×

கோவிந்தா… கோவிந்தா… கோஷங்கள் விண்ணதிர; மதுரை அழகர்கோயில் ஆடித்திருவிழா தேரோட்டம்: கோலாகலமாக நடந்தது: பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

அழகர்கோவில்: கோவிந்தா… கோவிந்தா… கோஷங்கள் விண்ணதிர மதுரை அழகர்கோயிலில், ஆடித்திருவிழா தேரோட்டம் இன்று கோலாகலமாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

மதுரை அருகே பிரசித்தி பெற்ற அழகர்கோயில் உள்ளது. 108 வைணவ தலங்களுள் ஒன்றாக திகழ்கிறது. இங்கு சித்திரை மற்றும் ஆடி பெருந்திருவிழா வெகு சிறப்பாக நடக்கும். இந்தாண்டு ஆடி பெருந்திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் இரவு சுவாமி சுந்தரராஜ பெருமாள் அன்னம், கருடன், சிம்மம், அனுமார், சேஷ, மோகினி, யானை, குதிரை ஆகிய வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக நடந்தது. முன்னதாக அதிகாலை அலங்கரிக்கப்பட்ட தேரில் சுந்தரராஜ பெருமாள் தேவியர்கள் சமேதரராக எழுந்தருளினர். காலை 8.20 மணிக்கு மேளதாளம் முழங்க, தீவட்டி பரிவாரங்களுடன், பட்டர்களின் வேத மந்திரங்கள் முழங்க தேரை பொதுமக்கள் வடம் பிடித்து இழுத்தனர். அப்போது கோவிந்தா… கோவிந்தா என கோஷமிட்டனர். கோட்டை வாசலை சுற்றி நான்கு மாடவீதிகளில் அசைந்தாடி வந்த தேர் காலை 10.10 மணிக்கு நிலையை அடைந்தது. இந்த வைபத்தை காண்பதற்காக மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, விருதுநகர் உள்ளிட்ட தென்மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். ஏராளமான பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.

மேலும் நெல் உள்ளிட்ட தானியங்களையும் காணிக்கையாக செலுத்தினர். இரவு பூப்பல்லக்கில் சுவாமி பவனி வருகிறார். 800க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நாளை உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. தேரோட்ட நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், எம்எல்ஏக்கள் வெங்கடேசன், பெரிய புள்ளான், அய்யப்பன், வெள்ளியங்குன்றம் ஜமீன்தார் சண்முகராஜ பாண்டியர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக அழகர்மலை உச்சியில் உள்ள நூபுரகங்கை ராக்காயி அம்மன் கோயிலில் பக்தர்கள் புனித நீராடினர். ஆடி பவுர்ணமியையொட்டி முருகப்பெருமானின் ஆறாவது படைவீடு சோலைமலை முருகன் கோயிலில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி, வித்தக விநாயகர், வேல் சன்னதியில் விசேஷ பூஜை நடைபெற்றது.

இன்று மாலை திருநிலை கதவு திறப்பு: பவுர்ணமியையொட்டி இன்று மாலை, கோயிலின் காவல்தெய்வமான பதினெட்டாம்படி கருப்பணசாமி சன்னதி திருநிலை கதவுகள் திறக்கப்படும். அப்போது படி பூஜை நடைபெறும். இதைத்தொடர்ந்து கதவுகள் சாத்தப்பட்டு சந்தன காப்பு நடைபெறும். ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே நடக்கும் இந்த நிகழ்வை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர்.

The post கோவிந்தா… கோவிந்தா… கோஷங்கள் விண்ணதிர; மதுரை அழகர்கோயில் ஆடித்திருவிழா தேரோட்டம்: கோலாகலமாக நடந்தது: பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர் appeared first on Dinakaran.

Tags : Vinnathira ,Madurai Alaghar ,Temple ,Adi Thirujuzha ,Alaghar ,Madurai Alaghar Temple ,Adi Thirujha procession ,Madurai ,Alaghar Temple ,Adithiru Festival Procession ,
× RELATED ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோயில்...