஏ அதிகாரிகள் கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள மஞ்சேரியில் திடீர் சோதனை நடத்தினர். இதில் அங்குள்ள கிரீன்வேலி அகாடமி என்ற நிறுவனத்தில் நடத்திய சோதனையில் அங்கு பிஎப்ஐ அமைப்பினர் வெடிகுண்டு உள்பட ஆயுத பயிற்சி முகாம் நடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 18 ஏக்கர் பரப்பளவில் அப்பகுதியில் ஏராளமான கட்டிடங்கள் இருந்தன. இங்கு தான் பிஎப்ஐ அமைப்புக்கு தொடர்புடைய பலர் தலைமறைவாக இருந்தனர் என்றும் தெரியவந்தது. அங்குள்ள அனைத்து கட்டிடங்களுக்கும் சீல் வைத்த என்ஐஏ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தடை செய்யப்பட்ட பிஎப்ஐ அமைப்பின் ஆயுத பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு: என்ஐஏ அதிரடி appeared first on Dinakaran.

Tags : PFI ,NIA ,Thiruvananthapuram ,Popular Front of India ,Malappuram, Kerala ,BFI ,Dinakaran ,
× RELATED திருச்சூரில் தண்ணீர் தேடி கிணற்றுக்குள் தவறி விழுந்த யானை உயிரிழப்பு..!!