×

81 வயது மாடல்!

மார்த்தா ஸ்டீவர்ட்… உலகின் வயதான மாடலாக பிரபல விளையாட்டு ‘ஸ்போர்ட்ஸ் இல்லுஸ்ட்ரேட்டட்’ மாத இதழின் அட்டைப் படத்தில் இடம்பிடித்திருக்கிறார். 81 வயதான மார்த்தா விளையாட்டு நீச்சல் உடையில் அட்டைப் பக்கத்தில் பிரசுரமானதுதான் தாமதம் உலக டிரெண்டிங்கில் டாப் ஆகியிருக்கிறார்.81 வயதில் மாடல் என்பதே ஆச்சர்யம், அதிலும் ஒரு பிரபல அமெரிக்க மாத இதழின் அட்டைப்படத்தில் எனில் இன்னும் ஆச்சர்யம்தானே. அதிலும் இந்த ‘ஸ்போர்ட்ஸ் இல்லுஸ்ட்ரேட்டட்’ மாத இதழ் 1954ம் ஆண்டு முதல் பிரசுரமாகிக் கொண்டிருக்கிறது. யார் இந்த மார்த்தா? என்றால் இவர் ஒரு மாடல் மட்டுமல்ல என விரிகிறது 80 வருட சாதனை சரித்திரங்கள். அமெரிக்காவின் புகழ்பெற்ற வணிகர், எழுத்தாளர் மற்றும் தொலைக்காட்சி ஆளுமை. இது மட்டுமா ‘மார்த்தா ஸ்டீவர்ட் லிவிங் ஓம்னிமீடியாவின் நிறுவனர், வெளியீட்டாளர், பொறுப்பாசிரியர், ஒளிபரப்பு, வணிகம் மற்றும் இ-காமர்ஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய பல்வேறு வணிக முயற்சிகள் மூலம் வெற்றியைக் கண்டவர். அமெரிக்காவின் விற்பனைகளில் கெத்து காட்டிய பல புத்தகங்களை எழுதிய எழுத்தாளர். ‘மார்த்தா ஸ்டீவர்ட் லிவிங்’ என்னும் பத்திரிகையை சொந்தமாக நடத்தி வெளியிட்டார் மற்றும் இரண்டு சிண்டிகேட் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய தொகுப்பாளினி’.

ஸ்டீவர்ட் ImClone பங்கு வர்த்தக வழக்கு தொடர்பான குற்றச் செயல்களில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு 2004ம் ஆண்டு சிறைதண்டனை பெற்றார் மார்த்தா. அவர் ஐந்து மாதங்கள் ஃபெடரல் சிறையில் இருந்து மார்ச் 2005ல் விடுதலை அடைந்தார். இந்த சம்பவம் அவரது ஊடக சாம்ராஜ்யத்தை முடிவுக்குக் கொண்டுவரும் என பல எதிர்தரப்பு நிறுவனங்கள், போட்டி ஊடக உரிமையாளர்கள் நம்பினர். ஆனால் சிறையிலிருந்து திரும்பியவுடனே தனது பாதையை மாற்றினார். 2006 இல் அவரது நிறுவனம் மீண்டும் லாபத்திற்குத் திரும்பியது. ஸ்டீவர்ட் 2011ம் ஆண்டு மார்த்தா ஸ்டீவர்ட் லிவிங் ஓம்னிமீடியாவின் இயக்குநர்கள் குழுவில் மீண்டும் சேர்ந்தார்.

1941ல் எட்வர்ட் கோஸ்டிரா மற்றும் மார்த்தா இருவருக்கும் பிறந்த ஆறு குழந்தைகளில் இரண்டாவது குழந்தையாகப் பிறந்தார். மார்த்தாவின் பெற்றோர் இருவருமே ஆசிரியர்கள். மேலும் குடும்பத்தில் உறுப்பினர்கள் அதிகம் என்பதால் வருமானம் போதவில்லை. மேலும் கிடைக்கும் வருமானத்தில் மூன்று வேளை சாப்பிடவே அவ்வளவு சிரமப்பட்டுள்ளனர். இந்நிலையில்தான் மார்த்தா தனது 10 வயதிருக்கும் போது, நியூயார் யான்கீஸ் பேஸ் பால் அணியின் முன்னணி வீரர்களான மிக்கி, மேன்டில், யோகி பெர்ரா, மற்றும் கில் மெக்டார்ட் வீரர்களின் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும் பராமரிப்பாளராக வேலை செய்தார். அவர்களை பள்ளிக்கு அழைத்துச் செல்வது, வீட்டில் வேண்டிய தேவைகள் செய்வது, உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் அந்த சின்ன வயதிலேயே மார்த்தா பார்க்கத் துவங்கினார். அதில் வருமானம் மூலம் தனது தேவைகள் உடன் மாடலிங்கிற்கான ஆடிஷன் பயணங்கள் என மேற்கொண்டார் அவரது முயற்சியின் விளைவாக 15 வயதில் யுனிலிவர் தொலைக்காட்சி விளம்பரத்தில் தோன்றினார் மார்த்தா.

