×

மது அருந்திய வீடியோவை பகிர்ந்ததால் ஆத்திரம் பாஜ மாவட்ட ஐடி பிரிவு செயலாளரை நடுரோட்டில் தாக்கிய பொதுச்செயலாளர்: டாஸ்மாக்கை மூட சொல்லும் அண்ணாமலைக்கு டப் கொடுக்கும் கட்சியினர்

சென்னை: சென்னை கிழக்கு மாவட்ட பாஜ பொதுச் செயலாளராக இருப்பவர் எஸ்.சுப்பையா. நங்கநல்லூரில் கட்சி அலுவலகம் மற்றும் ஓட்டல் நடத்தி வருகிறார். தனது ஓட்டலில் சுப்பையா மதுபாட்டில்களுடன் அமர்ந்து நண்பருடன் மது மயக்கத்தில் இருப்பது போன்ற வீடியோ சமீபத்தில் சமூக வலைதளங்களில் உலாவந்தன. அதேபோல மேலும் சில வீடியோக்களில் அவர் மதுபிரியர்களுடன் சேர்ந்து முன்டியடித்துக் கொண்டு மது வாங்கிச் செல்வதுபோலவும் வீடியோக்கள் வெளியாகின. பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். கள்ளுக்கடையை திறக்க வேண்டும் என்று இரு நாட்களுக்கு முன்னர் பேட்டி கொடுத்தார். அவர் பேட்டி கொடுத்த சில நிமிடங்களில் இந்த நிர்வாகி மது அருந்துவதுபோல வீடியோ வெளியாகி பாஜவின் உண்மை முகத்தைப் பாரீர் என்று விமர்சனங்களை ஏற்படுத்தின.

இதனை பார்த்த சுப்பையா, மண்டலத் தலைவர் ஜவகர் ஆம்ஸ்ட்ராங் மற்றும் சுப்பையாவின் சகோதரி மகனான முத்தரசன் ஆகியோர் சென்னை கிழக்கு மாவட்ட ஐடி பிரிவு செயலாளர் வி.ராஜேஷ் என்பவரை நேற்று முன்தினம் நங்கநல்லூரில் உள்ள அவரது வீட்டருகே சென்று தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். நாங்கள் மது அருந்துவது போன்ற படம், வீடியோ போன்றவை நீ கொடுத்துதான் வெளிவந்துள்ளது என்று கூறி அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் ராஜேஷ் தப்பி ஓட முயன்றபோது, சட்டையைக் கிழித்து மேலும் சரமாரியாக தாக்கினர். அந்த வழியாக பைக்கில் ரோந்து வந்த போலீஸ்காரரை பார்த்ததும் அவர்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர். இதுகுறித்து ராஜேஷ் பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று அங்குள்ள சிசிடிவி பதிவுகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மது அருந்திய வீடியோவை பகிர்ந்ததால் ஆத்திரம் பாஜ மாவட்ட ஐடி பிரிவு செயலாளரை நடுரோட்டில் தாக்கிய பொதுச்செயலாளர்: டாஸ்மாக்கை மூட சொல்லும் அண்ணாமலைக்கு டப் கொடுக்கும் கட்சியினர் appeared first on Dinakaran.

Tags : Athram Baja district ,IT division ,Annamalai ,Tasmac ,CHENNAI ,S. Subbiah ,General Secretary ,Chennai East District BJP ,Nanganallur ,IT ,
× RELATED வெள்ளம் பாதித்த பகுதியில் பெயருக்கு...