×

பொள்ளாச்சி அருகே அட்டகாசம் செய்த மக்னா யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது: கிராம மக்கள் நிம்மதி

பொள்ளாச்சி: தர்மபுரி அருகே அட்டகாசம் செய்த மக்னா யானையை, 5 மாதத்திற்கு முன்பு வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பின்னர் அந்த யானை, கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட டாப்சிலிப் வனத்தில் விடப்பட்டது. ஆனால் மக்னா யானை, அங்கிருந்து வெளியேறி ஆனைமலை, பொள்ளாச்சி வழியாக கோவை குனியமுத்தூர் பகுதிக்கு சென்றது. இதையடுத்து மீண்டும் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு, கும்கிகள் உதவியுடன் வால்பாறை அருகே உள்ள மந்திரி மட்டம் பகுதியில் விடப்பட்டது. சில நாட்களிலேயே அங்கிருந்து, டாப்சிலிப் வனத்தையொட்டிய பொள்ளாச்சி வனச்சரகம் தம்பம்பதி மற்றும் சரளபதியில் யானை உலா வந்தது. கிராமத்தில் உள்ள தோட்டங்களில் புகுந்து, தென்னை உள்ளிட்டவைகளை துவம்சம் செய்தது. இதனால் இந்த பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். மக்னா யானையை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என வனத்துறை அதிகாரிகளிடம் அப்பகுதியினர் முறையிட்டனர்.

இந்நிலையில், மக்னா யானை பொள்ளாச்சி வனச்சரகத்திற்குட்பட்ட சரளபதி எல்லையில் தொடர்ந்து சுமார் 3 மாதமாக சுற்றித்திரிந்தது. அந்த யானையை பிடித்து வேறு இடத்தில் கொண்டுவிட நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து டாப்சிலிப்பிலிருந்து சின்னதம்பி, முத்து, ராஜவர்த்தனா என்ற 3 கும்கி யானைகள் சில நாட்களுக்கு முன்பு வரைவழைக்கப்பட்டன. வன சரகர் புகழேந்தி தலைமையில் சுமார் 30க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் தனித்தனி குழுவாக சரளபதியில் முகாமிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மக்னா யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம், வன கால்நடை மருத்துவ குழுவினர் சரளபதி தம்பம்பதி பகுதிக்கு வரவழைக்கப்பட்டனர்.

அப்போது கும்கி மூலம் பல்வேறு கட்டமாக மக்னா யானையை பிடிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டும் அந்த முயற்சி தோல்வியடைந்தது. இதையடுத்து நேற்று அதிகாலை சுமார் 4 மணியளவில், சரளபதியில் சுற்றித்திரிந்த மக்னா யானை மீது மயக்க ஊசி செலுத்தப்பட்டது. சிறிது நேரத்தில் மக்னா யானை மயங்கியது. இதையடுத்து கும்கி கபில்தேவ் உதவியுடன் மக்னா யானை லாரியில் ஏற்றப்பட்டது. அதன்பின் பலத்த பாதுகாப்புடன் வால்பாறை அருகே உள்ள சின்னக்கல்லார் கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: வனத்திலிருந்து வெளியேறி, 3 மாதமாக சரளபதி மற்றும் தம்பம்பதியில் மக்னா யானை சுற்றித்திரிந்தது. தோட்டங்களில் புகுந்து பயிர்களை நாசப்பத்தியதுடன், பகல் இரவு என தொடர்ந்து முகாமிட்டதால் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. தற்போது மக்னா யானை பிடிக்கப்பட்டுள்ளது. இது எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் இந்த யானையை கும்கியாக பழக்க வேண்டும் என்பது பலரின் விருப்பமாக உள்ளது. அப்போதுதான், மீண்டும் கிராமத்திற்குள் புகுவது தவிர்க்கப்படும். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, விரைந்து மக்னா யானையை பிடித்த வனத்துறைக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post பொள்ளாச்சி அருகே அட்டகாசம் செய்த மக்னா யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது: கிராம மக்கள் நிம்மதி appeared first on Dinakaran.

Tags : Pollachi ,Dharmapuri ,Dinakaran ,
× RELATED பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியில்...