×

உலக சாதனையுடன் விடைபெற்ற பிராட்!

சிட்னி: ஆஷஸ் தொடரின் 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் தனித்துவமான உலக சாதனையுடன் தனது கிரிக்கெட் வாழ்வை நிறைவு செய்துள்ளார். லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த கடைசி டெஸ்டின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 283 ரன்னும், ஆஸ்திரேலியா 295 ரன்னும் எடுத்தன. இங்கிலாந்து 2வது இன்னிங்சில் 395 ரன் குவித்து ஆல் அவுட்டானது. இதையடுத்து, 384 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா 4ம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 135 ரன் எடுத்திருந்தது. பரபரப்பான கடைசி நாள் ஆட்டத்தில் அந்த அணி 334 ரன்னுக்கு ஆல் அவுட்டாக (94.4 ஓவர்), இங்கிலாந்து 49 ரன் வித்தியாசத்தில் வென்று 2-2 என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது. வார்னர் 60, கவாஜா 72, ஸ்மித் 54, ஹெட் 43, கேரி 28, மர்பி 18 ரன் எடுத்தனர். இங்கிலாந்து பந்துவீச்சில் வோக்ஸ் 4, மொயீன் 3, பிராட் 2, வுட் 1 விக்கெட் வீழ்த்தினர். வோக்ஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார். ஸ்டார்க், வோக்ஸ் இருவரும் தொடர் நாயகன் விருதை பகிர்ந்துகொண்டனர்.

இந்த போட்டியின் 3வது நாள் ஆட்டம் முடிந்ததும், இங்கிலாந்து வேகம் ஸ்டூவர்ட் பிராட் (37 வயது), ‘இந்த டெஸ்டுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போகிறேன்’ என்று திடீரென அறிவித்தார். வழக்கமாக போட்டி தொடங்குவதற்கு முன்பு, போட்டி முடிந்த பிறகு அறிவிப்பார்கள். அப்படி அறிவிப்பவர்களின் கடைசி ஆட்டம் பெரும்பாலும் சொல்லிக் கொள்வது போல் இருப்பதில்லை. சிலர் விதிவிலக்காக இருக்கலாம். ஆனால் ஸ்டூவர்ட் பிராட் தனித்துவமான உலக சாதனையுடன் விடை பெற்றுள்ளார். அவர் ஒரு பேட்ஸ்மேனாக தான் எதிர்கொண்ட கடைசிபந்தில் ‘சிக்சர்’ விளாசி அசத்தியதுடன், பவுலராக வீசிய கடைசி பந்தில் விக்கெட்டையும் வீழ்த்தி இங்கிலாந்து அணிக்கு வெற்றியை பரிசளித்தார். கிரிக்கெட் வரலாற்றில் இது போன்ற சாதனையை எந்த வீரரும் படைத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2006ல் இங்கிலாந்து அணியில் அறிமுகமான பிராட் 167 டெஸ்டில் 604 விக்கெட் (சிறப்பு 8/15) மற்றும் 3,662 ரன் (அதிகம் 169, சராசரி 18.03, சதம் 1, அரை சதம் 13), 121 ஒருநாள் போட்டியில் 178 விக்கெட் மற்றும் 529 ரன், 56 டி20ல் 65 விக்கெட் மற்றும் 118 ரன் எடுத்துள்ளார்.

The post உலக சாதனையுடன் விடைபெற்ற பிராட்! appeared first on Dinakaran.

Tags : Brad ,Sydney ,England ,Ashes ,Dinakaran ,
× RELATED பிஷப்புக்கு கத்தி குத்து: 7 பேர் கைது