×

வெறுப்பு மோதல்

மே 3ம் தேதி ஆரம்பித்த மணிப்பூர் கலவரம் இன்று வரை பற்றி எரிகிறது. இன்னும் முடிவுக்கு வரவில்லை. குக்கி மற்றும் மெய்டீஸ் இன மோதல் என்று கூறப்பட்டாலும், மணிப்பூர் கலவரத்திற்கு முழு முதற்காரணம் வெறுப்பு அரசியல் தான். அதனால் தான் இன்று வரை கட்டுக்குள் வராமல் தினமும் ஒவ்வொரு வடிவில் வெடித்து பரவி உயிர்பலி வாங்குகிறது. அதை தொடர்ந்து அரியானாவில் ஏற்பட்ட கலவரம், ஜெய்ப்பூர்-மும்பை எக்ஸ்பிரஸ் ரயிலில் 4 பேரை சுட்டுக்கொன்ற ஆர்பிஎப் போலீஸ்காரரின் வெறிச்செயல் ஆகியவை எல்லாம் வெறுப்பு அரசியலால் விளைந்த மோதல்கள்.

மணிப்பூர் கலவரம் இந்தியாவின் இதயத்தை உலுக்கிய ஒன்று. அதனால்தான், ‘மணிப்பூர் மாநிலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு முழுவதும் செயலிழந்துவிட்டது. மணிப்பூர் மக்களை மாநில அரசு காப்பாற்றாவிட்டால் அந்த மக்கள் எங்கேதான் போவார்கள்? மாநிலத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கை காப்பாற்ற மாநில போலீசாரால் முடியவில்லை. சட்டம் மற்றும் ஒழுங்கு என்பது மாநில அரசின் கட்டுப்பாட்டில் முழுமையாக இல்லாமல் போய்விட்டது. வரும் வெள்ளிக்கிழமை மணிப்பூர் மாநில சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றமே கடுமை காட்டி உள்ளது.

மணிப்பூரில் ஆளும் பா.ஜ அரசின் கட்டுப்பாட்டில் சட்டம்- ஒழுங்கு இல்லை என்பது அப்பட்டமான உண்மை. இந்த அளவுக்கு நிலைமை மோசம் அடைய போலீசார் தான் காரணம். போலீசார் கண்டுகொள்ளாமல் இருக்க ஆளும் ஆட்சியாளர்களின் உத்தரவுதான் காரணம் என்றால் மிகையல்ல. அனைத்தும் வெறுப்பு அரசியலின் உச்சம். அதேபோல் தான் ஜெய்ப்பூர்-மும்பை எக்ஸ்பிரஸ் ரயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ்காரர் சேத்தன் சிங் தனது மேல் அதிகாரியான எஸ்ஐ டீக்காராம் மீனாவை துப்பாக்கியால் சுட்டுவிட்டு, அருகில் இருந்த பயணியையும் சுட்டுக்கொன்று விட்டு எந்தவித சலனமும் இல்லாமல் 5 பெட்டிகள் கடந்து சென்று அங்கு ஒருவரை சுட்டுக்கொன்று விட்டு, அதன்பிறகு 2 பெட்டிகள் தாண்டி சென்று இன்னொருவரையும் சுட்டுக்கொன்று இருக்கிறார்.

அதன்பின்னர் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தி தப்பி ஓடியிருக்கிறார். இதில் மிகவும் நிதானமாக மத அடையாள அடிப்படையில் 3 பயணிகளை சுட்டுக்கொன்றதுடன், உபி முதல்வர் யோகி, பிரதமர் மோடிக்கு வாக்களியுங்கள் என்று ரத்தத்தின் மேல் நின்று வாக்கு சேகரிக்கும் ஒரு கொடூரத்தை அரங்கேற்றி இருக்கிறார். இங்கு எந்த இடத்திலும் அவரது மனநிலை பாதிப்பு பதிவாகவில்லை. ஆனால் உச்சக்கட்ட வெறுப்பு இதில் பதிவாகி இருக்கிறது. இன்னொரு சம்பவம் அரியானா மாநிலம் நூஹ் என்ற இடத்தில் நடந்த மத ஊர்வலத்தில் நடந்த வன்முறை. இங்கு 5 பேர் பலியாகி விட்டனர்.

2 ஊர்க்காவல் படை வீரர்கள் எரித்துக்கொல்லப்பட்டனர். குருகிராமில் ஒரு மசூதி எரிக்கப்பட்டது. அங்கு இருந்த இமாம் கொல்லப்பட்டார். கலவரத்தை தடுக்க சென்ற போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. காரணம், ஒரு சமயத்தை சேர்ந்தவர்களால் பரப்பப்பட்ட வெறுப்பு மற்றும் சவால் வீடியோக்கள் தான். அதனால் எழுந்த மோதலால் அரியானா மற்றும் அண்டை மாநிலங்கள் பற்றி எரிகிறது. காஷ்மீர் முன்னாள் கவர்னர் சத்யபால் மாலிக் சொன்னது போன்று, நாடாளுமன்ற தேர்தல் நெருங்க, நெருங்க இதுபோன்ற வெறுப்பு அரசியல் மோதல்கள் உச்சத்தை எட்டும். பொதுமக்கள் தான் அதை பிரித்தறிந்து உணர்ந்து கொள்ள வேண்டும்.

The post வெறுப்பு மோதல் appeared first on Dinakaran.

Tags : Manipur riot ,Cookie ,
× RELATED மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும்...