×

முதுமலையில் பசுமை திரும்பியது பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கும் விலங்குகள்

கூடலூர்: முதுமலை வனப்பகுதியில் பசுமை திரும்பிய நிலையில், விலங்குகள் சாலையோரம் நடமாடி சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தளித்து வருகிறது. நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிகளில் பருவமழையின் தாக்கம் காரணமாக வனப்பகுதிகள் பசுமை அடைந்துள்ளன. கூடலூர் மைசூர் சாலை, தெப்பக்காடு மசினகுடி சாலை ஓரங்களில் உள்ள புல்வெளிகளில் மான்கள், காட்டெருமைகள், யானைகள் இரை தேடி மேயும் காட்சிகள் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தளித்து வருகின்றன. முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காட்டிற்கு வார விடுமுறை நாட்களில் கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் தொடர்ச்சியாக வந்து செல்கின்றனர்.

வனப்பகுதியின் உள்ளே வாகன சவாரி செல்லும் சுற்றுலா பயணிகளும் ஏராளமான வன விலங்குகளை பார்த்து ரசிக்கின்றனர். சாலை ஓரங்களில் மேயும் காட்டு யானைகள், மான் கூட்டங்களை படம் பிடிக்கும் ஆர்வத்தில் சுற்றுலா பயணிகள் ஆபத்தில் சிக்குவதை தவிர்க்கும் வகையில் இந்த சாலைகளில் வாகனங்களை நிறுத்தவோ, வாகனங்களில் இருந்து இறங்கவோ வனத்துறையினர் அனுமதிப்பதில்லை. இதற்காக தனி குழுவினர் ரோந்து பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், முதுமலை வனப்பகுதியில் சாலை ஓரத்தில் மேயும் காட்டு யானை ஒன்று சாலையில் நிற்கும் வாகனங்களை துரத்த தயாரான காட்சியும், பசுமையான புல்வெளிகளில் மேயும் மான் கூட்டமும் பயணிகளை குதூகலத்தில் ஆழ்த்தியது.

The post முதுமலையில் பசுமை திரும்பியது பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கும் விலங்குகள் appeared first on Dinakaran.

Tags : Mudumalai ,Cuddalore ,Mudumalai forest ,Muthumalai ,
× RELATED முதுமலை வனப்பகுதியில் இன்று முதல் 25ஆம் தேதி வரை யானைகள் கணக்கெடுப்பு