தொடர்ந்து பல டிவி விளம்பரங்கள், போஸ்டர்கள், பேனர்கள் என மார்த்தாவுக்கு சாத்தியப்பட்டன. அம்மாவிடம் சமையல், பாட்டியிடம் உணவுப் பொருட்கள் பதப்படுத்துதல் என ஒவ்வொன்றாகக் கற்றுக்கொண்டவர் அனைத்தையுமே தொழிலாகவும், பணம் கொடுக்கும் வாய்ப்பாகவுமே கற்றுக்கொண்டார் மார்த்தா. மார்த்தாவின் அப்பா எட்வர்ட் தோட்டக் கலையில் கைதேர்ந்தவர். அதையும் விட்டு வைக்காத மார்த்தா கற்றுக்கொண்டு தனக்குத் தெரிந்த பணக்கார வீட்டுத் தோட்டங்களை பகுதி நேரம் அல்லது மணிக்கணக்கில் சம்பளம் வாங்கிக் கொண்டு செய்து கொடுத்தார்.

வேலைக்கு இடையே பள்ளிப்படிப்பும் முடிந்தது. டிவி ஃபேஷன் மாடலாக தனது வேலையைத் தொடர்ந்துகொண்டிருந்த மார்த்தா அதில் வரும் பணத்தைக் கொண்டு கல்லூரிப் படிப்பையும் முடித்தார். மேற்படிப்பில் என்ன செய்யலாம் என்றபோதுதான் ஆண்ட்ரி ஸ்டீவர்ட்டின் நட்பு ஏற்பட்டது, அவர் மூலம் சட்டம் பயின்றவர். கல்லூரிப் படிப்பு முடிந்தவுடன் ஆண்ட்ரிவை 1961ல் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்புதான் மார்த்தாவின் மாஸ்டர் திட்டங்கள் அரங்கேறின. தனது மாமனாரின் பங்கு வர்த்தக நிறுவனத்தை அவருக்கே சவால் வைக்கும் விதத்தில் நடத்தினார், மேலும் அதை மையமாகக்கொண்டே இரண்டாம் நிறுவனமும் துவங்கினார் மார்த்தா. பல பங்குச்சந்தை வாங்கல்கள், ஏற்றங்கள் என மார்த்தாவின் வாழ்க்கை முழுக்க பணம், பணம் நோக்கிய பயணமாகவே இருந்தது. மேலும் ஆண்ட்ரி மூலம் டச்சு எழுத்தாளர்களின் நட்புகள் கிடைக்க, பத்திரிகை துறையிலும் கால் பதித்தார் மார்த்தா. தொடர்ந்து மீடியா, டிவி, ஊடகம் என முழுமையான ‘மார்த்தா ஸ்டீவர்ட் லிவிங்’ என்னும் மீடியா குரூப் நிறுவனத்தைத் துவங்கினார். இப்படி தனது 81 வயதான இப்போது வரையிலும் கூட மார்த்தா ஓய்ந்தபாடில்லை. இதோ 80 வயதில் மார்த்தா கொடுத்த மாடல் போஸ் இப்போது வைரல் டிரெண்ட். ஸ்போர்ட்ஸ் இல்லுஸ்ட்ரேட்டட்’ இதழின் பொறுப்பாசிரியர் எம்.ஜே. டே மார்த்தா குறித்து கூறுகையில் ‘ எக்காலத்திலும் மார்த்தா ஒரு ஸ்டெப் முன்னால் இருப்பார். தொழில் உலகின் மார்த்தா ஒரு பேரரசிதான்’ என்கிறார் ஆச்சர்யத்துடன்.

– ஷாலினி நியூட்டன்

The post 81 வயது மாடல்! appeared first on Dinakaran.

Tags : Martha Stewart ,Dinakaran ,
× RELATED இணைப்புப் பாலமாக செயல்படும்...