×

கொரட்டூரில் நில அதிர்வு ஏற்பட்டதாக கூறப்பட்ட வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் அமைச்சர் திடீர் ஆய்வு

அம்பத்தூர்: சென்னை கொரட்டூரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்பட்டு 2019ம் ஆண்டு விற்பனைக்கு வந்தது. இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு குடியிருப்பில் நில அதிர்வு ஏற்பட்டதாக கூறி குடியிருப்பு வாசிகள் 200க்கும் மேற்பட்டோர் வீதிகளில் தஞ்சமடைந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தமிழக முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனிடையே, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சர் முத்துசாமி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன் ஆகியோர் நில அதிர்வு ஏற்பட்டதாக கூறப்படும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் நேற்று மாலை திடீரென ஆய்வு செய்தனர். அப்போது, குடியிருப்பின் நிலஅதிர்வு குறித்து குடியிருப்புவாசிகளிடம் கேட்டறிந்தனர்.

பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் முத்துசாமி கூறியதாவது: கொரட்டூரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் 222 மாடி வீடுகள் கட்டப்பட்டு 2019ம் ஆண்டு பொதுமக்களிடம் ஒப்படைக்கப் பட்டது. இதில் இரு கட்டிடங்கள் இணையும் இடத்தில் விரிசல் ஏற்பட்டதன் காரணமாக மழைநீர் உள்ளே வருகிறது. பக்கவாட்டு பகுதிகளிலும் மழைநீர் உள்ளே வருகிறது. இந்த தகவலை பொது மக்கள் ஒன்றிணைந்து முதலமைச்சருக்கு தெரிவித்துள்ளனர். இதனால் முதல்வர் எங்களிடம் சம்பந்தப்பட்ட இடத்தை பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கும்படி கூறினார். அதன்படி நாங்கள் கொரட்டூர் அடுக்குமாடி குடியிருப்பை பார்வையிட்டுள்ளோம்.

வீடுகளில் ஏற்பட்டுள்ள விரிசல் அனைத்தையும் சரிசெய்து கொடுக்கும்படி பொறியாளர்களிடம் கூறி யுள்ளோம். இந்த பணிகளை வீட்டு வசதி வாரியம் முன்னெடுத்து செய்ய இருக்கிறது. 2வதாக குடிநீர் பிரச்னை பற்றி கூறினார்கள். இதுதொடர்பாக மெட்ரோ வாட்டர் அதிகாரிகளை அணுகி சட்டமன்ற உறுப்பினர் பேசி நடவடிக்கை எடுப்பார். குடிநீர் வழங்குவதில் என்னென்ன பிரச்னை உள்ளது என கண்டறியப்பட்டு களையப்படும். இங்குள்ள 5 கழிவுநீர் கிணறுகள் துர்நாற்றம் வீசுவதாக மக்கள் கூறியுள்ளனர். இதற்கு வேறு ஏதேனும் மாற்றம் செய்ய முடியுமா? என பார்த்து வருகிறோம். அடுக்குமாடி குடியிருப்பில் அதிர்வு ஏற்பட்டதாக கூறுகிறார்கள்.

அதிகாரிகள் சோதனை நடத்தியபோது அதற்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை என கூறுகின்றனர். ஐஐடி அதிகாரிகள் வந்து கட்டிடத்தின் உறுதித்தன்மையை ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஐஐடி அதிகாரிகள் ஏற்கனவே சோதனை செய்தபோது கட்டிடம் கட்டியதில் எந்தவித தவறுமில்லை என அறிக்கை கொடுத்திருக்கிறார்கள். பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் ஒருமுறை அதிகாரிகள் பார்வையிட உள்ளனர். இவ்வாறு
கூறியுள்ளார். ஆய்வின்போது, அம்பத்தூர் எம்எல்ஏ ஜோசப் சாமுவேல், மண்டலக்குழு தலைவர் பி.கே.மூர்த்தி, பகுதி செயலாளர் எம்.டி.ஆர்.நாகராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள், வீட்டு வசதி வாரியத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

The post கொரட்டூரில் நில அதிர்வு ஏற்பட்டதாக கூறப்பட்ட வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் அமைச்சர் திடீர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Korattur ,Ampathur ,Tamil Nadu Housing Board ,Koratur, Chennai ,Dinakaran ,
× RELATED அம்பத்தூர் தொழிற்பேட்டையில் மாநகர...